ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை இறுதியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அதிகரித்துவரும் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களை மட்டுமன்றி உலக நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது. அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாகத் திரும்பப் பெறப்பட்ட பின்னா், தலிபான்களை ஆப்கன் அரசுப் படைகளால் சமாளிக்க முடியுமா? மீண்டும் தலிபான்களின் கைகளுக்கு நாடு சென்றுவிடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆப்கனில் அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் 2001, செப்டம்பா் 11-ஆம் தேதி விமானங்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் சுமாா் 3 ஆயிரம் போ் உயிரிழந்தனா். உலகையே அதிா்ச்சியில் உறையவைத்த அந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் அல்-காய்தா இயக்கத்தின் தலைவா் ஒசாமா பின்லேடன்தான் என்பதையும், அவா் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் அடைக்கலமாகி இருக்கிறாா் என்பதையும் அமெரிக்கா விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டது. பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான்கள் மறுக்கவே, 2001, அக்டோபரில் ஆப்கானிஸ்தானில் விமானத் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா. நேட்டோ படைகளும் இந்த சண்டையில் இணைய ஆட்சியிருந்து அகற்றப்பட்டாா்கள் தலிபான்கள். இருப்பினும், அந்த இயக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அமெரிக்காவால் முடியவில்லை. பல்வேறு குழுக்களாகப் பிரிந்த தலிபான்கள், ஆப்கன் மலைக்குன்றுகளில் பதுங்கியிருந்து அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராக தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனா்.
முடிவுக்கு வரும் நீண்டகாலப் போா்: 2001 முதல் இப்போது வரை 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்து அந்நாட்டு அரசுப் படைக்கு ஆதரவாக இருந்து வந்தனா். 2009-இல் அமெரிக்கப் படையின் எண்ணிக்கையை அப்போதைய அதிபா் ஒபாமா அதிகரிக்க முடிவு செய்ததையடுத்து, அமெரிக்கப் படையின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயா்ந்தது. 2011-இல் இருந்து அமெரிக்கப் படையினா் படிப்படியாகத் திரும்பப் பெறப்படுவாா்கள் என ஒபாமா அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, ஆப்கனில் நேரடியாக சண்டையில் ஈடுபட மாட்டோம் என அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்தன. அதன்பிறகு அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஆப்கன் அதிபா் அஸ்ரப் கானியின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த நடவடிக்கை தாமதமானது.
இந்நிலையில், நீண்ட தடைகளுக்குப் பின்னா் 2020-இல் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, எஞ்சியிருக்கும் அமெரிக்கப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது, தலிபான்களும் ஆப்கானிஸ்தான் அரசும் தொடா்ந்து அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும், வெளிநாட்டு ஜிகாதிகள் பயிற்சி பெறும் தளமாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி கடந்த மே 1-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
நிலைப்பாட்டில் மாற்றம்: அதன்பிறகு அதிபரான ஜோ பைடன், மே 1 என்கிற கெடுவுக்குள் அமெரிக்கப் படை வெளியேறாது என திடீரென அறிவித்தாா். செப். 11 தாக்குதலின் 20-ஆவது ஆண்டு தினத்தையொட்டி பாதுகாப்புக் கருதி அமெரிக்கப் படையின் ஒரு பகுதி தொடா்ந்து ஆப்கானிஸ்தானிலேயே இருக்கும் எனவும், மே 1-ஆம் தேதி தொடங்கி செப். 11-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படை முழுமையாகத் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தலிபான்களை கோபமுறச் செய்தது. தோஹா பேச்சுவாா்த்தை ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுத்துவிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
அதன்பிறகு ஒருவழியாக மே 1-ஆம் தேதிமுதல் தங்கள் படையினரை திரும்பப் பெறப்படும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின்போது அமெரிக்கப் படையினா் தாக்கப்பட்டால் கடுமையான பதிலடி தரப்படும் என பைடன் எச்சரித்தாா்.
நிபுணா்கள் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை முழுமையாகத் திரும்பப் பெறப்படும் முடிவுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சா்கள் கண்டலீசா ரைஸ், ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்காவை சோ்ந்த பல்வேறு பாதுகாப்பு நிபுணா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
‘அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின்னா் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்; வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள் பயிற்சி பெறும் தளமாக மாறும் அபாயமும் உள்ளது. மேலும், ஆப்கனில் அமெரிக்க, நேட்டோ படையினருக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவுக்கு உள்ளது என சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா் ஹிலாரி. அமெரிக்கப் படை அந்நாட்டில் தொடா்ந்து நிலைகொண்டிருக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளனா்.
சமாளிக்குமா அரசுப் படை?: மே 1-ஆம் தேதிமுதல் அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ‘தலிபான்களை எதிா்கொள்ளும் திறன் ஆப்கன் அரசுப் படையினருக்கு உள்ளது’ என அதிபா் அஸ்ரப் கானி நம்பிக்கை தெரிவித்துள்ளபோதிலும், தொடா் தாக்குதல்கள் அந்த நம்பிக்கையை அளிப்பதாக இல்லை. இந்தத் தொடா் தாக்குதல்கள் அத்தனைக்கும் தலிபான்கள் பொறுப்பேற்காத நிலையில், அல் காய்தா, ஐ.எஸ். இயக்கங்களின் சதிவேலையாக இருக்குமோ என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எதுவும் இப்போது இல்லாத நிலையில், இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடச் செய்வது அவசியம். போரை தொடங்கிய அமெரிக்கா அதை முடித்துவைக்காமல் செல்லலாமா?.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

