/

புலரும் புத்தாண்டில் மலரும் மகிழ்வு 

ஹிஜ்ரி 1441-ஆம் ஆண்டின் இறுதி ஐந்து மாதங்கள் கரோனா தீநுண்மித் தோற்றால் ஊரடங்கி, பொருளாதாரம் முடங்கி உலகமே நிலை குலைந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

மு. அ. அபுல் அமீன்

ஹிஜ்ரி 1441-ஆம் ஆண்டின் இறுதி ஐந்து மாதங்கள் கரோனா தீநுண்மித் தோற்றால் ஊரடங்கி, பொருளாதாரம் முடங்கி உலகமே நிலை குலைந்தது. ஹிஜ்ரி 1442-இல் கரோனா தீநுண்மி உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிந்து, வேறு நோய்களோ, பேரிடர்களோ ஏற்படாது தொடரும் புத்தாண்டில் மலரும் மகிழ்வு.
அல்லாஹ் அளித்த மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானத்தையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனுடைய பதிவேட்டில் உள்ளது என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 9 : 36 -ஆவது வசனம்.
அறியாமை கால அரேபியர் சந்திர ஆண்டைக் கணக்கிட்டாலும், அவர்களின் வசதி விருப்பத்திற்கேற்ப ஆண்டிற்கு 13 அல்லது 14 மாதங்களாக அதிகரித்துக் கொள்வர். ஹஜ் முதலிய முக்கிய மாதத்தைக் கூட அவர்களின் ஆசைக்கேற்ப மோசடியாக மாற்றிக் கொள்வர். இதனை மறுத்தே மேற்குறித்த வசனம் அருளப்பட்டது; நூல் - பத்ஹுல் பாரீ, அல்மின் ஹாஜ்.
காலம் என்பது துவக்கத்தில் அல்லாஹ் எப்படி படைத்தானோ அப்படியே உள்ளது. அறியாமை கால அரேபியரின் காலத்தைத் துரிதப்படுத்தல், தாமதித்தல், கூட்டல், குறைத்தல், மாற்றல், தள்ளி வைத்தல் முதலிய தகாத நிகழ்வுகள் அரேபியரின் அறியாமை நீங்கலோடு நீங்கிவிட்டது; நூல் - தப்ஸீர் இப்னு கதீர் 9 : 36 -இன் விளக்கம்.
அல்லாஹ் சூரியனை ஒளி வீசக் கூடியதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கியுள்ளான். நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்குப் பல நிலைகளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்று இயம்புகிறது 10 : 5 -ஆவது வசனம்.
பகலில் சூரியன் ஒளி வீச, இரவில் சந்திரன் இருள் நீக்கும். இள ஒளி - நிலவொளியை வழங்க அருளுகிறான் இறைவன். சந்திரனுக்குப் பல நிலைகள் உண்டு. துவக்கத்தில் மெல்லிய கீற்றாகத் தோன்றி, ஒளியும் வடிவும் படிப்படியாக அதிகரித்து முழுநிலா ஆகிறது. பின்னர் குறையத் தொடங்கி பழைய நிலைக்குத் திரும்புகிறது.
சந்திரன் பூமியின் ஒரே துணைக்கோள். பூமிக்கும் நிலவுக்கும் இடையில் 3,84,000 கி.மீ. தொலைவுள்ளது. இது பூமியை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பே நிலவு. சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 295 நாள்கள் ஆகின்றன. அதே காலத்தில் சந்திரன் பூமியையும் சுற்றுகிறது. சந்திரன் தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றுகிறது. 
இதனால் நிலவின் ஒரு பக்கம் மட்டுமே நமக்குத் தெரியும். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பொழுது வெவ்வேறு கோணங்களில் சூரியன் அதற்கு ஒளியூட்டுவதால் பிறை நிலா அமாவாசையிலிருந்து பெüர்ணமி வரை வெவ்வேறு அளவில் தெரிகிறது; நூல்-பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்.
29 நாள்கள் கொண்ட சந்திர மாதத்தில் ஒரு நாளும், 30 நாள்கள் கொண்ட மாதத்தில் இரு நாள்களும் நிலா தெரியாது; நூல்-தப்ஸீர் அல்மனார்.
உலகில் சகாப்தங்கள் சரித்திர சாதனைகளைச் சார்ந்ததாக அமையும். வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த வரலாற்றைத் திருப்பிய நிகழ்ச்சிகளின் நினைவாய் அமைவதே ஆண்டு துவக்கம். அந்த ஆண்டு மீண்டும் மீண்டும் துவங்கும் பொழுது அந்த நிகழ்ச்சியும் நினைவு கூரப்
படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர்கள் வாழ்வில் இணைந்தது ஹிஜ்ரத்.
முதல் நபி ஆதம் வானிலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டது முதல் ஹிஜ்ரத். நூஹ் நபியும் அவர்களின் ஏக இறைக் கொள்கையை ஏற்றோரும் கப்பலில் ஏறி, வெள்ளம், பிரளயத்திலிருந்து தப்பித்து ஜூதி மலைக்குச் சென்று சேர்ந்ததும் ஹிஜ்ரத். ஹூது நபி ஏக இறைக் கொள்கையை ஏற்க மறுத்த ஆது கூட்டத்தினரை விட்டகன்று, வாதியுன் நூஹ் என்ற ஓடக் கரைக்குச் சென்று இறைவனைத் தொழுது வணங்கி, இறைவனை இறைஞ்சியதும் ஒருவகை ஹிஜ்ரத். இப்ராஹீம் நபி ஈராக்கை விட்டு எகிப்துக்குச் சென்றதும், எகிப்திலிருந்து பாலஸ்தீனம் சென்றதும் ஹிஜ்ரத்தே. லூத் நபி சதூம் பகுதிக்குச் சென்றதும், மூசா நபியும் அவர்களைப் பின்பற்றிய இஸ்ரவேலர்களும் நைல் நதியைக் கடந்து அக்கரை சென்றதும் ஹிஜ்ரத்தே. இவையெல்லாம் நபிகளின் வரலாற்று நிகழ்வுகள் நிகழ்வுகள் ஆகிவிட்டன.
இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மக்காவிலிருந்து மதினாவிற்குச் சென்ற பயணமான ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சகாப்தத்தை, ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கிவிட்டது. ஹிஜ்ரி 1442-ஆம் ஆண்டு இன்று (21. 8. 2020) பிறக்கிறது.
ஹிஜ்ரி 1442 -இல் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு நேராது ஒற்றுமையாக, ஒன்றுபட்டு உழைப்போம். இந்தியா உலக நாடுகளில் எல்லா துறைகளிலும் முன்னிலை பெற உறுதி ஏற்போம். உலகம் செழித்து உலக மக்களும் செம்மையாய் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.