அரேபிய துயரம்!
"யேமன் நம் கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது; அதை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது' என


"யேமன் நம் கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது; அதை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது' என சில தினங்களுக்கு முன்பு வேதனையுடன் சொன்னார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் -கி- மூன். பாதுகாப்பு நிலவரங்களைக் காரணமாகக் கூறி, அடுத்தடுத்த நாள்களில் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் யேமனில் உள்ள தமது தூதரகத்தை அவசர அவசரமாக மூடுவதாக
அறிவித்து, ஊழியர்களை வெளியேற்றின. வழக்கமான உள்நாட்டுப் போர்தான் யேமனின் சீர்குலைவுக்குக் காரணம் எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால்,
உண்மையில் நடப்பது என்ன?
தென்மேற்கு ஆசிய நாடான யேமன், அரபு உலகிலேயே ஏழ்மையான ஒரு தேசம். சுமார் 2.38 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இதன் தலைநகரம் சனா. அரசுப் படையினர், ஹூதி எனப்படும் கிளர்ச்சிப் படையினர், அல்-காய்தா பயங்கரவாதிகள் ஆகியோர் இடையிலான முக்கோணச் சண்டையை வெறுமனே உள்நாட்டுப் போர் என்று சுருக்கிவிட முடியாது. இந்த உச்சகட்ட அரசியல் குழப்பத்துக்குப் பின்னணியில் அமெரிக்கா, சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளின் தலையீடும் உள்ளது.
பிரச்னை ஆரம்பித்தது எங்கே?
அதிபர் ஆட்சி முறையைக் கொண்ட யேமனில் 2011, ஜனவரியில் ஆரம்பித்தது இந்த அரசியல் குழப்பம். தலைவிரித்தாடிய வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றை எதிர்த்தும், அப்போதைய அதிபர் அலி அப்துல்லா சலே, தானே தனது ஆயுள் முழுவதும் அதிபராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் சாசன சட்டத்தை திருத்த முயன்றதையும் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, யேமனில் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்காக, நாட்டின் கட்டுப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பி தலையிட்டது அமெரிக்கா. இதைத்தொடர்ந்து, அதிபர் பொறுப்பை துணை அதிபர் அப்து ரப்பு மன்சூர் ஹாதியிடம் ஒப்படைத்தார் அலி அப்துல்லா.
இதற்கிடையே, வடக்கு யேமனில் பிரிவினைக் குழுக்களுக்கு இடையிலான மோதல், அல்-காய்தாவின் ஊடுருவல், ஹெளதி படையின் எழுச்சி காரணமாக அதிபர் அப்து ரப்பு மன்சூர் ஹாதி, பிரதமர் காலித் பஹா தலைமையிலான அமைச்சரவை கடந்த ஜனவரி 22இல் பதவி விலகியது. தொடர்ந்து தலைநகரில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர், அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய ஹூதி படையினர், பிப்ரவரி 6ஆம் தேதி புதிய அரசை அமைத்ததாக அறிவித்தனர். ஆனால், யேமனில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதை நிராகரித்தன. இந்தச் சூழ்நிலையில்தான் யேமனின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், மீண்டும் அதிபர் ஹாதியிடமே நாட்டின் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
புரட்சியா? சதியா?
அரசைக் கைப்பற்றியதை புரட்சி என ஹூதி படையினர் கூறும் வேளையில், அதை சதி என்கின்றன யேமனின் அரசியல் கட்சிகள். ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாட்டில்,
அரசுக்கும் ஹெளதி படையினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, தலைநகரை முற்றுகையிட்டு அரசைக் கைப்பற்றிக்கொண்டதாக ஹூதி படைமீது குற்றம்சாட்டப்படுகிறது.
தலைதூக்கும் அல்-காய்தா
இந்நிலையில், யேமனில் நிலவும் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, அல்-காய்தா பயங்கரவாதிகள் வலுப்பெற்று வருவது அமெரிக்காவை கவலையடையச் செய்துள்ளது.
தென்கிழக்கு யேமனில் சப்வா மாகாணத்தில் உள்ள ராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவு தலைமையகத்தை அல்-காய்தா பயங்கரவாதிகள் சில தினங்களுக்கு முன்னர்
கைப்பற்றியது, அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, அரசை தாற்காலிகமாகக் கைப்பற்றியுள்ள ஹூதி படையினருக்கும் ஒரு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
அல்-காய்தாவின் ஒரு பிரிவான "அரேபிய தீபகற்ப அல்-காய்தா' என்ற அமைப்பு யேமனில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை ஹெளதி படையும் எதிர்த்து சண்டையில் ஈடுபட்டு வருகிறது.
