இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

குமாரசாமியின் அரசியல் தந்திரம் ஆட்சியைக் காப்பாற்றுமா?

ஆட்சியைக் கைப்பற்ற தனது சமுதாய மக்களை ஆதரவுதிரட்டி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும்

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:54 am

ந.முத்துமணி

ஆட்சியைக் கைப்பற்ற தனது சமுதாய மக்களை ஆதரவுதிரட்டி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் அரசியல் தந்திரத்தை கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கையாண்டதை தற்போது முதல்வர் குமாரசாமியும் கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால்,  யாருக்கு வெற்றி? ஆட்சியைக் காப்பாற்ற இந்த தந்திரம் உதவுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1956-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலமாக உருவானது முதல் கர்நாடகத்தின் அரசியலைக் கட்டுப்படுத்தி வருவதோடு, ஆதிக்கம் செலுத்தி வருவது லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும்தான். கர்நாடகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர்களும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்தினர் 30 சதவீதம் பேர் உள்ளனர்.
இதில் லிங்காயத்துகள் அதிகபட்சமாக 16-18 சதவீதமும், ஒக்கலிகர் சமுதாயத்தினர் 12-13 சதவீதமாகவும் வசிக்கின்றனர். கர்நாடக மாநிலம் தோற்றம் கண்டது முதல் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்தினரிடையே தான் பதவிச்சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மதச் சார்பற்ற ஜனதா 
தளம், பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியை வழிநடத்தும், ஆட்சி நடத்தும் இடத்தை லிங்காயத்துகள் அல்லது ஒக்கலிகர்கள்தான் ஆக்கிரமித்திருப்பார்கள். 
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 70 ஆண்டுகால கர்நாடக அரசியலில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்களின் பங்களிப்புதான் அதிகம் என்று கூறலாம். இதன்விளைவாக, பெரிய சமுதாயமாக விளங்கும் தாழ்த்தப்பட்டோர், குருபர்களால் ஆட்சியை கைப்பற்றுவது குதிரைகொம்பாக இருந்துள்ளது. இதில் விதிவிலக்காக, அரசியல் சூழ்நிலை காரணமாக முதல்வரானவர் குருபர் ஜாதியைச் சேர்ந்த சித்தராமையா மட்டுமே. 
கடந்த 30 ஆண்டுகால கர்நாடக அரசியல் வரலாற்றை கவனத்தில் லிங்காயத்து, ஒக்கலிகர் சமுதாயங்களை சேராத மாற்று சமுதாயத்தினரான ஆர்.குண்டுராவ், ராமகிருஷ்ணஹெக்டே, எஸ்.பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தரம் சிங் ஆகியோர் ஆட்சியில் நிலைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர்.
ஒக்கலிகர், லிங்காயத்துகளின் ஆதரவு இல்லாமல் மாற்று சமுதாயத்தினர் எவரும் முதல்வர் பதவியை அலங்கரிக்க முடிந்ததில்லை என்பது கர்நாடக அரசியலை அறிந்தவர்களுக்கு புலப்படும் உண்மையாகும். அதேபோல, லிங்காயத்து சமுதாயத்தினர் முதல்வர்களாகப் பதவியேற்றபோது ஒக்கலிகர்களும், ஒக்கலிகர் சமுதாயத்தினர் முதல்வர்களாகப் பதவியேற்றபோது லிங்காயத்துகளும் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்துவந்துள்ளதையும் வரலாற்று ஏடுகளில் காணலாம். 
லிங்காயத்து, ஒக்கலிகர் சமுதாயங்களைச் சேராதவரான, மராத்தி ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த தரம்சிங் தலைமையில் காங்கிரஸ்-மஜதகூட்டணி அரசு உருவானபோது, ஆட்சி நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை செய்துவந்தவர் ஒக்கலிகரான முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா. 2 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்திருந்த நிலையில், அந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, 2006-இல் மஜதவின் ஒக்கலிகரான எச்.டி.குமாரசாமியும், பாஜகவின் லிங்காயத்தான் எடியூரப்பாவும் இணைந்து மஜத-பாஜக கூட்டணியை உருவாக்கி, ஆட்சி அமைத்தனர். அப்போது முதல்வராக குமாரசாமியும், துணைமுதல்வராக எடியூரப்பாவும் ஆளுக்கு 20 மாத ஆட்சி என்ற ஒப்பந்தத்தின்பேரில் ஆட்சி புரிந்தனர். 
