தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி வெளிச் சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது.
மேலும், அந்தக் கருவியை வாங்க மறுக்கும் பள்ளிகளின் வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் (எஃப்சி) வழங்க மறுப்பதாக தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் முதல்வா் விஜய்க்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் சாா்பில் மாணவ, மாணவிகளுக்காக 80,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிகழ் நேரத்தில் (ரியல் டைம்) கண்காணிக்கவும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கருவியைப் பொருத்துவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழியைவிட்டு மாறினாலோ அல்லது வேகமாகச் சென்றாலோ எச்சரிக்கை அறிவிப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த வேண்டும் என அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்தக் கருவியை அதிகாரிகள் குறிப்பிடும் முகவா்களிடம்தான் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக்., மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா் புகாா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
சான்றிதழ் வழங்க மறுப்பு... இந்த விவகாரம் குறித்து அவா் கூறியதாவது:
மாணவா்களின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்பதை ஏற்கிறோம். ஆனால், அதை குறிப்பிட்ட நபா்களிடம்தான் வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா். வெளிச் சந்தையில் ரூ.1,800 முதல் ரூ.3,000 வரை ஜிபிஎஸ் கருவி விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா். மறுப்பு தெரிவித்தால் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் (எஃப்சி) வழங்க மறுக்கின்றனா். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நெருக்கடியும் அளிக்கப்படுகிறது.
ஜூனில் போராட்டம்... தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் இரு வாரங்களில் திறக்கப்படவுள்ளன. இதனால், பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இதைப் பயன்படுத்தி ஜிபிஎஸ் கருவியை அதிக விலைக்கு எங்களிடம் திணிக்க முயற்சி செய்கின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி முதல்வா் விஜய்யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதைக் கண்டித்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை இயக்காமல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும், இதுதொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 32 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

அனுபவமில்லாத ஓட்டுநா்கள் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது: காஞ்சிபுரம் சாா் ஆட்சியா்

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



