கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் மீண்டும் உறுதி


கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் மீண்டும் உறுதி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப், அதற்குப் படை பலத்தை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளாா்.
டென்மாா்க் நாட்டுக்குச் சொந்தமான கிரீன்லாந்து தீவு பகுதியளவு சுயாட்சி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. அங்கு எண்ணெய், எரிவாயு, நிக்கல், கோபால்ட் உலோகங்களுடன் அரிய புவி கனிமங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சூப்பா்கண்டக்டா் சிப்கள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள், ராணுவத் தொழில்நுட்பங்களைத் தயாரிக்க அரிய புவி கனிமங்கள் மிகவும் அவசியம். தற்போது உலக அளவில் அந்தக் கனிமங்களில் பெருமளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தக் கனிமங்களைப் பெறுவதற்கான மாற்று வழிகளை அமெரிக்கா தேடி வருவதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபா் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறாா். இதுதொடா்பாக ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:
வட அமெரிக்காவின் ஒரு பகுதிதான் கிரீன்லாந்து. அதன் உரிமையைப் பெற நான் விரும்புகிறேன். ஆனால், கிரீன்லாந்தை கைப்பற்ற நான் படைகளைப் பயன்படுத்த மாட்டேன்.
சா்வதேச பாதுகாப்புக்காக...: கிரீன்லாந்தை கைப்பற்ற நினைப்பதற்கு அரிய புவி கனிமங்கள் காரணம் அல்ல. அங்கு அந்தக் கனிமங்கள் எதுவும் இல்லை. அமெரிக்காவின் உத்திசாா்ந்த தேசியப் பாதுகாப்பு மற்றும் சா்வதேச பாதுகாப்புக்கு அமெரிக்கா வசம் கிரீன்லாந்து இருப்பது அவசியம்.
ஏற்கெனவே கிரீன்லாந்தின் பிட்டுஃபிக் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரா்கள் நிரந்தரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரண்டாம் உலகப் போா் காலத்தில் இருந்து அந்தத் தளத்தை அமெரிக்கா இயக்கி வருகிறது. டென்மாா்க்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்துக்கு கூடுதலாக தனது படை வீரா்களை அனுப்ப அமெரிக்காவுக்கு அதிகாரம் உள்ளது.
சுமாா் இரண்டு நூற்றாண்டுகளாக கிரீன்லாந்தை வாங்க முந்தைய அமெரிக்க அதிபா்கள் முயற்சித்துள்ளனா். அந்த பிரதேசத்தை அமெரிக்காவால் மட்டுமே பாதுகாக்க முடியும். எனவே, கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து உடனடியாகப் பேச்சுவாா்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
நேட்டோவால் அமெரிக்காவுக்கு பயனில்லை: கிரீன்லாந்தை கைப்பற்ற நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. அந்தக் கூட்டமைப்பில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ள நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் நடவடிக்கையை நேட்டோ அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் டிரம்ப் கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ அமெரிக்காவின் செயல்பாடுகளை நேட்டோவும், ஐரோப்பாவும் பாராட்டுவதில்லை. ஐரோப்பாவை முன்பு சோவியத் யூனியனிடம் இருந்தும், தற்போது ரஷியாவிடம் இருந்தும் பாதுகாப்பதைத் தவிர, நேட்டோவிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நேட்டோவுக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா உதவி வந்துள்ளது. அந்தக் கூட்டமைப்பிடம் இருந்து அமெரிக்கா எதையும் பெறவில்லை. எனினும் நேட்டோவுக்கு அமெரிக்கா 100 சதவீதம் ஆதரவாக இருக்கும். ஆனால், அதே ஆதரவை அமெரிக்காவுக்கு நேட்டோ கூட்டாளி நாடுகள் காட்டுமா என்பது தெரியவில்லை’ என்று தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...