எல்லாம் சரிதான், ஆனால், மன்னர் குடும்பத்திற்கான சடங்கை நிறைவேற்ற அவர்களது குடும்ப நிதியிலிருந்துதானே பணம் பெறப்பட்டிருக்க வேண்டும். ஏன் மக்கள் பணத்தை எடுத்து மன்னர் குடும்பத்தினருக்குச் செலவழிக்க வேண்டும் என்கிறார் 60 வயது கொய்சி ஷின். இவரது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாமலில்லை. அடுத்த மன்னரும் பட்டத்து இளவரசருமான அகிஷினோகூட இதேவிதமான கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார். அவரென்ன கூறியிருக்கிறார் என்றால், இம்மாதிரியான சிறு சடங்குகளை நிறைவேற்ற மன்னர் குடும்பத்து நிதியையே பயன்படுத்தலாமே! எதற்கு மக்கள் பணத்தை பயன்படுத்திக்கொண்டு என்றிருக்கிறார். ஆயினும் இந்த எதிர்ப்பானது 1990-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது பெருமளவில் குறைந்திருக்கிறது என்பதையும் கொய்சி ஷின் ஒப்புக்கொள்கிறார். ஏனெனில், 1990-ஆம் ஆண்டில் இந்தச் சடங்கை எதிர்த்து 1,700 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால், இப்போதோ வெறும் 318 பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்