/

அரசியல் தலைமை இல்லாததால் தடம் மாறும் தமிழர் வாக்குகள்...!

கர்நாடகத் தேர்தலில் முக்கியத்துவம் பெறும் தமிழர் வாக்குகள்,  தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பெற்ற ஆட்சியாளர்கள்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:58 pm

ந.முத்துமணி

கர்நாடகத் தேர்தலில் முக்கியத்துவம் பெறும் தமிழர் வாக்குகள்,  தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பெற்ற ஆட்சியாளர்கள் அதாவது தமிழர் அடையாளம் பெற்ற அரசியல் தலைமையாளர்கள் இல்லாததால்,  தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.  இன்றளவும் தமிழர்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே இருப்பது இளம் கர்நாடகத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசியலில் பல்வேறு மொழிச் சிறுபான்மையினரிலிருந்தும் தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் ஆட்சி தலைமையிடத்தில் உள்ளபோது, தமிழர்களுக்கு மட்டும் உரிய அரசியல் தலைமையாளர்கள் இல்லாதது தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாமல் தமிழர்களின் வாக்குகள் பாஜக,  காங்கிரஸ், மஜத என சிதறிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,   கர்நாடகத் தமிழர்களின் நிலைப்பாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
தமிழர் பலம்
பெங்களூரில் மட்டும் 40 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  28 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிவாஜிநகர்,  சாந்திநகர், புலிகேசிநகர், சர்வக்ஞநகர், காந்திநகர்,விஜயநகர், கோவிந்த்ராஜ்நகர்,  மகாலட்சுமிலேஅவுட்,  பேட்ராயன்புரா, பிடிஎம் லேஅவுட், ராஜாஜி நகர்,  சர்.சி.வி.ராமன்நகர், சிக்பேட்,ஜெயநகர், ராஜராஜேஸ்வரிநகர், சாமராஜ்பேட் உள்ளிட்டதொகுதிகளில் வெற்றி தோல்விகள் தமிழர்கள்தான் நிர்ணயிக்கின்றனர்.
கர்நாடகத்தில் கோலார் தங்கவயல்,  ஹனூர், கொள்ளேகால், குண்டல்பேட்டை, கிருஷ்ணராஜா,  நரசிம்மராஜா, மைசூரு, சாமுண்டீஸ்வரி, வருணா, சாமராஜ்நகர், ஹாசன், சிவமொக்கா,  தாவணகெரே, பங்கார்பேட்,  மண்டியா, தும்கூரு, பத்ராவதி, சாகர்,  ஆனேக்கல் போன்ற 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களில் வெற்றியை முடிவு செய்யும் அளவுக்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  கர்நாடகத்தில் சுமார் 90 லட்சத்திற்கு மேற்பட்டதமிழர்கள் வாழ்ந்துவருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனாலும்,  கர்நாடகத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினர்களான தெலுங்கர்கள்,  மராத்தியர்கள், மலையாளிகள், குஜராத்திகள், ராஜஸ்தானிகள் பெற்றுள்ள அரசியல் அங்கீகாரம் தமிழர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக வாய்க்கவே இல்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடையே பரவலாக உள்ளது.
தமிழ் பிரதிநிதிகள்
கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ்,  இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு,  திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் சி.எம்.ஆறுமுகம்,  எம்.சி.நரசிம்மன்,  கிரேஸ் டக்கர், எஸ்.ராஜகோபால், எம்.ஏ.அமலோற்பவம், டி.பூசலிங்கம், பி.கே.ரங்கநாதன்,  மு.பக்தவத்சலம், டி.எஸ்.மணி, சி.கண்ணன்,  எம்.முனுசாமி, எஸ்.ராஜேந்திரன், டி.ஜி.ஹேமாவதி, ஜே.அலெக்சாண்டர் ஆகிய 14 பேர் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
தமிழர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காக கர்நாடக தமிழர் முன்னேற்றக் கழகம், கர்நாடகத் தமிழர் கட்சி போன்ற பல அரசியல் கட்சிகள் உருவாயின. ஆனாலும், இக் கட்சிகள் தமிழர் அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன.
வாக்கு மாற்றம்
 1980-களுக்குப் பிறகு தோன்றிய பாஜக, மஜத போன்ற கட்சிகள் தமிழர்களை கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டன.  திராவிடக் கட்சிகளும் கர்நாடகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், 18 ஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை 2009-இல் திறந்துவைத்து,  அந்த பெருமையை அன்றைய பாஜக அரசின் முதல்வர் எடியூரப்பா தட்டிச்சென்றுவிட்டார்.  திருவள்ளுவர் சிலை மூடப்பட்டுக் கிடந்ததால்,  கூனிக்குறுகிக் கிடந்த தமிழர்கள் தலைநிமிர்வதற்கு எடியூரப்பாவின் துணிச்சலான முடிவே காரணம். 
இதன்காரணமாக 2010-இல் நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் பாஜக அதிக வார்டுகளைக் கைப்பற்றியது.  திருவள்ளுவர் சிலை திறப்புக்குப் பிறகு பாஜக அனுதாபிகளாக மாறிய தமிழர்கள், அக் கட்சியில் இருந்து எடியூரப்பா விலகியதும் இருகூறுகளாகப் பிரிந்துவிட்டனர். 
எடியூரப்பா பாஜகவில் மீண்டும் இணைந்துவிட்டதால்,  இப்போது தமிழர்கள், காங்கிரஸ், பாஜக என்று இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளாக பிளவுப்பட்டுள்ளனர்.
யாருக்கு ஆதரவு
மே 12-ஆம்தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகத் தமிழர்களின் வாக்கு யாருக்குச் செல்லும்? என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது.  பெங்களூரில் தமிழர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே தமிழரான ஆர்.சம்பத்ராஜை பெங்களூரு மாநகராட்சியின் மேயராக்கியது.  மேயராக ஆற்றிய பணியைப் பாராட்டியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆர்.சம்பத்ராஜுக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்தது.  14 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரில் உள்ள ஒரு தொகுதியில் தமிழர் ஒருவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளாகவே சட்டப்பேரவையில் தமிழர் எவரும் உறுப்பினராக இருந்ததில்லை.
கோலார் தங்கவயல் தொகுதியில் தமிழரான மு.பக்தவத்சலத்தை மஜத நிறுத்தியுள்ளது.  70 சதவீதம் தமிழர்கள் வாழும் கோலார்தங்கவயலில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் எம்எல்ஏவாக முடியவில்லையே என்ற ஆதங்கம் அத் தொகுதி மட்டுமல்லாது, கர்நாடகத் தமிழர்களிடம் உள்ளது. இந்தக் குறையைப் போக்கும் வகையில்  தமிழருக்கு தேர்தலில் போட்டியிட மஜத வாய்ப்பளித்துள்ளது. 
கர்நாடகத்தின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ்,  மஜத ஆகிய கட்சிகள் தமிழரைத் தேர்தலில் நிறுத்தியுள்ளதால்,  அக் கட்சிகளுக்கு வாக்களிக்க தமிழர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.   எடியூரப்பா மீதுள்ள பற்று காரணமாக அக் கட்சிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள். எனவே, இம்முறை தமிழர்களின் வாக்கு ஒரே கட்சிக்குச் செல்லாமல், காங்கிரஸ், மஜத மற்றும் பாஜகவுக்கு பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.