நன்றி நவிலல் நன்நெறி
தினையளவு நன்மை கிடைத்தாலும் அதனால் பெற்ற பயனை உணர்ந்து அதனைப் பனையளவாக நினைத்து நன்றி பகர்வது நல்லடியார்களின் நந்நெறி. இறைநம்பிக்கையாளர்களின் அனைத்து செயல்களும் நன்மை


தினையளவு நன்மை கிடைத்தாலும் அதனால் பெற்ற பயனை உணர்ந்து அதனைப் பனையளவாக நினைத்து நன்றி பகர்வது நல்லடியார்களின் நந்நெறி. இறைநம்பிக்கையாளர்களின் அனைத்து செயல்களும் நன்மை நல்குவதால் அமையும். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்பொழுது மனம் ஒன்றி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவர். அவ்வாறு செலுத்தும் நன்றியும் நன்மையாகவே அமையும், என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி முஸ்லிம் 2944-இல் பதிவாகி உள்ளது. இந்நபி மொழி இறை நம்பிக்கையாளர்களின் நன்றி மறவாமையை தெரிவிக்கிறது. அவர்களுக்கு அல்லாஹ் அருளைப் பொழிவான். இறைநம்பிக்கையே மகிழ்ச்சியுறும்பொழுது அவர்களை நன்றி நவில தூண்டுகிறது.
குர்ஆனின் 4-146 -ஆவது வசனம் உண்மையான நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான நற்பேற்றை நல்குவான் என்று நவில்கிறது. 17-3 -ஆவது வசனம் அவர் நிச்சயமாக நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார் என்று நூஹ் நபியைக் குறிப்பிடுகிறது. நூஹ் நபி அவர்களின் ஏக இறை கொள்கையை ஏற்காதவர்களை வெள்ளத்தில் மூழ்க செய்த மெய்யோன் அல்லாஹ் உண்ணும்பொழுதும் உடுத்தும்பொழுதும் மடுத்த வாயெல்லாம் மறவாது மாறாது நன்றி செலுத்திய நல்லடியார்களையும் நூஹ் நபி அவர்களையும் வெள்ளப் பிரளயத்திலிருந்து காப்பாற்றியதைக் கூறுகிறது இந்த வசனம்.
16-121- ஆவது வசனம் அருள் கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார் என்று இப்ராஹீம் நபி அவர்களைக் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை வைத்து மாறு செய்தோர் மத்தியில் வீறு கொண்டெழுந்து ஊறு செய்த பொழுதும் உறுதி குலையாது குவலயம் படைத்து காக்கும் அல்லாஹ்வை வணங்கியதைக் கூறுகிறது இந்த வசனம்.
சுலைமான் நபி அவர்களின் இறைஞ்சலை இயம்புகிறது 27-19 -ஆவது வசனம். என் இறைவனே என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் புரிந்த அருள்களுக்கு உனக்கு நன்றி செலுத்த அருள்புரிவாராக! உனக்குத் திருப்தி அளிக்கும் நற்செயல்களை நான் செய்ய அருள்புரிந்து உன் கிருபையை கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து விடு. இந்த வசனத்தில் நற்பேறுகளுக்கு நன்றி கூறி என்றும் நல்லடியார்களுடன் கூடியிருக்க கோருகிறார்கள்.
முன்னோர்களின் முறையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அதிகமாக திக்ரு செய்து நினைப்பதற்கும் அழகிய முறையில் உனது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் எங்களுக்கு நீ உதவி புரிவாயாக என்று இறைஞ்சியதை அஹ்மது 8202 -இல் காணலாம்.
54-35 -ஆவது வசனம் இது நம் அருள். இவ்வாறே நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் நற்பயன் நல்குகிறோம் என்று நவில்கிறது. இந்த வசனம் லூத்நபி அவர்களின் நற்போதனையை ஏற்காது இறைநெறிக்குப் புறம்பாய் வாழ்ந்தவர்களைக் கல்மாரி பொழிந்து அழித்தபொழுது அல்லாஹ் லூத்நபி அவர்களையும் அவர்களின் அறிவுரைகளை ஏற்று நடந்த நல்லடியார்களையும் அந்த கல்மாரியிலிருந்து காப்பாற்றினான். அவ்வாறே நன்றி செலுத்தும் நல்லடியார்களுக்கு நன்மையே செய்வான். நம் உள்ளங்களை அல்லாஹ்வின் அருள்கொடைகளை நோக்கி திருப்ப வேண்டும். நம் பார்வையை சிந்தனையை எங்கு நோக்கினும் அங்கெல்லாம் அல்லாஹ் அளித்துள்ள அருள்கொடைகளை உணர்ந்து கொள்ள முடியும். இதற்காக நாம் நன்றி செலுத்தும் நல்லடியார்களாக இருக்க வேண்டும்.
2- 172 -ஆவது வசனம் நல்லடியார்களே நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றையே உண்ணுங்கள். மேலும் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள் என்றுரைக்க 14-7 -ஆவது வசனம் நீங்கள் நன்றி செலுத்தினால் நான் அதிகப்
படுத்துவேன் என்ற அல்லாஹ்வின் அறிவிப்பை அறிவிக்கிறது. நற்பாக்கியம் பெற்றால் நன்றி செலுத்துவது நல்லடியார்களின் நந்நெறி. அவ்வாறு நன்றி செலுத்துவோருக்கு நற்பயனை அதிகமாக நல்குவான் வல்ல அல்லாஹ். செல்வ செழிப்பில் உள்ள நல்லடியார் வானம் பூமியில் இறைவனின் கருணையால் பெரும் பாக்கியங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதனால் மேலும் மேலும் நன்மைகளைப் பெறுவர் நல்லடியார்கள்.
கிடைத்த கிருபைக்கு நன்றி செலுத்துவோருக்குப் பாதுகாப்பு வலுவாக அமையும். நற்பயன்கள் பெருகும். அந்த பயன்கள் தொடரும். வெறுப்பிற்குரியவை விலகும். மனிதன் தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் காலம் எல்லாம் அவனுக்கு அல்லாஹ்விடமிருந்து அதிகமதிகமாக தங்கு தடையின்றி பொங்கும் நன்மைகள். அப்பேற்றை நாமும் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...