/

தொழிலாளரை மதித்து போற்றுவோம்

அமெரிக்காவின் ஆதி குடிமக்களையும் பிற நாடுகளிலிருந்து அழைத்து வந்த கொத்தடிமைகளையும் உண்ண உறங்க ஓய்வு தராது ஓயாது உழைத்து

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

மு. அ. அபுல் அமீன்

அமெரிக்காவின் ஆதி குடிமக்களையும் பிற நாடுகளிலிருந்து அழைத்து வந்த கொத்தடிமைகளையும் உண்ண உறங்க ஓய்வு தராது ஓயாது உழைத்து துடிதுடிக்க சாகடித்து கொண்டிருந்த இரக்கமற்ற அரக்க குணம் படைத்த கொடிய முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி சிகாகோ நகரின் தெருக்களிலே குருவிகளைச் சுடுவது போல சுட்டு வீழ்த்தி கொல்லப்பட்ட தொழிலாள தியாகிகளின் ரத்தம் ஆறாக பெருகி ஓடியதாக வரலாறு கூறுகிறது. அத்தொழிலாள தியாகிகளின் நினைவு நாளே மே மாத முதல் நாளாம் தொழிலாளர் நாள். அன்றைய போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஒரே கோரிக்கை ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்பதே. அன்றைய அந்த போராட்டத்தின் விளைவே இன்றைய எட்டு மணி நேர வேலை என்பதை என்றும் மறக்க முடியாது. 
ஆத்திசூடியில் ஐயமிட்டு உண்ண சொன்ன ஒளவையார் ஏற்பது இகழ்ச்சி என்று உழைத்து உண்ண சொன்னார். மா நபி (ஸல்) அவர்களும் உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்று விறகு கட்டை முதுகில் சுமந்து வந்து விற்று பொருளீட்டுவது பிறரிடம் கையேந்தி இரப்பதினும் மேலானது. கேட்கப்படுவர் கொடுத்தாலும் கொடுக்கலாம். மறுக்கவும் செய்யலாம் என்று செப்பியதைச் செவிமடுத்து அறிவிக்கிறார் அபூ அப்தில்லாஹ் ஜுபைர் பின் அவாம் (ரலி) நூல்- புகாரி. யாச்கம் என்ற வாயிலை ஒருவன் திறந்தால் அவனுக்கு அவ்வாயில் வழியே தரித்திரம் - வறுமை வரும். நன்னோக்கத்தோடு நாடிய பொருளை முயன்று உழைத்து தேடுவது உயர்ந்தது.
தொழுகை நிறைவேற்றப்பட்டால் பூமியில் பரந்து சென்று பொருள் தேட புகல்கிறது புர்கானின் 62-10 -ஆவது வசனம். தொழுகை முடிந்ததும் அவரவரின் வியாபாரம் வேலை அலுவல்களுக்குச் செல்ல அறிவுறுத்துகிறது இந்த வசனம். இறை வணக்கத்திற்குப் பிறகு இரையை இரக்காமல் இயன்றவரை முயன்று ஈட்டுதல் இறை கட்டளையை முறையாய் கடைபிடித்த நிறைவைத் தரும்.
ஈசா நபியைப் பெற்ற பிரசவ வேதனையின்பொழுது அன்னை மரியம் அவர்களுக்கு பசியும் தாகமும் வாட்டியது. அன்னை மரியம் இறைவனை இறைஞ்சிய பொழுது ஈச்சமரத்தின் கிளையை பிடித்து உலுக்குமாறும் விழும் பழத்தை எடுத்து உண்ணவும் அருகில் உள்ள ஊற்றுக்குச் சென்று நீர் அருந்தவும் அசரீரி ஒலித்தது. மரக்கிளையை உலுக்குமாறும் நீர் ஊற்று நோக்கி செல்லுமாறும் செப்பியது 19-23 முதல் 26 வரை உள்ள வசனங்கள் செப்பியது உழைத்து உண்ண வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. முயலாமல் முடங்கி கிடந்தால் உழைக்காது உறங்கினால் உணவும் கிடைக்காது; தாகமும் தீராது. 
