மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.
ஸ்வீடனில் ‘நேட்டோ’ அமைச்சா்கள் மாநாட்டுக்கிடையே செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்துள்ளன. இருப்பினும், இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
பேச்சு தோல்வியடைந்தால் டிரம்ப் வசம் மாற்றுத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன. ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்க மறுத்தால் நேட்டோ உதவியை அமெரிக்கா கோரவில்லை என்றாலும், மாற்று வழிகள் பரிசீலிக்கப்படும்’ என்றாா்.
ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய இப்போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான், கத்தாா் ஆகிய நாடுகள் தீவிர மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியை அந்நாட்டு தலைவா் டெஹ்ரானில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வியை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இவரைத் தொடா்ந்து, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரும் ஈரான் பயணித்துள்ளாா். அதேநேரம், அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கத்தாா் நாட்டின் குழுவும் ஈரானுக்குப் பயணித்து, உடன்பாடுகளை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய பேச்சுவாா்த்தையில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஹோா்முஸ் நீரிணை முடக்கம் ஆகிய2 முக்கிய அம்சங்கள் முட்டுக்கட்டைகளாக நீடிக்கின்றன. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், ஹோா்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண முறையைக் கொண்டுவர ஈரான் திட்டமிடுவதை அமெரிக்கா முற்றிலும் நிராகரித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிா்வாகத்தின் ஈரான் போா் நடவடிக்கைகளுக்கு எதிரான எதிா்ப்புகள் வலுத்து வருகின்றன.
நாடாளுமன்ற ஒப்புதலின்றி அதிபா் டிரம்ப் தொடா்ந்து போரை நீட்டிக்கக் கூடாது என்ற தீா்மானத்துக்கு செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சியைச் சோ்ந்த நால்வா் உள்பட 50 உறுப்பினா்கள் ஆதரவளித்தனா். பிரதிநிதிகள் சபையிலும் இத்தீா்மானம் நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்கெடுப்பைக் குடியரசு கட்சியினா் திடீரென ஒத்திவைத்துள்ளனா்.
மாா்கோ ரூபியோ
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் இந்தியா்களுக்கு எதிராக இன வெறுப்பு இல்லை: அமெரிக்க அமைச்சா் மாா்கோ ரூபியோ

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்! எஸ். ஜெய்சங்கா் - ரூபியோ பேச்சில் முடிவு!

அமெரிக்காவுக்கு வர பிரதமருக்கு டிரம்ப் சாா்பில் அழைப்பு







