ஈரானில் அரசு டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு டிவி நிறுவனம் மூலம் வெளிப்படையாக ஒளிபரப்பி வருக்கின்றனர். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பயிற்றுநர்களும் நேரலையில் துப்பாக்கியால் சுடும் காணொலிகள் வெளியாகியுள்ளன.
இதில் ஒரு நிகழ்ச்சியில் 7.6239 மிமீ தோட்டாக்களைப் பயன்படுத்தும் ஏகே - 47 ரக துப்பாக்கியின் செயல்விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், ஆயுதப் பயிற்சியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மக்களைப் போருக்குத் தயார்படுத்தும் விதமாக இந்தப் பயிற்சி வழங்கப்படுவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிகள் கல்வி சார்ந்தவையாகக் குறிப்பிடப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.
ஈரானில் நாடு முழுவதும் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பொதுமக்கள் பலருக்கும் பொது இடங்களில் வைத்து ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல பதின் வயதினரும் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெரிய வல்லரசு நாடுகளையும் உலகளாவிய அடக்குமுறையையும் எதிர்கொள்ளும் ஈரான், ஆயுதப் பயிற்சியை கல்வி, கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த முறையில் வழங்கி வருவதாக ஈரான் அரசு தொலைக்காட்சி நிறுவனத் துணைத் தலைவர் மொசென் பர்மேனி தெரிவித்தார். மேலும், போருக்கு மக்களைத் தயார்படுத்தும் விதமாக தொகுப்பாளர்கள் துப்பாக்கிகளைக் கையாளுவதைக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியை நோக்கி துப்பாக்கியால் சுடுவது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், முகமூடி அணிந்த ஆயுதப் பயிற்சியாளர் ஒருவர் கலஷ்னிகோவ் துப்பாக்கியை இயக்குவது பற்றிய செயல் விளக்கத்தை அளித்தார்.
ஈரான் அரசு ஆயுதப்பயிற்சியை வெளிப்படையாக ஊக்குவிப்பது போர்ச்சூழலுக்கு மக்களைத் தயார்படுத்துவதற்காகவா அல்லது தெஹ்ரானில் நடைபெறும் உள்நாட்டுக் கலவரத்தைத் தடுக்கும் முயற்சியா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
’ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்யுங்கள்’ என்ற பிரச்சாரம் ஈரான் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 3.1 கோடிக்கும் அதிகமான மக்கள் இதில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Shooting Practice on an Iranian TV Show
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











