பாகிஸ்தான்-சவூதி உறவில் விரிசல் ஏன்?
பாகிஸ்தான்-சவூதி அரேபியா இடையிலான நீண்டகால உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதை சரிசெய்வது எப்படி என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது பாகிஸ்தான்.


பாகிஸ்தான்-சவூதி அரேபியா இடையிலான நீண்டகால உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதை சரிசெய்வது எப்படி என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது பாகிஸ்தான். இந்த விரிசலுக்கு காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் முன்னிலைப்படுத்துவதும் ஒரு காரணம் என்கிற வகையில் இது இந்தியாவுக்கு முக்கியமாகிறது.
சவூதி -பாகிஸ்தான் இடையிலான உறவு 1960-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. சவூதி மன்னர் குடும்பத்துக்கான பாதுகாப்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சவூதி ராணுவத்துக்கு பயிற்சியும் அளித்து வருகிறது பாகிஸ்தான் ராணுவம். பதிலுக்கு ஏராளமான முதலீடுகளை பாகிஸ்தானில் செய்துள்ளது சவூதி. பாகிஸ்தானின் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்தை சவூதிதான் அளிக்கிறது. காஷ்மீர் பிரச்னையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சவூதி பல ஆண்டுகளாக எடுத்து வந்தது.
பிரச்னை தொடக்கம்
இத்தனை நெருங்கிய பங்காளிகள் இடையே சமீபகாலமாக ஏற்பட்டுள்ள விரிசல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தை வைத்து இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளிடையே ஒரு பரப்புரையை மேற்கொள்ள பாகிஸ்தான் முயல்வது, மலேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடனான அதன் நெருக்கம் உள்ளிட்ட காரணங்கள் இந்த விரிசலுக்குப் பின்னால் உள்ளன.

இந்த பிரச்னை கடந்த ஆண்டே தொ டங்கிவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (ஓஐசி) கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென பாகிஸ்தான் நச்சரித்து வந்தது. இந்த அமைப்பில், சவூதி, மலேசியா, இந்தோனேசியா, இராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், துருக்கி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அந்தக் கூட்டத்தைக் கூட்ட சவூதி விரும்பவில்லை. மாறாக, பாகிஸ்தானின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, சவூதியும், ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவுக்கு எதிராக கடுமையான கண்டனத்தைத் தவிர்த்து பெயருக்கு ஓர் அறிக்கை வெளியிட்டன. துருக்கி, மலேசியா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து தெரிவித்தன.
சவூதிக்கு இந்தியா ஏன் முக்கியம்?
பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சவூதி இணங்காததற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக சவூதி மற்றும் வளைகுடா நாடுகளுடன் நல்ல உறவைப் பேணி வருகிறது இந்தியா. பிராந்தியத்தில் இந்தியாவை மதிப்புமிக்க கூட்டாளியாகப் பார்க்கிறது சவூதி. மேலும், சீனா, அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் 4-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சவூதி உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 18 சதவீதத்தை சவூதியிலிருந்து இறக்குமதி செய்கிறது. எல்பிஜி தேவையின் முக்கிய ஆதாரமாகவும் சவூதி உள்ளது. மேலும், அமெரிக்காவின் தடையைத் தொடர்ந்து ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது சவூதிக்கு கூடுதல் ஆதாயமாகப் பார்க்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால் வர்த்தகரீதியாக சவூதி பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆதலால், சவூதிக்கு இந்தியா தவிர்க்க முடியாத ஒரு கூட்டாளி.

சவூதியின் கோபம்
ஆனாலும், கடந்த ஓராண்டாக காஷ்மீர் விவகாரத்தை மையப்படுத்தி இஸ்லாமிய நாடுகளிடையே உணர்வுகளைத் தூண்ட பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இதன் உச்சகட்டமாக, "காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க ஓஐசி அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் பாகிஸ்தானை ஆதரிக்கும் நாடுகளின் கூட்டத்தை ஓஐசிக்கு வெளியே கூட்டுமாறு பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்துவேன்' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அண்மையில் தெரிவித்த கருத்து சவூதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த 6 பில்லியன் டாலர் கடனில் 3 பில்லியன் டாலரை சவூதி திருப்பிக் கேட்டது. பாகிஸ்தானுக்கு எத்தனையோ முறை கடனுதவி வழங்கியுள்ளபோதிலும், அந்த நாடு திரும்பச் செலுத்துவது அரிதானது, சவூதியும் கறார் காட்டுவதில்லை. ஆனால், முதல் முறையாக கடனை சவூதி திரும்பக் கேட்டது பாகிஸ்தானை அதிர்ச்சியுறச் செய்தது. இது குரேஷியின் தனிப்பட்ட கருத்து என சமாளித்தாலும் சவூதி சமாதானமாவதாகத் தெரியவில்லை. இதில் ஒரு பில்லியன் டாலரை சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்தாலும், மீதி கடன் தொகை மீதான நிலை அப்படியே தொடர்கிறது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா தலைமையிலான ஒரு குழுவை சவூதிக்கு அனுப்பி வைத்தார் பிரதமர் இம்ரான் கான்.
சவூதியின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ஷேக் காலித் பின் சல் மானை சந்தித்த பாஜ்வா, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மலேசியா, துருக்கியுடன் நெருக்கம்
சவூதி-பாகிஸ்தான் இடையேயான விரிசலுக்கு காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல், ஈரான், மலேசியா, துருக்கியுடனான பாகிஸ்தானின் நெருக்கமும் ஒரு காரணம்.
இந்த மூன்று நாடுகளும் இஸ்லாமிய உலகில் சவூதியின் தலைமையை விரும்பாதவை. ஓஐசி கூட்டத்தைக் கூட்ட சவூதி விரும்பாததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில் இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க மலேசியா ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த முயற்சிக்கு பாகிஸ்தானும் ஒரு காரணம். ஆனால், ஓஐசி அங்கீகரிக்காத இந்தக் கூட்டம் நடைபெறுவதை சவூதி விரும்பவில்லை. அதன் அழுத்தம் காரணமாக, கடைசி நேரத்தில் மலேசிய கூட்டத்தில் பங்கேற்பதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரத்து செய்தார்.
மீதியிருக்கும் கேள்வி

சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயுடன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் குரேஷி.
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பி பலமுறை தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இந்த விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளிடையேயும் போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், தனது உத்தியை மாற்றி சீனாவை நோக்கிச் செல்ல பாகிஸ்தான் முயல்கிறது. பாக். ராணுவ தலைமை தளபதிக்கு சவூதி பட்டத்து இளவரசருடனான சந்திப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் குரேஷி சீனாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டது இதை உறுதிப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் புதிய முயற்சிக்கு சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு அளிக்கலாம். ஆனால், உய்கர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகவும் அந்த நாடுகள் கேள்வி எழுப்புமா என்பது கேள்விக்குறியாகவே தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...