சூரியப் புயல் பூமியைத் தாக்குமா?
2012ஆம் ஆண்டில் அதிதீவிரமான சூரியப் புயல் பூமியைத் தாக்கப்போகிறது என்றும், அத்துடன் உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.


2012ஆம் ஆண்டில் அதிதீவிரமான சூரியப் புயல் பூமியைத் தாக்கப்போகிறது என்றும், அத்துடன் உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால், சூரியப் புயலே ஏற்பட்டாலும் பூமிக்கு ஆபத்து நேராது என நாசா விளக்கம் அளித்தது. அதேபோன்ற சூரியப் புயல் அபாயம்குறித்த பரபரப்பு இந்த ஆண்டும் எழுந்துள்ளது. வருகிற டிசம்பர் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை 6 நாள்கள், சூரியப் புயலால் பூமி இருளில் மூழ்கப் போகிறது என்று ஓர் இணையதளம் வெளியிட்ட செய்தியால் எழுந்த பரபரப்பு அது. இதையும் நாசா திட்டவட்டமாக மறுத்துள்ளது, என்றாலும், சூரியப் புயல் குறித்த விவாதங்களும், விஞ்ஞானிகளின் கருத்துகளும் இணைய உலகை நாள்தோறும் புரட்டி எடுக்கின்றன.
அது என்ன சூரியப் புயல்?
சூரியன் எந்த நேரமும் காந்தப் பண்புகள் அடங்கிய மாபெரும் வாயு வெடிப்பை (SOLAR FLARE) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்படும் பெரு வெடிப்பு நிகழ்வான, தீவிர உயர் ஆற்றல் கதிர்வீச்சு வெடிப்பும் (CORONAL MASS EJECTION) சேர்ந்துகொள்ளும்போது, அது சூரியப் புயல் என அழைக்கப்படுகிறது. சூரியப் புயலின்போது அதிதீவிர வெப்ப ஆற்றலானது சூரியனின் மேற்பரப்பிலிருந்து விண்வெளியை நோக்கி எறியப்படுகிறது.
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் கரும்புள்ளிகளே (SUN SPOT) வாயு வெடிப்புக்கு வழிவகுக்கின்றன. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி சூரியனில் ஒரு மாபெரும் கரும்புள்ளி தோன்றியது. ஏஆர் 12192 என்ற பெயரிட்டு விஞ்ஞானிகள் குறிப்பிட்ட அந்தக் கரும்புள்ளியானது பூமியின் விட்டத்தைவிட 10 மடங்கு பெரியது. கடந்த 25 ஆண்டுகளில் தோன்றிய பெரிய கரும்புள்ளி. இது 6 பெரும் வாயு வெடிப்பை ஏற்படுத்தினாலும், தீவிர உயர் ஆற்றல் கதிர்வீச்சு வெடிப்பை ஏற்படுத்தவில்லை.
பூமிக்கு ஆபத்தா?
1859ஆம் ஆண்டுதான் மாபெரும் சூரியப் புயல் உருவானது.ஹாரிங்டன் நிகழ்வு என அழைக்கப்பட்ட (ஆங்கில வானியலாளர் ஹாரிங்டன், அந்த சூரியப் புயலுக்கு முந்தைய வாயு வெடிப்பைக் கண்டறிந்ததால் அந்தப் பெயர்) அந்த சூரியப் புயலின்போது, ஹிரோசிமா நகரம் மீது வீசப்பட்ட அணுகுண்டைப் போல 10 பில்லியன் அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததற்குச் சமமான ஆற்றல் சூரியனிலிருந்து வெளிப்பட்டது. அதேவேளையில், ஒரு டிரில்லியன் கிலோ மின்னூட்டத் துகள்கள் விநாடிக்கு 3 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வீசப்பட்டன. அந்த சூரியப் புயல் பூமியில் மனிதர்களை நேரடியாகத் தாக்கவில்லை. எனினும், 93 மில்லியன் மைல் தொலைவை 17.6 மணி நேரத்தில் கடந்து பூமியின் காந்தப்புல பாதையைத் தாக்கியது. இத்தாக்குதலால் ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் தந்திக் கருவிகள் முற்றிலும் செயலிழந்தன.
முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த இன்றைய உலகில் சூரியப் புயல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்குப் பதில் அளிக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த, சூரியக் கதிர்வீச்சு வெடிப்பு நிபுணர் மற்றும் ஜார்ஜியா மாகாண பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் பீட்ரஸ் மார்ட்டென்ஸ்.
"சூரியப் புயல் பூமியின் காந்தப் புலப் பாதையைத் தாக்கினால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஜி.பி.எஸ். அளவீடுகளில் மாறுபாடு ஏற்படும்.
இது ஒன்றும் பெரிய தாக்கம் இல்லை என்றாலும், ராணுவப் பயன்பாட்டில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, ஆளில்லா விமானத் தாக்குதலின்போது, ஜிபிஎஸ் அளவீடு மாறுபாட்டால் இலக்கு தவறும். நீண்ட எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் அரிப்பானது அதிகரிக்கும். அதிசக்தி வாய்ந்த சூரியப் புயல் தாக்குதலின்போது, பூமியில் உள்ள மின்சாரக் கட்டமைப்புகளும் பாதிக்கப்படக்கூடும்'' என்கிறார் அவர்.
சூரியப் புயல் இப்போது தாக்கினால், அமெரிக்காவில் மட்டும் 0.6 முதல் 2.6 டிரில்லியன் டாலர் வரை சேதம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வடிவமைப்பு: எஸ். நாராயணன்
இல் நடந்தது என்ன?
2012ஆம் ஆண்டு பூமி அழியப்போகிறது என்பதை மையமாக வைத்து 2009ஆம் ஆண்டு ஒரு ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. சூரிய வாயு வெடிப்பினால் ஏற்படும் நியூட்ரினோக்களால் பூமியின் மைய வெப்பம் அதிகரித்து உலகம் அழியப்போவதாக சித்திரித்தது அந்தத் திரைப்படம். அது ஏன் 2012ஆம் ஆண்டுக்கு அத்தனை முக்கியத்துவம்? 2012ஆம் ஆண்டில் சூரியப் புயல் பூமியைத் தாக்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்திருந்தனர். அதன்படி, 2012, ஜூலை 23ஆம் தேதி சூரியப் புயல் ஏற்பட்டது. ஆனால், அது பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழையாததால், பூமிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், அந்தக் கதிர்வீச்சு வெடிப்பு மட்டும் ஒரு வாரம் முன்னர் நிகழ்ந்திருந்தால் பூமியில் பெரும் பாதிப்பு நிகழ்ந்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஏற்படுமா?
1859இல் ஏற்பட்டதைப்போன்ற சூரியப் புயல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன்படி பார்த்தால் அடுத்த சூரியப் புயல் இன்னும் 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடும்.
"சூரியப் புயல் கணிக்க முடியாதது; நம்ப முடியாத சக்தி வாய்ந்தது' என்பது அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி இயற்பியல் துறை நிபுணர் டேனியல் என்.பாக்கரின் கருத்து. ஆம், இயற்கையே நம்ப முடியாத சக்தி வாய்ந்ததுதானே.
முன்கூட்டியே அறிய முடியுமா?
சூரியப் புயலை முன்னரே நாம் கணிக்க முடியாது. ஆனால், சூரியனில் அது உருவான சில நிமிடங்கள் கழித்து நாம் கண்டறிய முடியும். சூரியப் புயலின்போது விண்வெளியை நோக்கி வீசியெறியப்படும் மின்னூட்டத் துகள்கள் பூமியை அடைய 2 முதல் 3 நாள்கள் ஆகும்.
சூரியனில் எந்தப் பகுதியில் அது ஏற்பட்டது என்பதை வைத்து, அது பூமியைத் தாக்குமா இல்லையா என்பதை அறியலாம்
-இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர், அர்னாப் ராய் சௌத்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...