குர்ஆனில் குறிப்பிடப்படும் தூதரல்லாதவர் இருவர். ஒருவர் லுக்மான் மருத்துவ தொழில் செய்தார். மற்றொருவர் துல்கர்னைன் புகழ்மிக்க போர் வீரராக விளங்கினார். இவ்வுலகத்தைத் திருத்த பொருத்தமான போதனைகள் புரிந்த இறைதூதர்களான நபிமார்கள் பலர். அவர்களில் குர்ஆனில் குறிப்பிடப்படுபவர்கள் இருபத்தி ஆறு. முதல் மனிதன் - முதல் நபி ஆதம் அவர்கள். முதல் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களும் பிறரிடம் பொருள் வேண்டாது உழைத்தே பிழைத்தனர். ஆதம் நபி - வேளாண்மை, நெசவு தொழில். நூஹ் நபி - நரையின்றி ஒரு பல்லும் விழாமல் வலுகுறையாது ஆயிரம் ஆண்டுகள் தச்சு தொழில் செய்து வாழ்ந்தார்கள். லூத் நபி - வேளாண்மை தொழில், இப்ராஹீம் நபி, யாகூப் நபி, அல்எஸவு நபி ஆகிய மூவரும் கால்நடை பண்ணையைப் பராமரித்து பொருள் ஈட்டினர். சாலிஹ் நபி ஒட்டக பண்ணையும், சுஐபி  நபி ஆட்டு பண்ணையும் நடத்தினர். இஸ்ஹாக் நபி வேட்டையாடும் தொழில். இஸ்மாயில் நபி, அய்யூப் நபி, இல்யாஸ் நபி, முஸம்மது நபி (ஸல்) ஆகிய நால்வரும் துணி வணிகம் செய்தனர்.
மூசா நபி பொற்கொல்லர் தொழில் செய்தார்கள். ஹூது நபி, யூனூஸ் நபி- தானிய வணிகம் செய்தனர். இத்ரீஸ் நபி தையல் தொழில் செய்தார்கள். ஹாரூன் நபி நகை வியாபாரம் செய்தார்கள். துல்கிப்ல் நபியும் மருத்துவத்தொழில் புரிந்தனர். தாவூது நபி அரசராக இருந்தார்கள். அரசு கருவூலத்திலிருந்து அவர்களின் குடும்ப தேவைக்குப் பணமோ பொருளோ எடுத்துக்கொள்ள வில்லை. ஒவ்வொரு நாளும் ஓர்உருக்குச் சட்டை உற்பத்தி செய்து சுமார் நான்காயிரம் திர்ஹங்களுக்கு விற்று இரண்டாயிரம் திர்ஹங்களைக் குடும்ப செலவுக்கு எடுத்துக்கொண்டு மீதி இரண்டாயிரம் திர்ஹங்களைத் தர்மம் செய்தார்கள். இதனை, 34-11 -ஆவது வசன விளக்கம் விரிவாக கூறுகிறது. உழைப்பவர்களுக்கு மட்டுமே உழைப்பின் உயர்வு தெரியும். அதனாலேயே வழி காட்ட வந்த நபிமார்கள் உழைத்து சம்பாதித்து உயிர் வாழ வைத்தான் அல்லாஹ்.
பிறரிடம் கையேந்தாமல் பாங்கு தொழுகை அழைப்பு ஒலிப்பதற்கு, உபதேசம் செய்வதற்கு, கல்வி கற்பிப்பதற்கு இதுபோன்ற பணிகளுக்கு ஊதியம் பெறலாம் என்று புத்தூஹாத்துல் மக்கியா என்னும் நூலில் 25-57 -ஆவது வசனத்திற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. உழைத்து பிழைக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டும் விளக்கம், மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்த பின்னும் மாநபி (ஸல்) அவர்களுடன் தொடர்ந்து போர்புரிய புறப்பட்டு வந்தனர் மக்கத்து குறைஷிகள். அந்த கொடூரர்களின் கொடிய போர் தொல்லையைத் தடுக்க எல்லையில் அகழ் வெட்டும் அரிய ஆலோசனையை வழங்கினார் பார்ஸி (ரலி). அவ்வாறு அகழ் வெட்டும் பொழுது உணவு உரிய நேரத்தில் கிடைக்கவில்லை, முதலாளி, தொழிலாளி, வேலையாள், அதிகாரி என்று எந்த வேறுபாடும் இல்லாது தலைவராக தளபதியாகவும் இருந்த தாஹா நபி (ஸல்) அவர்கள் தோழரோடு தோழராக நின்று அகழ் வெட்டினார்கள். வருத்தும் வயிற்றுப் பசியைக் கட்டுப்படுத்த வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள்.
முகலாய மன்னர் சாஜஹான் அவரிடம் பணிபுரிந்த எந்த ஊழியரையும் தொழிலாளியையும் ஒருமையில் உழைக்க மாட்டார். தொழிலாளர்களுக்குக் தோழமை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மரியாதை கொடுத்தார்.
தொழில் வளர்ச்சியே நாட்டை முன்னேற்றும். தொழில் வளர்ச்சிக்குத் துணை புரிபவர்கள் தொழிலாளர்களே. தொழிலாளர் நாளில் தொழிலாளரை மதித்து போற்ற உறுதி பூணுவோம்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.