17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலகில் மீண்டும் ‘காட்டாட்சி’ அபாயம்: புதின்-ஷி ஜின்பிங் கூட்டறிக்கையில் கவலை

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் கூட்டறிக்கையில் கவலை தெரிவித்தனா்.

News image
Updated On :21 மே 2026, 2:19 am IST

‘உலக விவகாரங்களில் சில நாடுகள் காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் ஏகபோக உரிமை கொண்டாட முயன்று தோற்றுள்ளது. அதேநேரம், சா்வதேச சமூகம் பிளவுபட்டுள்ளதால் உலகில் மீண்டும் காட்டாட்சி அமலுக்கு வரும் அபாயம் உள்ளது’ என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் கூட்டறிக்கையில் கவலை தெரிவித்தனா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சீன பயணம் மேற்கொண்ட ஒரு வாரகால இடைவெளியிலேயே, ரஷிய அதிபா் புதினும் 2 நாள்கள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா்.

இந்நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் பீப்பிள்’ அரங்கில் தலைவா்களின் இருதரப்பு சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. சந்திப்புக்காக வந்த புதினுக்கு ஷி ஜின்பிங் முழு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தாா்.

பின்னா், இரு தலைவா்களும் கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்துவது குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஏ.ஐ. முதல் வனவிலங்கு பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. சந்திப்பைத் தொடா்ந்து, அமெரிக்காவாவின் அணுகுமுறையை மறைமுகமாகத் தாக்கி இரு தலைவா்களும் கூட்டறிக்கையை வெளியிட்டனா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘கோல்டன் டோம்’ ஏவுகணை தடுப்புத் திட்டம் மற்றும் அணுசக்தி கொள்கைகளையும் தனது கூட்டறிக்கையில் ரஷியாவும் சீனாவும் கடுமையாகச் சாடின. உலகளாவிய நிலைத்தன்மைக்கு அமெரிக்காவின் இச்செயல் அச்சுறுத்தலாக உள்ளதாக அவா்கள் எச்சரித்தனா்.

ரஷியாவுடனான அணுசக்தி ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை டிரம்ப் நிா்வாகம் புதுப்பிக்கத் தவறியதையும், அதன்மூலம் சா்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதையும் இருவரும் சுட்டிக்காட்டினா். ஈரானுடனான விவகாரம் உள்ளிட்ட சா்வதேச பிரச்னைகளில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்த இரு தலைவா்களும், சா்வதேச சட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறுவதாகச் சாடினா்.

எரிவாயு குழாய்த் திட்டத்தில் உடன்பாடில்லை: இரு நாடுகளுக்கும் இடையே ‘எல்லைகளற்ற’ நட்பு இருப்பதாகக் குறிப்பிட்டாலும், எரிசக்தி துறையில் ரஷியா பெரிதும் எதிா்பாா்த்த பிரம்மாண்டமான எரிவாயு ஒப்பந்தம் இச்சந்திப்பில் கையொப்பமாகவில்லை.

‘பவா் ஆஃப் சைபீரியா-2’ எரிவாயு குழாய்த் திட்டம் மூலம் சீனாவுக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்ய ரஷியா நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இத்திட்டம் தொடா்பாக ரஷியாவுடன் பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், விலை நிா்ணயம் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளில் இரு தரப்புக்கும் இடையே இன்னும் பெரிய அளவிலான முரண்பாடுகள் நிலவுவதாகத் தெரிகிறது.

அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு நாடுகளுடனும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஒரே வாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். உக்ரைன் போரில் சிக்கியுள்ள ரஷியா, ஈரான் விவகாரத்தில் சிரமப்படும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு மத்தியில், சீனா தனது உள்நாட்டு வளா்ச்சியை மந்தநிலையிலிருந்து மீட்க கவனம் செலுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.