தொழிற்சாலைகளாகும் சிறைச் சாலைகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறை சாலைகள், தொழிற்கூடங்களாக மலர்ச்சியடைந்து வருகின்றன. ஓர் ஆண்டில் ரூ. 4 கோடி மதிப்பிலான பொருள்களை கைதிகள் உற்பத்தி செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்ட


சென்னை: தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறை சாலைகள், தொழிற்கூடங்களாக மலர்ச்சியடைந்து வருகின்றன. ஓர் ஆண்டில் ரூ. 4 கோடி மதிப்பிலான பொருள்களை கைதிகள் உற்பத்தி செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் புழல், திருச்சி, வேலூர், மதுரை, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்தியச் சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் சுமார் 14 ஆயிரம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சிறைக்குள் சிறு தொழில்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் கைதிகள் பணம் ஈட்டுவதுடன், அவர்களுக்குப் புதிய தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்கள் சிறையை விட்டு வெளியே செல்லும்போது, புதிய தொழில்கள் தொடங்குவதற்குரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. கைதிகள், சிறைக்குள் பிரச்னையில் ஈடுபடுவதும் தடுக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக சிறையில் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. நெசவு, துணி தைத்தல், புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல்,ரொட்டி செய்தல், பினாயில் தயாரிப்பு, அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி தயாரிப்பு, சீருடை தயாரிப்பு, பாத்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழில்கள் மத்தியச் சிறைகளில் உள்ளன.
இதில் கைத்தறி, விசைத்தறி, பேண்டேஜ் துணி செய்தல், துணி தைத்தல், கோப்புகள் அட்டை தயாரித்தல் ஆகியவை அனைத்து மத்தியச் சிறைகளிலும் நடக்கின்றன. கடந்த 2010-2011 ஆண்டு ரூ. 3 கோடியே 89 லட்சத்து 53ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 4.80 கோடி வரை பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகச் சிறைத்துறை தெரிவிக்கிறது. இது 20 சதவிகித உயர்வாகும்.
கோயம்புத்தூர் மத்தியச் சிறையே உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இங்கு கடந்த ஆண்டு ரூ. 1.57 கோடி மதிப்புள்ள பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 1.75 கோடியாக உற்பத்தி உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ரூ1.03 கோடி உற்பத்தி இருந்தது. இந்த ஆண்டு மேலும் அதிகரித்து ரூ. 1.07 கோடிக்கு உற்பத்தியாகி உள்ளது. கோயம்புத்தூர், மதுரை மத்தியச் சிறைகளில் நெசவு, துணி தைத்தல், புத்தகம் பைண்டிங், அட்டை தயாரித்தல் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன.
குறிப்பிட்ட தொழில்கள் சில சிறைகளில் மட்டுமே உள்ளன. பாத்திரம் தயாரிப்பது சேலம் மத்தியச் சிறையிலும், ரொட்டி தயாரிப்பது புழல் சிறையிலும், காலணி தயாரிப்பது வேலூர் சிறையில் மட்டுமே நடைபெறுகின்றன. இந்தத் தொழில்களை செயல்படுத்த எளிதான வாய்ப்புகள் அங்கு இருப்பதால், அவை சிறப்பாக நடைபெறுவதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
சிறையில் இருக்கும் மொத்தத் கைதிகளில் 80 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதம் வரையிலான கைதிகள், ஏதாவது ஒரு தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்து முழுத்திறன், பகுதி திறன், தகுதியில்லாமல் வேலை செய்தோர் என 3 வகையான ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முழுத்திறன் உள்ளோருக்கு ரூ. 100, பகுதித் திறன் உள்ளோருக்கு ரூ. 80, தகுதியில்லாமல் வேலை செய்தோருக்கு ரூ. 60 என ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில் கைதிகளுக்கு ஊதியமாக மட்டும் ரூ.66.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை ரூ. 73.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நல்ல வேலை செய்தால் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு செய்யப்படுகிறது. நல்ல ஒழுக்கத்துடன் வேலை செய்தால் மாதத்துக்கு 2 நாள்களும், வேலையில் முழு ஈடுபட்டோடு இருந்தால் 2 நாள்களும் மொத்த தண்டனை நாள்களில் குறைக்கப்படுகின்றன. இதனால் கைதிகள் உற்சாகமாக வேலை செய்வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைதிகளை இன்னும் ஆர்வத்துடன் வேலைகளில் ஈடுபட வைக்க, சிறைத்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய தொழில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.
தண்டனைக் குறைப்பு
சிறைகளில் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடும் கைதிகளுக்கு ஆண்டுக்கு 48 நாள்கள் வரை தண்டனை குறைக்கப்படுகிறது. இந்தத் தண்டனை குறைப்பு நல்ல ஒழுக்கம், பணியில் ஆர்வம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மொத்தக் கைதிகளில் 50 சதவிகித்தில் இருந்து 60 சதவிகிதம் பேர் வரை தண்டனை குறைப்பு மூலம் பயன் பெறுகின்றனர் என்று சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடுங்காவல் தண்டனை பெற்றவர்களே கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், கைதிகளின் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைகள் வழங்கப்படுகின்றன. சிறையில் இருக்கும்போது கைதிகளுக்கு பணம் வழங்கக் கூடாது என உத்தரவு இருப்பதால், அவர்கள் விருப்பதின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு பணம் அனுப்பி வைக்கப்படுகிறது அல்லது சிறையை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...