/

மங்களம் தரும் கோலவிழி அம்மன்

அம்மன் எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன காட்சி தருகின்றன.

News image
Updated On :26 ஜூலை 2024, 12:25 pm

பனையபுரம் அதியமான்

"கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலை, சித்திரைத் திருநாளுக்கு மதுரை, ஆருத்ராவுக்கு சிதம்பரம்..' என்ற வரிசையில் அறுபத்துமூவர் விழாவுக்கு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிறப்புத் தலமாக விளங்குகிறது.

பங்குனிப் பெருவிழாவின் அங்கமாக நடத்தப்படும் இந்த விழாவுக்குத் தொடக்கமாக, முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது கோலவிழி அம்மன் எனும் பத்ரகாளி கோயிலாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலைநயமிக்க சோழர் காலத்தை சேர்ந்த நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. சோழர் காலத்தைச் சார்ந்த இந்தக் கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில், 1981}ஆம் ஆண்டில் மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகள் ஆதரவுடன் அடியார்கள் திருப்பணிகளை மேற்கொண்டனர். 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்டது என்பது சித்தர் வாக்கு.

"தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் கோயிலும் கோலவிழியம்மன் கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது.

வடக்கு திசை நோக்கி எளிய நுழைவாயிலுடன் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர், அரசமரத்தடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட சந்நிதிகள் அமைந்துள்ளன.

அம்மன் எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரம்மாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக கோலவிழி அம்மனும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். அபிஷேக, ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம், ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன.

அமர்ந்த கோல அன்னையே கோலவிழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண்கரங்களில் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகிறாள். சிரசில் உள்ள தீ ஜுவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணிகளை அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் "பத்ரகாளி' என்பதாகும்.

"பத்ர' என்பதற்கு "மங்களம்' என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இவள் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள்.

அன்னையின் சிறப்பே அவளின் கோலவிழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி "கோலவிழி அம்மன்' என்றால் அது மிகையல்ல.

திருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி, ராகு தோஷம் உள்ளிட்டோருக்கு கண்கண்ட தெய்வமாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள்.

தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்துக்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சென்னை கடற்கரைச் சாலையில், கலங்கரை விளக்கத்துக்கு தென்மேற்கே அரை கி.மீ. தொலைவில், கபாலீசுவரர் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் அரை கி. மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.