கர்நாடக அரசியலில் "கிங்' அல்லது "கிங் மேக்கரா' மஜத?
கர்நாடகத்தில் தொங்கும் சட்டப்பேரவை அமையும் எனவும், அப்போது, மதச் சார்பற்ற ஜனதா தளம்தான் கிங் மேக்கராக இருக்கும் எனவும்


கர்நாடகத்தில் தொங்கும் சட்டப்பேரவை அமையும் எனவும், அப்போது, மதச் சார்பற்ற ஜனதா தளம்தான் கிங் மேக்கராக இருக்கும் எனவும் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், நிச்சயம் மஜத தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் இனி கர்நாடகத்தில் நாங்கள் கிங் மட்டுமே என அக் கட்சியின் மூத்த தலைவர்கள் பதிலளித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சட்டப்பேரவை, மாநகராட்சித் தேர்தல்களில் தேசிய கட்சிகள் தனிப்பெரும்பான்மை பெறாதபோது மஜதவின் துணையோடுதான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. அப்போது, பதவி ஒப்பந்தங்களின் அடிப்படையில் மஜத கிங் மேக்கராகச் செயல்பட்டுள்ளது.
தற்போது நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலிலும் இதுபோன்ற நிலை உருவாகுமா என்பது மக்களிடையே முக்கிய விவாதமாகியுள்ளது.
1983-ஆம் ஆண்டு முதல்முறையாக கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஜனதா கட்சி உருவாக்கியது. ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் அமைந்த ஜனதா கட்சி ஆட்சியில் புதுமையான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, மக்கள் செல்வாக்கை பெற்று விளங்கியது.
ஜனதா கட்சி, பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஜனதாதளமாக மாறியபோதும், கர்நாடக மக்கள் ஆதரித்தனர். ஜனதா தளம் உடைந்த போது, தேவெ கெளடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்(மஜத) தனிக்கட்சியாக உருவெடுத்தது.
1983 முதல் 1989 வரை ஜனதா கட்சியும், 1994 முதல் 1999 வரை ஜனதா தள ஆட்சியும் கர்நாடகத்தில் நடைபெற்றன. அதன்பின்னர், 2004-இல் மஜதவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 2006-இல் எச்.டி.குமாரசாமி தலைமையில் பாஜகவுடன் இணைந்து மஜத கூட்டணி ஆட்சியை உருவாக்கியது. 2 ஆண்டுகளிலே கூட்டணி முறிந்ததால், ஆட்சி கலைந்தது. 2008-இல் ஆட்சியை இழந்த மஜத, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் இல்லாமல் தவித்து வருகிறது. இம்முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிப்பாக மஜத செயலாற்றி வருகிறது.
வெற்றி வியூகம்
பழைய மைசூரு மண்டலம், மத்திய கர்நாடகத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக விளங்கும் மஜத, கடந்த ஐந்தாண்டுகளில் வட கர்நாடகத்திலும் கட்சியை ஓரளவு பலப்படுத்த முனைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 201 இடங்களில் போட்டியிடும் மஜத, பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு 20 இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 20 மாதங்கள் குமாரசாமி தலைமையில் நடந்த ஆட்சியின் சாதனைகளை பிரசாரம் செய்துவரும் மஜதவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி தானாக முன்வந்து ஆதரவளித்துள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் மஜதவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பழைய மைசூரு பகுதியில் வலிமையாக இருக்கும் மஜத, தனக்கு ஆதரவான ஒக்கலிகர்கள் வாக்குகளை சிதறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், தலித் வாக்குகளைக் கவரும் நோக்கில் இருக்கும் மஜத, ஏஐஎம்ஐஎம் கட்சி பலமாக இருக்கும் பெங்களூரு, ஹைதராபாத்-கர்நாடகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை எளிதாக பெறும் நம்பிக்கையில் உள்ளது.
அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் மஜத வேட்பாளர் தோல்வியடைந்தார். இதன்விளைவாக பல இஸ்லாமியத் தலைவர்கள், காங்கிரஸில் இணைந்தனர். இந்த நிலையில், 12-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மஜதவில் இருந்து விலகி காங்கிரஸ், பாஜகவில் இணைந்துள்ளனர். இது மஜதவுக்கு பெரும் பின்னடைவைத் தந்தாலும், இதிலிருந்து விடுபட மஜத தீவிர முயற்சி எடுத்துள்ளது.
ஆதரவு
கர்நாடகத்தின் பெரும்பான்மையான ஒக்கலிகர் சமுதாயத்தின் ஆதரவு மஜதவுக்கு இருப்பது அக் கட்சிக்கு தேர்தலில் பலம் கூட்டியுள்ளது. முதல்வராக இருந்தபோது குமாரசாமி செயல்படுத்திய திட்டங்கள், புதுமையான அணுகுமுறைகள் மக்களிடையே இன்றைக்கும் பிரபலமாக உள்ளன.
குமாரசாமியின் மக்கள் செல்வாக்கு மஜதவுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. அதேபோல, பகுஜன்சமாஜ் கட்சி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள மஜதவின் வாக்கு விகிதத்தை உயர்த்தும் வாய்ப்புள்ளது. தென் கர்நாடகத்தில் பலமாக இருக்கும் மஜதவுக்கு வட கர்நாடகத்தில் போதுமான பலம் இல்லாதது, அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க தடையாக உள்ளது.
பலவீனம்
பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், இஸ்லாமியத் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியது, அத் தொகுதிகளில் மஜதவை பலவீனப்படுத்தியுள்ளது. ஹைதராபாத் கர்நாடகம், கடலோர கர்நாடகம், மும்பை கர்நாடகப் பகுதிகளின் பல தொகுதிகளில் வலுவான வேட்பாளரை நிறுத்தமுடியாமல் மஜத திணறி வருகிறது. இதனால் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இம் முறை மஜதவுக்கு குறைவாகக் காணப்படுகிறது.
கூட்டணி கணக்கு
மஜதவுடன் பாஜக ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையாவும், மஜதவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடியும் குற்றம்சாட்டிவரும் நிலையில், பாஜகவின் இரண்டாம் அணிதான் மஜத என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார்.
மஜத தனித்து ஆட்சியமைக்க முடியாது. எனவே, அக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மஜதவைச் சுற்றி பலமான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், சித்தராமையாவை விமர்சிக்கும் அளவுக்கு காங்கிரஸ் அல்லது பாஜகவை மஜத தலைவர்கள் விமர்சிக்கத் தயக்கம் காட்டிவருகிறார்கள். அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டாலும், கூட்டணி ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் மஜத உள்ளது.
தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று மஜத நம்பியுள்ளது. இதை அக் கட்சியின் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமியும் உறுதி செய்துள்ளார். ஆட்சி அமைக்க வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், கூட்டணி ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் மஜத உள்ளது.
தேர்தலுக்குப் பின்பு கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், மஜத மாநிலத் தலைவர் குமாரசாமியும் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும், குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரவிடாமல் மஜதவைத் தடுக்கும் வியூகத்தை பாஜக அமைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல்
மஜத-பாஜக கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்வராக்குவதன் மூலம், 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவு லிங்காயத்துகள், மஜத ஆதரவு ஒக்கலிகர் சமுதாயங்களின் வாக்குகளைப் பெற்று 28-இல் 25 இடங்களைக் கைப்பற்றும் நம்பிக்கையில் பாஜக உள்ளது.
இதற்கான திரைமறைவு வேலைகளில் பாஜகவும்,மஜதவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, மே 15-ஆம் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தை ஆளும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கர்நாடக அரசியலை ஆட்டுவிக்கும் வாய்ப்புக்காக மஜத காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...