/

நேயமாய் வளர தாய்ப்பால்

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

மு. அ. அபுல் அமீன்

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
பாலூட்டல் குழந்தையின் பசியைப் போக்குவது இயற்கை. புட்டிப் பாலினும் புகட்டும் தாயின் பால் தரும் பயன்கள் எண்ணற்றவை. எண்ணிப் பார்க்கும் எத்தாயும் பெற்ற குழந்தைக்குச் சுரக்கும் அத்தனை பாலையும் அன்போடு ஊட்டுவாள். தாய்ப்பால் குழந்தையின் ஆரம்ப வளர்ச்சியின் அடிப்படை. குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை விட சிறந்த உணவு உலகில் இல்லை. தாய்ப்பாலில் முதலில் வெளியாகும் மாவுச்சத்தும் அடுத்து வரும் கொழுப்புச் சத்தும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை. இத்தன்மையுடைய தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, சளி, கூடுதல் எடை, தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு கொழுப்புச் சத்து அதிகரிக்காது. எடை கூடாது. தாய்ப்பால் புகட்டுவது தாய்க்கு ஒரு உடற்பயிற்சி.
தாய் கர்ப்பத்தில் சுமந்து கடுமையான வலியில் பிரசவிக்கிறாள். கர்ப்பத்திலிருந்து குழந்தைக்குப் பால் குடிப்பு மறக்கடிக்கும் வரையில் முப்பது மாதங்கள் அவளுக்கு கடின காலம் என்று எடுத்துரைக்கிறது எழில் மறை குர்ஆனின் 46-15 -ஆவது வசனம். குழந்தை தாயின் வயிற்றில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருக்க வேண்டும். பால் குடிக்கும் காலம் இரு ஆண்டுகள். அதாவது 24 மாதங்கள். அதனால் இந்த வசனம் முப்பது மாதங்கள் என்று கணக்கிட்டதாக கருத்துரைக்கிறார் இப்னு அப்பாஸ் (ரலி).
தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஈராண்டுகள் வரை முழுமையாக பாலூட்ட பரிந்துரைக்கிறது பாருலக மக்களின் மாமறை குர்ஆனின் 2-233 -ஆவது வசனம். குழந்தையைச் சுமந்த தாய் குழந்தை பிறந்த பின் இரண்டு ஆண்டுகள் பால் கொடுப்பதைக் கூறி, பெற்றோருக்கு நன்றி செலுத்த நவில்கிறது புவி புகழ் குர்ஆனின் 31-14 -ஆவது வசனம்.
தாய்ப்பாலே நேயமான ஆய குணங்களைக் குழந்தைக்கு ஊட்டும். கூலிக்குப் பால் குடிக்கும் குழந்தையின் குணம், பால் கொடுக்கும் தாயின் குணத்திற்கேற்ப மாறும். செய்கு அபூ முஹம்மதினில் ஜுவைனி என்ற பெரியார் அவரின் குழந்தை அபுல் ம ஆலிக்கு அந்நியப் பெண் பால் கொடுப்பதைக் கண்டதும் மகனை அப்பெண்ணிடமிருந்து பறித்து வாயினுள் விரலை விட்டு குடித்த பாலைக் குழந்தை கக்குமாறு செய்தார். பெற்ற தாயே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட ஊக்கமளித்தார். அக்குழந்தை வளர்ந்து புகழ்பெற்ற அறிஞரானது. அறிஞர் இமாம் அபுல் ம ஆலி தர்க்க வாதம் புரிந்தபொழுது, சிலசமயங்களில் தக்க பதில் நினைவுக்கு வராமல் தடுமாறும் பொழுது, அந்நியப் பெண்ணிடம் அன்று குடித்த பாலே இன்றைய தடுமாற்றத்திற்குக் காரணம் என்பார்.
பாலூட்டும் தாயின் குணமே குழந்தையின் நற்குணத்திற்கு, நல்ல பண்பிற்கு, பழக்கத்திற்கு, ஒழுக்கத்திற்கு அடிப்படை. இவ்வுண்மையை உணர்த்தும் வரலாற்றை வான்மறை குர்ஆனின் 2- 151, 28-1 முதல் 13 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன. பிறக்கும் ஆண் குழந்தை ஒன்று அந்நாட்டை ஆளும் அரசன் பிர் அவ்னுக்கு எதிரியாக எழுச்சியுற்று அவனை வீழ்த்தும் என்று ஜோதிடர் சோகமாகக் கூறிய வேதனையை வெல்ல எகிப்தில் எண்ணற்ற ஆண் குழந்தைகளைக் கொன்றான் அரசன் பிர் அவ்ன். 
அந்நிலையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிர் அவ்னுக்கு பயந்து அந்தக் குழந்தையைப் பெட்டியில் வைத்து நைல் நதியில் விட்டனர். அரண்மனை அருகே நைல் நதியில் மிதந்து வந்த அந்தப் பெட்டியை எடுத்துத் திறந்த பிர் அவ்னின் மனைவி பிள்ளை இல்லாத ஆஸியா, பிர் அவ்னுடன் போராடி அந்தக் குழந்தையை வளர்த்தாள். ஆனால்,  அக்குழந்தையோ யாரிடமும் பால் குடிக்க மறுத்து அழுதது. இறுதியில் பெற்ற தாயையே பால்குடி தாயாராக அரண்மனையில் வேலைக்குச் சேர்த்தனர். அடம் பிடித்து அழுது குழந்தை பெற்ற தாயிடம் பால் குடித்தது. பெற்ற தாய் பேணி கொடுத்த பாலைக் குடித்த அக்குழந்தையே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபியாகி ஆணவ அரசன் பிர் அவ்னை வீழ்த்திய மூசா நபி.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் பயன்களையும், தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் பேறுகளையும் உணர்ந்து தாய்ப்பால் கொடுத்து குழந்தைகளை நேயமுடன் வளர்ப்போம். ஆயன கற்று, அறிவாற்றல் பெற்று ஆளாக்கிய பெற்றோரைத் தவிக்க விட்டு முதியோர் இல்லத்திற்குத் துரத்தாது, பாசத்தோடு காக்கும் பண்புடைய பிள்ளைகளாக தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெற்றோரைப் பேணி உற்ற உதவிகளை உவந்து செய்வர். குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி சமூகத்தில் பிரதிபலிக்கும். அந்த சுமுகப் பிரதிபலிப்பு நாட்டின் நல்லிணக்கத்திற்கு வலுவூட்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.