வறட்சியின் பிடியில் கர்நாடகம்; வாழ்வாதாரச் சிக்கலில் விவசாயிகள்
வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் கர்நாடகத்தின் 27 மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.


வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் கர்நாடகத்தின் 27 மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இயற்கையின் வரமாக வாய்த்த கர்நாடகம் இப்போது இயற்கை பேரிடரால் வளம் குன்றியுள்ளது. வழக்கத்தைவிட குறைந்த அளவு மழை பெய்ததால், கர்நாடகத்தின் 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. வேலைவாய்ப்பும் இல்லாததால், ஊரைவிட்டு வெளியூருக்குக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீவனங்கள் இல்லாததால், விவசாயத்தின் ஆணிவேராக இருந்துவரும் கால்நடைகள் மடிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வறட்சியின் கொடுமையை அனுபவிக்க முடியாமல் மக்கள் தவித்துவரும் நிலையில், நிவாரணப் பணிகளில் மாநில அரசு நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது.
பொய்த்த பருவமழை
கர்நாடகத்தில் கடும் வறட்சிக்கு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை, முன்பருவ மழை பொய்த்ததே காரணமாகும். 2015-ஆம் ஆண்டில் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்தைவிட 34 சதம் குறைந்த அளவே மழை பதிவாயின.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்தைவிட 62 சதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. இது மக்களின் இயல்புநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது. வட கர்நாடகத்தின் பெல்லாரி, கொப்பள், ராய்ச்சூர், கலபுர்கி, யாதகிரி, பீதர், பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கதக், ஹாவேரி, தார்வாட் ஆகிய 12 மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை மட்டுமல்ல, முன்பருவ மழையும் பொய்த்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் பீதர் மாவட்டத்தில் 41 சதம், கலபுர்கியில் 40 சதம், விஜயபுரா,யாதகிரியில் தலா 39 சதம், பெலகாவியில் 41- சதம், பாகல்கோட்டில் 21 சதம், ராய்ச்சூரில் 27 சதம், கதகில் 29 சதம், தார்வாடில் 39 சதம், ஹாவேரியில் 30 சதம் மழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய்துள்ளது.
2015-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் பீதரில் 33 சதம், கலபுர்கியில் 32 சதம், விஜயபுராவில் 38 சதம், யாதகிரியில் 37 சதம், பெலகாவியில் 36 சதம், பாகல்கோட்டில் 26 சதம், ராய்ச்சூருவில் 30 சதம், தார்வாடில் 29 சதம், கதகில் 31 சதம், ஹாவேரியில் 23 சதம், வட கன்னடத்தில் 24 சதம், சிவமொக்கா மாவட்டத்தில் 26 சதம் மழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய்துள்ளது.
நிகழாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் வழக்கத்தைவிட தென் கர்நாடகத்தின் உள்பகுதியில் 61 சதமும், வட கர்நாடகத்தின் உள்பகுதியில் 51 சதமும், மலைநாடு பகுதியில் 67 சதமும், கடலோர கர்நாடகத்தில் 79 சதமும் குறைந்த மழை பெய்துள்ளது.
விளைச்சல் பாதிப்பு
வழக்கத்தைவிட மழையின் அளவு குறைந்ததால் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும், உணவு தானியங்களின் உற்பத்தி 4.7 சதம் குறைந்துள்ளது. இதேபோல, தோட்டக்கலை, பணப்பயிர் உள்ளிட்ட அனைத்து வகையான உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளன.
2015-இல் பயறு வகைகள் மற்றும் உணவு தானியங்களின் விளைச்சல் 1.7 கோடி டன்னாக இருந்தது. உணவு தானியங்களின் தேவை 2.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் குறைந்தது
கர்நாடகத்தில் லிங்கனமக்கி, சுபா, வரஹி, ஹாரங்கி, ஹாமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா, அல்மாட்டி, நாராயணபுரா ஆகிய 13 அணைகள் உள்ளன.
