சரஸ்வதியின் அருளாட்சி
கோயில்கள் நிறைந்த தென்னகத்தில், சிறப்பாக சோழநாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் கூத்தனூரில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியாக அருளாட்சி புரிகிறார் அம்பாள்.


கோயில்கள் நிறைந்த தென்னகத்தில், சிறப்பாக சோழநாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் கூத்தனூரில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியாக அருளாட்சி புரிகிறார் அம்பாள்.
இந்த ஊர் முன்பு "அம்பாள்புரி' என அழைக்கப்பட்டதாக திலதைப்பதி புராணம் தெரிவிக்கிறது. "ஹரி நாகேஸ்வரம்' என்ற பெயரும் உண்டு. மாமன்னன் இரண்டாம் ராசராசன், அவைப் புலவரான ஒட்டக் கூத்தருக்கு இந்த ஊரைப் பரிசாக வழங்கினார். அதனால் கூத்தன் ஊர் - கூத்தனூரானது. அம்பாள்புரியை தன் இடமாகத் தேர்வு செய்து தவம் புரிகிறாள் வேதமாதா. காளிதாசனுக்கு சம்பூர்ண ராமாயணம் பாட அருள் செய்தவள், கம்பனுக்காக கிழங்கு விற்றவள், தயிர் கடையும் பெண்ணாகத் தோன்றியவள், தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க உதவியவள், ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரசவாணியாய் அவதரித்த நா மகள். பக்தனை ஆட்கொள்ள விரும்பி தாசி வடிவம் கொண்டாள்.
ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளைப் பூசித்ததால் மகிழ்ந்த நா மகள், தன் வாய்த் தாம்பூலத்தைக் கொடுத்து வரகவியாக்கினாள். சங்கமர்கள் ஒட்டக் கூத்தரைக் கொல்ல முயன்றபோது, அவர் காளி கோயிலுக்குள் நுழைந்தார்.
பரணி நூல் பாடினால் விட்டுவிடுவதாகச் சொன்னார்கள். அதையடுத்து, அவர் பரணி நூல் பாடியதாகவும் அதற்குத் துணைபுரிந்த நா மகளை "ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய' எனப் பாடியதாக வரலாறு உண்டு. அவர் பாடிய பல பாடல்களின் இறுதியில் "வாணித்தாயே' என்று முடிவதையும் காணலாம்.
பிறவியிலேயே பேசும் திறனற்றவர் கும்பகோணம் சாரங்கபாணி தீட்சிதர் மகன் புருஷோத்தமன். இவர் அம்பாள்புரியில் கடும் தவம் இயற்றியதால் மகிழ்ந்த அம்பாள் தன் கருணையையும் அருளையும் இழைத்து உருவாக்கிய தாம்பூலத்தை வாயில் தரித்து, விஜயதசமியன்று புருஷோத்தமனை தாசி வடிவத்துடன் அடைந்தாள். அன்று முதல் அவர் புருஷோத்தம பாரதியானார். அவர் கோயிலுக்கு கும்பாஷேகமும் செய்தார்.
காஞ்சிப் பெரியவரால் "அன்னதானப் பிரபு' என அழைக்கப்பட்ட ராமானந்த யதீஸ்வரர் சரஸ்வதியை வழிபட்டு 25 ஆண்டுகளுக்கு முன் மகாசமாதி அடைந்தார். இந்தச் சமாதி சிவன் கோயிலின் தென்புறத்தில் கமலாட்சி அம்மன் சந்நிதிக்கு நேராக உள்ளது.
மாணவ, மாணவியர் தேர்வுக்குச் செல்லும் முன்னர் பேனா முதலியவற்றை அம்பிகையின் மடியில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் கல்விக்கான யாகத்தில், சுமார் 4,000 பேர் வரை பங்கேற்கின்றனர்.
வெள்ளுடை தரித்து வெண்டாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அவளின் இடது கீழ்க்கையில் புத்தகமும், வலது கீழ்க்கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி ஜடா முடியுடன் துடியிடையும் கருணைபுரியும் விழிகளும் "ஞான சரஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் புன்னகையுடன் கூடிய திருவாயுடனும் அருள் புரிகிறாள்.
சரஸ்வதியின் தோற்றம் சௌந்தர்ய லஹரியில் 15}ஆம் பாடலில் கூறியுள்ளபடி அமைந்துள்ளது. கோயிலில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் சரஸ்வதிக்கெனத் தனியாக உள்ள கோயில் இது மட்டுமே. இக்கோயிலில் வஸந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
சாரதா நவராத்திரியின் 12 நாள்களும், பின்பத்து நாள்கள் ஊஞ்சள், மஞ்சள் காப்புகள், புஷ்ப அலங்காரம் என பல்வேறு அலங்காரங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜையன்று நியமத்துடன் இருந்து அம்பிகையின் பாதங்களில் பக்தர்களே மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.
விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாப்பியாசம் செய்த பிறகே பள்ளிகளில் சேர்க்கின்றனர். அப்போது மஹன்யாச ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு பல்வேறு இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான உற்சவம் வரும் அக். 10 முதல் தொடங்குகிறது. மாதம்தோறும் பௌர்ணமியன்று மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.
தொடர்புக்கு - 93633 13636.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...