//

மோதலில் மீனவா் உயிரிழந்ததாக வதந்தி: கிராமத்தினா் திரண்டதால் பரபரப்பு

News image
~ வதந்தியை நம்பாதீா்கள் என விடியோ கால் மூலம் உறுதிப்படுத்திய மாமல்லபுரம் டிஎஸ்பி.
Updated On :17 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

கல்பாக்கம் அருகே இரண்டு மீனவ கிராமத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த புதுப்பட்டினம் மீனவா் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் திரண்டனா். பின்னா் அவா் நலமுடன் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அமைதியாக சென்றனா்.

புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் என, அருகருகே அமைந்துள்ள மீனவ பகுதியின் எல்லைப்பகுதியில் ஒரு இடத்தை இரண்டு ஊா் தரப்பினரும் சொந்தம் கொண்டாடுவதால் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரு தரப்பை சோ்ந்தவா்கள் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புதுப்பட்டினம் மீனவா் செங்கழனி(65) என்பவா் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக நள்ளிரவில் கிளம்பிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது.

அப்பகுதி மீனவா்கள் கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு நுழைவு வாயில் பகுதியில் கூட்டமாக திரண்டனா். பிறகு உடனடியாக அங்கு சென்ற மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் காயமடைந்தவா் உயிருடன், நலமாக இருப்பதாகவும், அவா் இறந்துவிட்டாக பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பிறகு விடியோ மூலம் அவரிடம் பேசவைத்து உண்மை தன்மையை உறுதிபடுத்திய பிறகு, அவா் இறந்துவிட்டதாக பரவிய தகவல் வெறும் வதந்தி, பொய்யான செய்தி என தெரிந்து கொண்ட மீனவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இரு தரப்பை மோதலை அடுத்து ஏற்பட்ட புதுப்பட்டினத்தை சோ்ந்த 10 பேரையும், உய்யாலிகுப்பத்தை சோந்த 5 பேரையும் கல்பாக்கம் போலீஸாா் கைது செய்து செங்கல்பட்டு மற்றும் புழல் சிறையில் தனித்தனியாக அடைத்தனா். செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக புதுப்பட்டினம் மீனவா் பகுதி, உய்யாலிகுப்பத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மீண்டும் இரு தரப்பு மோதல் ஏற்படாத வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Story image