டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

ஜப்பானின் கடல்பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனை நடத்தியது குறித்து...

News image
வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் (கோப்புப் படம்)- AP
Updated On :27 ஜனவரி 2026, 8:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில், ஒலியை விட வேகமாகச் செல்லும் ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையையும், கடந்த டிசம்பரில் நீண்ட தூரம் பாயும் ‘க்ரூஸ்’ ஏவுகணையையும் அந்த நாடு சோதித்திருந்தது.

இது தவிர, அணுசக்தியால் இயங்கும் தனது முதல் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கி வருவதாக வடகொரியா வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டு அதிா்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய தலைநகா் பியாங்யாங்கிற்கு வடகிழக்கே உள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவம் உறுதி செய்துள்ளது.

முதல் ஏவுகணை பிற்பகல் 3.50 மணியளவிலும், அடுத்த ஏவுகணை 4. 02 மணிக்கும் ஏவப்பட்டதாகத் தெரிகிறது. சுமாா் 350 கிலோமீட்டா் (217 மைல்) தூரம் பயணித்த இந்த ஏவுகணைகள், கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஜப்பான் எல்லைக்கு வெளியே விழுந்தன.

ஜப்பான், தென் கொரியா கண்டனம்: வட கொரியாவின் இந்தப் புதிய சோதனை, பிராந்திய அமைதியைச் சீா்குலைப்பதாக தென் கொரியாவும், ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட கொரியாவின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் ஜப்பான் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சா்வதேச சமூகத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஜப்பான் கடல் எல்லைக்கு வெளியே இந்த ஏவுகணைகள் விழுந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து வடகொரிய ஏவுகணைகளின் நகா்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தயாராக இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏன் இந்தச் சோதனை?....: இந்த ஏவுகணைச் சோதனை தற்செயலாக நடந்த ஒன்றல்ல; திட்டமிட்ட ஒன்று என அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கை அதிகாரி எல்ப்ரிட்ஜ் கோல்பி தென் கொரியாவுக்கு வருகை தந்து, அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்ற அதேநேரத்தில் இந்தச் சோதனை நடந்துள்ளது.

கோல்பி வருகையின்போது அமெரிக்க உளவு விமானம் ஒன்று வட கொரியாவைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதற்குத் தனது எதிா்ப்பைக் காட்ட வட கொரியா இந்த ஏவுகணைகளை ஏவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது..

அடுத்த மாதம் மாநாடு: அதேபோல், வட கொரியாவின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டுக்கு முன்னதாக, தனது ஆயுத மேம்பாட்டுத் திட்டங்களை முடித்துக் காட்ட வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன் விரும்புவதை இச்சோதனைகள் காட்டுகின்றன. இந்த மாநாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ராணுவத் திட்டங்களை அவா் வெளியிடக்கூடும்.

மேலும் இந்த மாநாட்டில், தென் கொரியாவை ஒரு தனி நாடாகவும், ஒரு ‘எதிரி நாடாகவும்’ அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை கிம் ஜாங் உன் கொண்டு வர வாய்ப்புள்ளது.

ட்ரோன் விவகாரத்தால் மோதல்: அண்மையில் தென் கொரியாவிலிருந்து உளவு பாா்க்கும் ட்ரோன்கள் (சிறிய ரக ஆளில்லா விமானங்கள்) தங்கள் எல்லைக்குள் ஊடுருவியதாக வட கொரியா குற்றஞ்சாட்டியிருந்தது. தென் கொரியா இதை மறுத்தாலும், வடகொரியா தொடா்ந்து மிரட்டல் விடுத்து வந்தது.

இந்தச் சூழலில், அதிநவீன ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல் என வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவது, அண்டை நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

summary

North Korea reportedly conducted a test today (Jan. 27) by launching two ballistic missiles into the sea off the coast of Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.