2007-ஆம் ஆண்டு அக்டோபரில் முதல்வராக 20 மாதங்களை நிறைவுசெய்த குமாரசாமி, அடுத்த 20 மாத ஆட்சியை எடியூரப்பாவுக்கு விட்டுக்கொடுக்கத் தவறிவிட்டார். இதைசமயோசிதமாக பயன்படுத்திக் கொண்ட எடியூரப்பா, லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த தன்னை ஒக்கலிகர்கள் ஆட்சி நடத்த அனுமதிக்க மறுப்பதாக பிரசாரம் செய்தார். இதன்விளைவாக, 2008-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிபாகுபாடு இல்லாமல் அனைத்து லிங்காயத்து சமுதாயத்தினரும் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவுக்கு வாக்களித்து, ஆட்சியில் அமரவைத்தனர். 
இவருக்கு எதிராக பாஜகவை சேர்ந்த லிங்காயத்துகள் வேலைசெய்ய தொடங்கினர். இதனால் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவிவகிக்க முடியாத எடியூரப்பா முதல்வர் பதவியை துறக்க, ஒக்கலிகரான சதானந்த கெளடா முதல்வரானார். இவருக்கு பாஜகவை சேர்ந்த லிங்காயத்துகள் குடைச்சல் கொடுக்க, அவரும் முதல்வர் பதவியில் இருந்து விலக, லிங்காயத்து சமுதாயத்தவரான ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார். 
அதைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திமுடித்த சித்தராமையா, நல்லாட்சி வழங்கியபோதும் காங்கிரஸ் வென்றால் அவர் மீண்டும் முதல்வராகக்கூடும் என்பதால், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸை லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் இணைந்து தோற்கடித்தனர். சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவே தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டார். 
தற்போதைய சட்டப்பேரவையில் முதல்வராக குமாரசாமியும், எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பாவும் இருக்கிறார்கள். ஒக்கலிகரான குமாரசாமியை முதல்வராக நீடிக்கவிடக் கூடாது என்பதில் லிங்காயத்தான் எடியூரப்பா ஆர்வம் காட்டிவருகிறார். இது குமாரசாமிக்கும், எடியூரப்பாவுக்குமான பதவிச்சண்டை அல்ல, ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கான அரசியல் ஆதிக்க பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லிங்காயத்தான தன்னை முதல்வராக முடியாமல் குமாரசாமி துரோகம் இழைத்துவிட்டதாக எடியூரப்பா பிரசாரம் செய்து, அவரது சமுதாயத்தினரின் வாக்குகளை பெற்று வெற்றிவாகைச்சூடினார். அதேபாணியை அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் கடைப்பிடிக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்த போதும், ஒக்கலிகரான தன்னை முதல்வராக நீடிக்கவிடாமல், ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா தொடர்ந்து முயற்சித்து வருவதன் மூலம் ஒக்கலிகர்களுக்கு மோசம் செய்வதாக பிரசாரம் செய்து, ஒக்கலிகர்களின் வாக்குகளை கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்றுதிரட்டி வெற்றிகளை குவிக்க திட்டமிட்டுள்ளார். 
ஒருபக்கம் மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளைக் கேட்கும் முதல்வர் குமாரசாமி, மறுபக்கம் பாஜகவின் குறிப்பாக அதன் மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் நற்பெயரை கெடுத்து ஒக்கலிகர்களை உசுப்பிவிடும் வேலையில் இறங்கியிருக்கிறார். பாஜகவில் உள்ள ஒக்கலிகர்களை ஆட்டுவித்து, மஜதவின் ஒக்கலிகர் ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்டுள்ள பாஜகவின் முயற்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முதல்வர் குமாரசாமி அனைத்துமுயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பா, பாஜக மீது ஒக்கலிகர் சமுதாயத்தினரும், மடாதிபதிகளும் அதிருப்தி அடைந்துள்ளதும் மக்களவைத் தேர்தலில் மஜதவுக்கு சாதகமாக அமைய என்று முதல்வர் குமாரசாமி கணக்குப்போடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.