திபெத் நிலநடுக்கம்: 76 ஆக உயர்ந்த காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்
திபெத்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து...

திபெத் நிலநடுக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் - ஏஎன்ஐ
திபெத்: திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 16 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தின் வடக்கு திபெத்தில் உள்ள நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10.33 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 339 வீடுகளும், 20 கால்நடைக் கொட்டகைகளும் சேதமடைந்தன என்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாகு நகராட்சி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஷி ஜின்பிங் உத்தரவு
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இரண்டாம் நிலை பேரழிவுகளைத் தடுக்கவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் வழங்குமாறும் நில அதிர்வு மற்றும் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீட்பு, மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகத்திற்காக 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 12,489 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று கட்டங்களாக வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி காணாமல் போனவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
போக்குவரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளை ரயில்வே அதிகாரிகள் நிறுத்தி வைத்ததாக சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
தகவல்களைப் பெறுவதில் கடினம்
இதற்கிடையே, மத்திய திபெத்திய நிர்வாகத்தின் (சிடிஏ) தலைவர் பென்பா செரிங், நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்ததோடு, சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தகவல்களைப் பெறுவது கடினமாக இருப்பதாகவும் செரிங் குறிப்பிட்டார்.
நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அதிக உயரம், குறைந்த வெப்பநிலை, குறைந்த ஆக்சிஜன் அளவு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு என்பதால் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் தாமதமாகி வருகின்றன. நிலச்சரிவுகள், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுதல் உள்ளிட்ட இரண்டாம் நிலை அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு
சீனா அவசரக்கால பேரிடர் நிவாரண நிதியாக 50 மில்லியன் யுவானையும், மீட்புப் பணிகளுக்காக மேலும் 30 மில்லியன் யுவானையும் ஒதுக்கியுள்ளது.
அவசரகாலக் குழுக்கள் கூடாரங்கள், உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வரும் நிலையில், உள்கட்டமைப்பைச் சீரமைக்கும் பணியில் பழுதுபார்க்கும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடரும் கண்காணிப்பு பணிகள்
மீட்புப் பணிகள் மற்றும் நில அதிர்வுகள், மோசமான வானிலை நிலவரங்களைக் கண்காணிக்கும் பணிகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படு ஏன்..?
யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும் நிலப்பரப்புக்கு மேலே திபெத் பீடபூமி அமைந்துள்ளதால், இந்த பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
At least 76 people have been injured and 16 killed after a 7.0-magnitude earthquake struck Nakchu in Tibet on Thursday night, with rescue and relief operations underway in the affected areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


