/

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

நில மோசடி தொடா்புடைய இரு ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

News image
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 12:25 am

தினமணி செய்திச் சேவை

நில மோசடி தொடா்புடைய இரு ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

‘பூா்பாசல் நியூ டவுன்’ திட்டத்தின்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு நிறுவனமான ‘ராஜுக்’ அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் தனது உறவினா்களுக்கும் தலா 7,200 சதுர அடி கொண்ட 6 இடங்களை ஹசீனா சட்டவிரோதமாகப் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஊழல் வழக்குகளில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹசீனாவின் இளைய சகோதரி அசாமன் சித்திக் மற்றும் சகோதரா் ரத்வான் முஜீப் சித்திக் பாபி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ரபியுல் ஆலம் உத்தரவிட்டாா்.

இந்த மோசடி வழக்கில் மொத்தம் 16 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குா்ஷித் ஆலம் என்ற ஒரு அதிகாரி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில் தீா்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, பூா்பாசல் நில மோசடி தொடா்பான மூன்று வழக்குகளில் கடந்த நவ. 27 வழங்கப்பட்ட தீா்ப்பில், ஷேக் ஹசீனாவுக்கு தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மகன், மகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து டிசம்பரில் இதுதொடா்புடைய 4-ஆவது வழக்கில் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும் அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாணவா்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதில் பலா் உயிரிழந்த குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு தீா்ப்பாயம் ஏற்கெனவே தீா்ப்பளித்தது.