இவற்றின் மொத்தக் கொள்ளளவு 860.51 டிஎம்சி தண்ணீர் ஆகும். இந்த அணைகளில் தற்போது 170 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. 13-இல் 10 அணைகள் முழுமையாக வறண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஏப்.28-ஆம் தேதி நிலவரப்படி (கடந்த ஆண்டு நிலவரம் அடைப்புக்குறிக்குள்) லிங்கனமக்கி அணையில் 36.36 டிஎம்சி (35.36டிஎம்சி), சுபாவில் 34.86 டிஎம்சி (59.63டிஎம்சி), வரஹியில் 6.93 டிஎம்சி (7.54 டிஎம்சி), ஹாரங்கியில் 1.00 டிஎம்சி (1.24டிஎம்சி), ஹேமாவதியில் 4.97 டிஎம்சி (5.51டிஎம்சி), கிருஷ்ணராஜசாகரில் 10.92 டிஎம்சி (14.35டிஎம்சி), கபினியில் 4.41 டிஎம்சி (11.31டிஎம்சி), பத்ராவியில் 20.16 டிஎம்சி(34.05 டிஎம்சி), துங்கபத்ராவில் 2.62 டிஎம்சி (2.03 டிஎம்சி), கட்டபிரபாவில் 3.60 டிஎம்சி (7.86டிஎம்சி), மலபிரபாவில் 4.21 டிஎம்சி (6.60டிஎம்சி), அல்மாட்டியில் 13.61 டிஎம்சி (21.04டிஎம்சி), நாராயணபுராவில் 13.34 டிஎம்சி (13.97டிஎம்சி)தண்ணீர் உள்ளது.
இதனால் கர்நாடகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் நிலத்தடிநீர் மட்டம் 1200 அடி ஆழத்துக்குச் சென்றுள்ளன. ஏரி,குளங்கள் அனைத்தும் வறண்டுள்ளன.
குடிநீர்ப் பிரச்னை: கடும் வறட்சியால் கர்நாடகத்தின் 27 மாவட்டங்களைச் சேர்ந்த 22,759 கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த 3.1 கோடி மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாவட்டத்துக்கு தலா ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.
டேங்கர் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியார் டேங்கர் லாரிகள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு விற்று வருகின்றனர்.
வட கர்நாடகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், மகாராஷ்டிர மாநிலத்தைப் போல தென் கர்நாடகத்தில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
அனல் காற்று
மழை பெய்யாததால் வறட்சி வாட்டியெடுத்துவரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஏப்.28-ஆம் தேதி நிலவரப்படி பீதரில் 43.8 டிகிரி செல்சியஸ், சித்ரதுர்காவில் 41 டிகிரி செல்சியஸ், பெலகாவியில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாயின.
தென் கர்நாடகத்தின் உள்பகுதி, வட கர்நாடகத்தின் உள்பகுதியில் அனல் காற்று வீசிவருகிறது. பூங்கா நகரமாம் பெங்களூரிலே அதிகபட்ச வெப்பநிலை 9.1 டிகிரி செல்சியஸாக உள்ளது. கர்நாடகத்தில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் உள்ளது. அனல் காற்றுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
மழை பொய்த்துவிட்டதால் விளைச்சல் இல்லாமல் பரிதவிக்கும் விவசாயிகள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மண்டியா, மைசூரு, ஹாவேரி, பெலகாவி, பீதர், சிவமொக்கா, தும்கூரு, கதக், தார்வாட், தாவணகெரே மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டனர்.
நிகழாண்டு ஜன.11-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1002-ஐ எட்டியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இது 1,400 ஆக அதிகரித்துள்ளது.
நிவாரணப் பணிகள்
1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடகத்தில் மிகவும் மோசமான வறட்சி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருந்தாலும், 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி உள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், வேலை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.3,830 கோடி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்பேரில், மத்திய அரசு கடந்த அக்டோபரில் ரூ.1540 கோடியும், ஏப்.21-ஆம் தேதி ரூ.723.23 கோடியும் ஒதுக்கியுள்ளது. குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய மாவட்டத்திற்கு தலா ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ள மாநில அரசு, வேலை உறுதித் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேகரிக்க தீவன வங்கியும், கால்நடைகளைப் பாதுகாக்க கால்நடைப் பராமரிப்பு மையங்களும் தொடங்க உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...