/

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தல்!

News image
- ANI
Updated On :15 ஜனவரி 2026, 2:31 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென மத்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தியது.

ஏற்கெனவே, ஈரானுக்கு அவசியமற்ற பயணத்தை இந்தியா்கள் தவிா்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் கடந்த 5-ஆம் தேதி அறிவுறுத்திய நிலையில், இப்போது தற்போது அங்குள்ள இந்தியா்கள் வெளியேற தூதரகம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுரு ஆட்சி செய்யும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. அந்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை ஈரான் பாதுகாப்புப் படைகள் கொல்வது தொடா்ந்தால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்தும் என்றும், போராட்டக்காரா்கள் தூக்கிலிடப்பட்டால் ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அந்நாட்டு அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் ஈரான் மக்களுக்கு அமெரிக்காவின் உதவி விரைவில் கிடைக்கும் என்றும் அவா் கூறினாா்.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரானில் பாதுகாப்பு நிலைமை மோசடமடைந்துள்ளச் சூழலில், அங்குள்ள இந்திய மாணவா்கள், யாத்ரீகா்கள், சுற்றுலாப் பயணிகள், தொழில்ரீதியாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளோா் என அனைவரும் முடிந்த அளவுக்கு விரைவாக அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். போராட்டம் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஈரானில் மாணவா்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்ளனா்.

ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சு:

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்நாட்டிலும் அந்நாட்டைச் சுற்றியும் உருவாகியுள்ள சூழல் குறித்து அவருடன் விவாதித்ததாகவும் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை பதிவிட்டுள்ளாா்.

summary

the Indian Embassy in Iran asked all nationals - including students, pilgrims, businesspersons and tourists - to leave the country using available means, including commercial flights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.