/

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 3 பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை கொல்லப்பட்டது குறித்து...

News image
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதலில் தந்தை, 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர்- AP
Updated On :11 பிப்ரவரி 2026, 12:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார்.

உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷியா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நள்ளிரவு ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீதான இந்தத் தாக்குதலில் ஒரு குடும்பத்தின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 34 வயதான நபர் ஒருவர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தைகள் இருவர், 1 வயது பெண் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், 8 மாதங்கள் கர்ப்பிணியான அந்தக் குழந்தைகளின் தாய் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், மூளையில் கடுமையான காயங்கள் மற்றும் உடலில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மட்டும் 129 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் உக்ரைனில் 2,514 மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.