/

குடும்ப ஆதாரம் குழந்தை

இல்லறத்தில் நல்லறம் நாளும் நடக்க நல்ல மனைவி வேண்டும். அந்நல்லறத்தின் நற்பேறு நன்மக்கள். குழந்தைகள் குடும்பத்தின் அலங்காரங்கள்;

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:24 pm

மு. அ. அபுல் அமீன்

இல்லறத்தில் நல்லறம் நாளும் நடக்க நல்ல மனைவி வேண்டும். அந்நல்லறத்தின் நற்பேறு நன்மக்கள். குழந்தைகள் குடும்பத்தின் அலங்காரங்கள்; ஆதார தூண்கள்; மக்கள் பேறற்றோர் ஈருலகிலும் சீரற்றோர்; சிறப்பிழந்தோர்; பொறுப்பற்று வெறுப்புற்று வாழ்வர். மனித இனம் பெருகி தாழ்வின்றி வாழ்வாங்கு வாழ இறைவன் தரும் கொடையே குழந்தைகள்.

ஆண், பெண் குழந்தைகளைப் பெறுவது பேராளன் அல்லாஹ்வின் பெரு விருப்பத்தால் திகழ்வது என்று இகம் புகழ் இறைமறையின் 42-49 -ஆவது வசனம் கூறுகிறது. சுஜப் நபிக்கும் லூத் நபிக்கும் பெண் குழந்தைகள். இப்ராஹீம் நபிக்கு ஆண்மக்கள். குழந்தைகள் இவ்வுலக இன்பம், மறுமையின் மகிழ்ச்சி என்று மாநபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். குழந்தைகள் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருள் கொடை என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழியை ஹாகிம் நூலில் எண் 3123 -இல் காணலாம்.

நல்லோர்களிலிருந்து நீ எனக்கு அருள்புரி என்ற 37-100-ஆவது வசனம் இப்ராஹீம் நபி இறைவனிடம் இறைஞ்சியதை இயம்புகிறது. இந்த வசனத்தில் வரும் மிஸ்ஸாலிஹீன் என்னும் அரபி சொல்லுக்கு நல்லோர்களிலிருந்து என்று பொருள். குழந்தை நல்ல குழந்தையாக வளர்ந்து நற்செயல்கள் புரிந்து முதுமையிலும் பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்பதை உள்ளடக்கியது இச்சொல்.

இப்ராஹீம் நபி அவர்களின் இந்த இறைவேட்டலை ஏற்று ஏக இறைவன் அல்லாஹ் 29-27 -ஆவது வசனத்தில் அவருக்கு இஸ்ஹாக் நபி யாக்கூப் நபி வாரிசுகளை வழங்கி நபி பட்டங்களையும் வேதத்தையும் சொந்தமாக்கி கொடுத்தோம் என்று கூறுகிறான். இப்ராஹீம் நபி அவர்களின் மனைவி ஹாஜரா இஸ்மாயில் நபியையும் ஸாரா இஸ்ஹாக் நபியையும் கத்தூரா மத்யன் முதயன் ஆகிய மகன்களையும் பெற்றனர். அவர்களின் வழியில் - பரம்பரையில் பல நபிமார்கள் பிறந்தனர். இதனையே 38-43 -ஆவது வசனத்தில் வரும் ஹபததன் என்னும் அரபி சொல் குறிக்கிறது. அச்சொல்லுக்கு மக்களின் மக்கள் என்று பொருள் என்ற விளக்கம் அளிக்கிறார் இப்னு அப்பாஸ் ரலி. மக்களின் மக்கள் என்பது சந்ததி பெருக்கத்தை- பரம்பரையைக் குறிக்கிறது.

என் எலும்புகள் பலவீனம் ஆகிவிட்டன. என் தலை நரைத்து விட்டது. நான் கேட்டதைத் தடுக்கவில்லை. நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் என் உரிமையாளனைப் பற்றி பயப்படுகிறேன். என் மனைவி மலடாகி விட்டாள். உன் புறத்திலிருந்து எனக்குப் பாதுகாவலனை வழங்கவாயாக;  அவன் எனக்கும் யாகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாக விளங்க வேண்டும். இறைவனே அவனைப் பிரியம் உள்ளவனாக ஆக்கிவை என்று ஜக்கரியா நபி இறைஞ்சியதை இயம்புகிறது 19-4 முதல் 6 வரை உள்ள வசனங்கள். இந்த இறைவேட்டல் குழந்தை அனைவரும் பொருந்தும் நற்குணம் நற்செயல்கள் உடையவராய் இருக்க வேண்டும் என்று இயம்புவதாக தப்ஸீர் அல் கர்த்தபீ 82/ 11 விளக்குகிறது.

என்னையும் என் சந்ததிகளையும் உன்னைத் தொழுபவர்களாக ஆக்கிவை. என் இறைஞ்சலை அங்கீகரி என்று இப்ராஹீம் நபி இறைவனிடம் வேண்டியதை விளம்புகிறது 14-40 -ஆவது வசனம். இந்த இறைவேட்டலில் விழைந்தபடி குழந்தைகள் பெற்றோருக்குப் பணிவிடை செய்ய வேண்டும். பெற்றோர் பெரியோர்களின் அறிவுரைகள் ஆலோசனைகள் அனுபவங்களை எடுத்து நடக்க வேண்டும். அவர்களின் மதிப்பை உணர்ந்து மரியாதை அளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் இருப்பதன் முக்கியத்துவத்தைத் தக்க முறையில் விளங்கி இளைஞர்கள் விழுமியத்தை அவர்களிடம் இருந்து பெற்று ஒழுக்கம் பேணி விழுப்பம் பெற வேண்டும். இத்தகு குழந்தைகளே குடும்பத்தின் ஆதாரங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.