/

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஒப்பந்தம் செய்யவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
Updated On :19 பிப்ரவரி 2026, 4:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஒப்பந்தம் செய்யவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கியின் உதவியுடன் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலைத் தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை பிப்.16 முதல் பிரம்மாண்ட போர்ப் பயிற்சியைத் தொடங்கியது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 13 போர்க் கப்பல்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போா்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டவையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.

இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலர் கரோலின் லீவிட், “ஜெனீவாவில் ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பல விஷயங்களில் உடன்பாடு எட்டவில்லை. அதுகுறித்து இரு வாரங்களுக்குள் மீண்டும் ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒப்பந்தங்களுக்கு ஒத்துபோகாத ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக
வாஷிங்டனில் தனது அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் செய்வது எளிதான காரியம் அல்ல என்பது அனைவரும் தெரியும். நாம் நல்ல ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவிவரும் சூழலில், ஓமன் வளைகுடாவில் ரஷியாவுடன் சேர்ந்து ஈரான் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அரபிக்கடலில் தனது போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா, அதிநவீன போர் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உள்ளதால் பதற்றம் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால், உலக நாடுகளிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

summary

US President Donald Trump on Thursday sharpened his warning to Iran, saying Tehran must agree to a meaningful nuclear deal "bad things can happen", even as indirect negotiations continue in Switzerland amid heightened military tensions in Middle East.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.