தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி கர்நாடகத்தில் அமைந்ததே என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்த காலம்போய், இப்போது வேதனைப்படும் நிலை உருவாகியுள்ளது. 4 ஆண்டுகால ஆட்சியில் 2 முதல்வர்கள், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், அதில் சிலருக்கு சிறைவாசம், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை, வெள்ளம், வறட்சியைச் சமாளிக்க முடியாமல் திணறல், உள்கட்சிப் பூசல் போன்ற பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் பல முறை முயன்று தோற்றது, சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்தது, அரைநிர்வாணத்துடன் எம்.எல்.ஏ.க்கள் நடனம் போன்ற எதிர்பாராத பல சம்பவங்கள் என்று பாஜக ஆட்சியில் பரபரப்புக்கு குறைவில்லை.