ஆட்சிக் கனியைப் பறிக்கப்போகும் கட்சி எது?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே மட்டுமல்ல, பொதுமக்களிடையே முக்கிய விவாதமாகியுள்ளது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே மட்டுமல்ல, பொதுமக்களிடையே முக்கிய விவாதமாகியுள்ளது.
2017-இல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, இந்தியா மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் சட்டப்பேரவைத் தேர்தலாக கர்நாடகம் மாறியுள்ளது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடுவதால், இதுமும்முனை போட்டியாக பரிணமித்துள்ளது.
விளைவுகள்
கர்நாடக சட்டப்பேரவையைத் தொடர்ந்து, நிகழாண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, இதர சட்டப்பேரவைத் தேர்தல்கள் மீது விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. அம் மாநிலங்களில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவுவதால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அம் மாநிலங்களின் வாக்காளர்கள் பின்பற்ற நேரலாம் என்று கருதப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று முதன்மையான கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும், 224-இல் 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ்-பாஜக நேரடியாக மோதிக்கொள்ளும் நிலையில் உள்ளன.
இந்த மோதலில் விளையும் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு அச்சாரமாக இருக்கும் என அனைத்துக் கட்சிகளும் ஆருடம் சொல்லி வருகின்றன. மக்களவைத் தேர்தலைச் சந்திக்க தொண்டர்களை தக்கவைத்துக் கொண்டு, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் ஏவுதளமாக அணுகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் நுழைவுவாயில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் என பாஜக கணக்கிட்டுள்ளது. "காங்கிரஸ் இல்லா இந்தியா' என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்க கிடைத்துள்ள அரிய வாய்ப்பாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக கருதியுள்ளது.
தொங்கு சட்டப்பேரவையா?
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 122, பாஜகவுக்கு 40, மஜதவுக்கு 40, பாஜகவில் இருந்து பிரிந்த கஜக மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரசுக்கு 10, சுயேச்சைகளுக்கு 12 இடங்கள் கிடைத்திருந்தன.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்சம் 113 இடங்கள் தேவைப்படுகிறது. இந் நிலையில், மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் 10-க்கும் மேற்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இக் கருத்துக்கணிப்புகளில் இந்தியா டிவி-காங்கிரஸுக்கு 96, பாஜகவுக்கு 85, மஜதவுக்கு 38, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும்; டைம்ஸ்நவ் டிவி-காங்கிரஸுக்கு 91, பாஜகவுக்கு 89, மஜதவுக்கு 40, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும்; இந்தியா டுடே டிவி-காங்கிரஸுக்கு 96-101, பாஜகவுக்கு 78-86, மஜதவுக்கு 34-43 இடங்களும்; நியூஸ் எக்ஸ் டிவி-காங்கிரஸுக்கு 90, பாஜகவுக்கு 87, மஜதவுக்கு 39, சுயேச்சைகளுக்கு 7 இடங்களும்; ஏபிபி நியூஸ் டிவி-காங்கிரஸுக்கு 97, பாஜகவுக்கு 84, மஜதவுக்கு 37, சுயேச்சைகளுக்கு 6 இடங்களும்; சுவர்ணா டிவி-காங்கிரஸுக்கு 72, பாஜகவுக்கு 102, மஜதவுக்கு 44, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும்; பப்ளிக் டிவி-காங்கிரஸுக்கு 89-94, பாஜகவுக்கு 86-91, மஜதவுக்கு 38-43 இடங்களும்;சி-ஃபோர் நிறுவனம்-காங்கிரஸுக்கு 123, பாஜகவுக்கு 68, மஜதவுக்கு 32, சுயேச்சைகளுக்கு 1 இடங்களும்; விஎம்ஆர் நிறுவனம்-காங்கிரஸுக்கு 91, பாஜகவுக்கு 89, மஜதவுக்கு 40, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும்; ஜன்கிபாத் நிறுவனம்-காங்கிரஸுக்கு 72-74, பாஜகவுக்கு 102-108, மஜதவுக்கு 42-44 இடங்களும்; சி-வோட்டர் நிறுவனம்-காங்கிரஸுக்கு 102, பாஜகவுக்கு 96, மஜதவுக்கு 25, சுயேச்சைகளுக்கு 1 இடங்களும் வழங்கியுள்ளன. சி-ஃபோர் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதர கருத்துக்கணிப்புகள் அனைத்திலும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறலாம் என்றும், தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. பொதுமக்களிடையே கலந்துரையாடிய போதும், யாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் மக்கள் தெளிவில்லாமல் இருப்பதை உணர முடிகிறது.
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலை இல்லை என்றாலும், அதற்கு முழுமையான ஆதரவு அலையும் இல்லை. அதேநேரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அலையும், பிரதமர் மோடிக்கு எதிரான அலையும் இல்லை. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக்கணிப்புகளில் வெளியாகியுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், அது மஜதவுக்கு சாதகமாகவே அமையும். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மஜதவின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க இயலாது. அண்மைக் காலமாக நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அக் கட்சி ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும்பொருட்டு பிற கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைத்துள்ளதைக் காணமுடிந்தது.
சாத்தியமா?
2004-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. முதல்கட்டமாக, காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி 2 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. அதற்குள் மஜதவை உடைத்த குமாரசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.
அக் கூட்டணி ஆட்சியும் 2008-இல் முறிந்தது. தொங்கு சட்டப்பேரவையால் விளையும் அரசியல் குழப்பங்கள், அரசியல் கட்சிகளின் நாடகங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தேங்கிவிட்டதை மக்கள் நன்குஅறிந்துள்ளனர். எனவே, தொங்கு சட்டப்பேரவை அமைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த 1951-ஆம் ஆண்டுக்கு பிறகு 1983, 2004 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. 1983-இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதாகட்சி ஆட்சி அமைத்தது. 2004-இல் காங்கிரஸ்-மஜத, பாஜக-மஜத ஆகியகூட்டணி அரசுகள் அமைந்தன. எனவே, கர்நாடக மக்கள் தெள்ளத்தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் தொங்கு சட்டப்பேரவையாக இல்லாமல், தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிஅமைக்க வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகும். இது நிலையான ஆட்சிக்கும், ஒருங்கிணைந்த மாநில வளர்ச்சிக்கும் வித்திடும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...