டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அதிகரிக்கும் சில்லறை தட்டுப்பாடு: பிளேடாகும் நாணயங்கள்...

பிளேடுகள் தயாரிப்பதற்காக சென்னையில் சிறு வியாபாரிகளிடமும், மார்க்கெட்டுகளிலும் நாணயங்கள் மொத்தமாக வாங்கிச் செல்லப்படுவதால்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:07 pm

கே.வாசுதேவன்

பிளேடுகள் தயாரிப்பதற்காக சென்னையில் சிறு வியாபாரிகளிடமும், மார்க்கெட்டுகளிலும் நாணயங்கள் மொத்தமாக வாங்கிச் செல்லப்படுவதால், சில்லறை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் அண்மைக்காலமாக ரூ. 1, ரூ. 2, ரூ.5 ஆகிய நாணயங்களில் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேவேளையில் இந்த நாணயங்களை சிலர் அதிக விலை கொடுத்து சிறு வியாபாரிகளிடமும், மார்க்கெட் பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடமும் வாங்கிச் செல்கின்றனர். இதன் விளைவாக மறைமுகமாக மக்களிடமிருந்து நாணயங்களின் பயன்பாடு குறைந்து, தட்டுப்பாடு ஏற்படுகிறது. நூறு ரூ. 1 நாணயங்கள் ரூ. 200 க்கு வாங்கப்படுகிறது. ரூ. 2, ரூ. 5 நாணயங்களும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. இந்த நாணயங்களில் உள்ள ஒரு வகை உலோகம் பிளேடு தயாரிக்கப் பயன்படுகிறது என்பதால் அந்த நாணயங்கள் வாங்கப்படுகின்றன.

பல மடங்கு லாபம்: ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றிலிருந்து 5ல் இருந்து 7 பிளேடுகளும், ஐந்து ரூபாய் நாணயத்தில் இருந்து 4 -ல் இருந்து 6 பிளேடுகளும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிளேடு தயாரிப்பதற்காக மூலப் பொருள்களை வாங்கும் விலையை விட, நாணயங்களைப் பயன்படுத்தினால் குறைவான முதலீடு என்பதுடன், அதிக லாபமும் கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரு நாணயத்தை வாங்கி அதை பிளேடாக்குவதற்கு ரூ. 5 வரை செலவு செய்யும் நிறுவனம், அந்த நாணயத்தில் கிடைக்கும் பிளேடுகளை ரூ. 15 வரை விற்பனை செய்கிறது. இதில் ஒரு பிளேடு ரூ. 2.50 க்கு விற்கிறது. இதன் மூலம் அந்த பிளேடு நிறுவனங்கள் பல மடங்கு லாபத்தை ஈட்டுகின்றன.

இந்த மோசடியைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளேடு தயாரிக்கும் உலோகங்கள் இல்லாத வகையில் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

ஆனால் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்ட பின்னரும், பழைய நாணயங்களை இந்த கும்பல் வியாபாரிகளிடமிருந்து மொத்தமாக வாங்குவதை விடவில்லை. சில நேரங்களில் காவல்துறை, நாணயங்களை வியாபாரிகளிடமிருந்து மொத்தமாக வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், பிளேடு தயாரிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது கிடையாது.

தேவை கடும் நடவடிக்கை: பெங்களூர் மற்றும் தமிழகத்தில் இயங்கும் பிளேடு தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது பகிரங்கமாக நாணயங்களை வாங்கி, பிளேடு தாயாரிக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் கிராமப் பகுதிகளில் கைவரிசையை காட்டி வந்த இந்த நிறுவனங்கள், இப்போது சென்னை போன்ற பெருநகரங்களிலும் தரகர்கள் மூலமாக நாணயங்களை வாங்குவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். செயற்கையான நாணய தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காத வரையில், இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என சில வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

"பிச்சைக்காரர்களையும் விடவில்லை'

பிளேடு தயாரிப்பதற்காக நாணயங்கள் வாங்கப்படும் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்தாலும், இப்போது பிச்சைக்காரர்களிடமிருந்து கூட பிளேடு நிறுவனங்கள் நாணயங்களை வாங்குகின்றன.

சென்னையில் பிச்சைக்காரர்களை இந்த பிளேடு நிறுவனங்களின் தரகர்கள் தொடர்பு கொண்டு வாரந்தோறும் நாணயங்களை வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

இதேபோல தனியார் கோயில் பூசாரிகள், நிர்வாகிகளிடமும் இவர்கள் நாணயங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நூறு ஒரு ரூபாய் நாணயத்தை ரூ.110 வாங்கிய பிளேடு நிறுவனங்கள் இப்போது ரூ.200-க்கு வாங்குகின்றனவாம். இதனால் சாலையோர வியாபாரிகளும், பிச்சைக்காரர்களும் பிளேடு நிறுவனங்களிடம் நாணயங்களை விற்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.