தலையிடும் ஈரான், சவூதி
யேமனின் அரசுப் படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகக் கூறப்படும் அதே வேளையில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி படையினருக்கு ஆயுதங்கள், ஆயுதப்
பயிற்சி, நிதியுதவி அளிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், ஈரான் இதை மறுத்துள்ளது. அரபு தேசத்தின் பணக்கார நாடான சவூதி அரேபியாவின் நெருங்கிய
கூட்டாளி யேமன். யேமனில் செயல்படும் அல்-காய்தா பயங்கரவாதிகள் சவூதியிலும் தாக்குதலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், யேமனில் உள்ள சில பழங்குடிப்
படைகளுக்கு தனது தெற்கு எல்லை வழியாக நிதியுதவி அளிப்பதாக சவூதி மீது குற்றச்சாட்டு உண்டு.
எண்ணெய் மீது கண்
யேமனின் வருவாயில் 75 சதவீதம் எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. அதிலும் தலைநகர் சனாவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இருக்கும் "மாரிப்' என்ற பகுதியே
எண்ணெய் வளம் மிகுந்தது. நாட்டின் எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் 70 சதவீதம் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. தலைநகரைக் கைப்பற்றியுள்ள ஹூதி படை,
அடுத்ததாக இந்த மாரிப் பகுதியையே குறிவைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் வலுவாக உள்ள பழங்குடிப் படைகள் அதற்கு கடும் எதிர்ப்பைத் தரக்கூடும்.
அந்தப் பழங்குடிப் படைகளுக்குத்தான் சவூதி அரேபியா உதவி செய்கிறது.
அரபு சூறாவளி
யேமனில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீர, அரசியல் அதிகாரப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து முயன்று வருகிறது. சிக்கல் நிறைந்த
அந்தப் பேச்சுவார்த்தை எப்போது நிறைவு பெற்று தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குறி.
துனீசியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, சிரியாவில்
2010-11இல் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆயுத மோதலை "அரபு வசந்தம்' என வர்ணித்தன மேற்கத்திய ஊடகங்கள். அதே காலகட்டத்தில் யேமனிலும்
வசந்தம்போலத் தொடங்கிய, அரசுக்கு எதிரான போராட்டம் இன்று சூறாவளியாக மாறியுள்ளது. வழக்கம்போல சிக்கி எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கின்றனர் யேமன் மக்கள்.
முக்கியத்துவம் ஏன்?
யேமன் ஒன்றும் குவைத்போல பணக்கார நாடு அல்ல. அதன் எண்ணெய் வளமும் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால், அரபு
நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையானது. இருந்தும் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கு கூட்டாளிகளுக்கு யேமன் மீது ஏன் இத்தனை அக்கறை?
அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்கு மூலையிலும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த
"பாப் எல் மாந்தேப்' நீரிணைக்கு வலது பக்கமும் அமைந்துள்ளது யேமன். மத்திய கிழக்கையும் ஆப்பிரிக்காவையும் பிரிப்பது இந்த நீரிணைதான்.
ஆண்டுதோறும் இந்த நீரிணை வழியாகச் செல்லும் 20,000 கப்பல்கள் இந்தியப் பெருங்கடல், செங்கடல், சூயஸ் கால்வாய் இடையே கடந்து செல்கின்றன. அத்தனை வணிக
முக்கியத்துவம் பெற்றுள்ளதால்தான் யேமனில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகிறது அமெரிக்கா.
கல்வி கேள்விக்குறி
யேமனில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் ஏற்கெனவே மோசமாக உள்ள நிலையில், இப்போதைய அரசியல் குழப்பத்தால் அது மேலும் தீவிரமடைந்துள்ளது. நாட்டின்
மக்கள்தொகையில் 61 சதவீதம் பேர், அதாவது 1.6 கோடி மக்கள் உணவு, உடை, இருப்பிடம் என மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கி உள்ளனர். 9 லட்சம் குழந்தைகளின்
கல்வி கேள்விக்குறியாகி, அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...