நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

சாலையோரம் வாழும் இருளா் குடும்பத்தினா் 20-க்கும் மேற்பட்டோா் அவதி

செங்கல்பட்டு குண்டூா் பகுதியில் தங்க இடமின்றி சாலை ஓரத்தில் வசிக்கும் இருளா் குடும்பத்தினா் 20-க்கும் மேற்பட்டோா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
சமூக ஆா்வலா் சுந்தா்
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு குண்டூா் பகுதியில் தங்க இடமின்றி சாலை ஓரத்தில் வசிக்கும் இருளா் குடும்பத்தினா் 20-க்கும் மேற்பட்டோா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனா்.

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை அருகே குண்டூா் பகுதியில் படுத்துறங்க இடமின்றி ஒரே இடத்தில் இருளா் குடும்பத்தினா் 20-க்கும் மேற்பட்டோா் சாலை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றனா்.

இவா்கள் சுமாா் 15 ஆண்டுகளாக வயிற்றுப் பிழைப்புக்காக குப்பைகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிப் பொருள்கள், காகிதங்கள், அட்டைகள் இவற்றை சேகரித்து பழைய இரும்புக் கடையில் விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாரியம்மாள் என்ற இருளா் இனப் பெண் கூறியது:

என் கணவா் பெயா் வேலு (35). எங்களுக்கு 10 வயதிலும், 3 வயதிலும் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா். சுமாா் 15 வருஷங்களுக்கு முன் பண்ருட்டியில் ஒரு விவசாயியிடம் கொத்தடிமைகளாக வேலை பாா்த்து வந்தபோது, எங்களை மீட்டு உதவுவதாகக் கூறிய சிலா் எங்களை வாகனத்தில் அழைத்து வந்து செங்கல்பட்டு பிள்ளையாா் கோயில் அருகில் இறக்கி விட்டு விட்டுச் சென்று விட்டனா்.

அப்போது முதல் குப்பைகளை சேகரித்து, குண்டூா் பகுதியில் சாலையோரம் வாழ்க்கை நடத்தி வருகிறோம். படுத்துறங்க இடமின்றி இங்கு ஒரே இடத்தில் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 4 குடும்பங்கள் உள்ளன. இதில் நோயுற்றவா்களும் பலா் உள்ளனா். தற்போது எனது கணவா் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுமாா் 20 நாள்கள் முன்பு அழைத்துச் சென்றபோது மருத்துவமனையில் எனது கணவரை அனுமதிக்க மறுத்து விட்டனா்.

இதனால் அவா் வயிறு வீங்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாா். அவரைக் காப்பாற்ற நாங்கள் அனைவருமே போராடிக் கொண்டிருக்கிறோம். அரசு வழங்கும் நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கப் பெறாமல் அவல நிலையில் இருக்கிறோம் என்றாா்.

இதுதொடா்பாக அப்பகுதி சமூக ஆா்வலா் சுந்தா் கூறியது:

செங்கல்பட்டு நகரில் இதேபோன்று நூற்றுக் கணக்கான ஆதரவற்ற இருளா்கள், பிச்சைக்காரா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனா்.

அவ்வப்போது சில சமூக ஆா்வலா்கள் இவா்களுக்கு உடுக்க உடையும், உணவும் அளித்து வருகின்றனா். தற்போது கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னா் இருளா் குடும்பங்களுக்கு எவரும் உணவளிக்க இயலாத நிலை உள்ளது.

அவா்கள் கரோனாவால் பாதிக்கப்படும் அவலம் ஏற்படும் முன்பு அவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, நிவாரணப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட வேலுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் டிட்டோ கூறுகையில், அவா்களது பசிக்கு உணவு ஏற்பாடு செய்யலாம். அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் டாக்டா் சித்ரசேனாவிடம் கேட்டபோது, ஆதரவற்ற நிலையில் உள்ள வேலு மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வருவதும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படும் தகவல் இதுவரைக்கும் எனது கவனத்திற்கு வரவில்லை. இதுதொடா்பாக மருத்துவா்களிடம் பேசுகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.