காமாட்சியம்மன் வழிபட்ட கௌசிகேசுவரர்!
எண்ணற்ற திருக்கோயில்கள் நிறைந்து புனித நகரமாக விளங்குகிறது காஞ்சிபுரம். நம் நாட்டில் உள்ள தொன்மை சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.


எண்ணற்ற திருக்கோயில்கள் நிறைந்து புனித நகரமாக விளங்குகிறது காஞ்சிபுரம். நம் நாட்டில் உள்ள தொன்மை சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சக்தி பீடங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் திருக்கோயில் விளங்குகிறது. கருணையோடு மக்களுக்கு தொண்டு புரியும் ஸ்ரீகாம கோடி பீட ஸ்தானமாகவும் திகழ்கிறது.
காஞ்சி மாநகரில் நடுநாயகமாக விளங்கும் காமாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் வடக்கு மாட வீதியில் கலையழகும், புராண வரலாற்றுச் சிறப்புடன் விளங்கும் கௌசிகேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொக்கீசர் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
புராண வரலாறு: ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளும் காலத்தில் துர்க்கை அம்சமான கௌசிகி, சும்ப-நிசும்ப அரக்கர்களை அழித்ததனால் அவளுடைய திருமேனி கருமை நிறம் அடைந்து "காளி' என அழைக்கப்பட்டாள்.
கருமை நிறம் மாற, தேவி, சிவலிங்கம் ஒன்றினை ஸ்தாபித்து வழிபட்டு கருமை நிறம் நீங்கப் பெற்றாள் என ஸ்ரீ காஞ்சி புராணம், ஸ்ரீ காஞ்சி மகாத்மியம் என்ற நுல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
கௌசி என்ற துர்க்கை பூஜை செய்து வழிபட்டதால் ஸ்ரீ கௌசிகேசுவரர் என இறைவன் அழைக்கப்பட்டார்.
பல்லவ மன்னர்களின் தலை நகரமாக விளங்கிய காஞ்சிபுரத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட முதல் கற்கோயில் (கற்றளி) இது. முழுமையும் கற்களாலே கட்டப்பட்ட இக்கோயிலில் உத்தமசோழனின் (கி.பி. 985) கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள கரிகாலச் சோழ பிள்ளையார் திருமேனி வழிபாட்டிற்காக கொடை அளிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் காணப்படுகிறது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் கருவறையில் தொன்மையான சிவ லிங்க வடிவிலே இறைவன் காட்சி தருகிறார்.
கருவறை சுவரில் ஐந்து தேவ கோட்டங்கள். முதல் தேவ கோட்டத்தில் கணபதி அமைந்துள்ளார். இவரே, கரிகால சோழ பிள்ளையார் எனக் கருத முடிகிறது. தேவ கோட்டத்தின் மேலே மகர தோரணத்தின் நடுவில் இறைவன் உமா தேவியை சாந்தப்படுத்தும் நிலையில் ஊடல் தீர்க்கும் நாயகராகக் காட்சி தருகிறார். அடுத்து மாமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள லிங்கத்தினை உமா தேவியார் பூசிக்கிறார். காலுக்கு கீழே தூபம், சங்கு, தீபம், மணி ஆகிய பூஜைக்குரிய பொருட்களை காணப்படுவது சிறப்பு. நடனமாடும் விநாயகரும் காட்சி தருகிறார். காஞ்சி தல வரலாற்றினை இங்கே சிற்ப வடிவிலே காண்கிறோம்.
அடுத்துள்ள தேவகோட்டங்களின் மேற்பகுதியில் தாமரை, அன்னம், சிம்மம் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன். கருவறையின் மேற்பகுதியில் கொடுங்கை போன்ற கபோதகத்தில் நாசிக்கூடுகளில் கௌசிகி என்ற காளி, அம்பாள், மயில், நாரை, குரங்கு வழிபடும் காட்சிகள், லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, காளஹஸ்தி தல வரலாறு, லிங்கத்திருமேனி மூன்றாகக்காட்சி தரும் திரியம்பகேசுவரர் போன்ற சிறுசிறு சிற்பங்கள் 24 நாசிக்கூடுகளில் அமைந்து சிற்பக் கருவூலமாக திகழ்கிறது. சிறிய கோயிலாக விளங்கினாலும் அழகிய சிற்பங்கள், கல்வெட்டு, முற்கால சோழர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும், இக்கோயிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. கௌசிகேசுவரர் திருமேனிக்கு நாள் தோறும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வரலாற்று சிறப்பும், வழிபாடு சிறப்பும் மிக்க ஸ்ரீ கௌசிகேசுவரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹாசுவாமிகளின் 125 ஆவது ஜயந்தியை முன்னிட்டு 12.06.2018 - இல் தொடங்கி ஸ்ரீருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், நடைபெற்று நிறைவாக ஜீன் 21- ஆம் தேதி ஸ்ரீ அதிருத்ரகலச ஹோமம் நடைபெறுகின்றது. முன்னதாக 15.06.2018 -அன்று ஸ்ரீ சண்டி ஹோமம் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா முன்னிலையில் உலக நன்மைக்காக நடைபெறும். மேற்படி தினங்களில் தினமும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன. மஹன்யாசம் 14641 ஸ்ரீ அதிருத்ர ஜபம் ஜூன் 12 -இல் ஆரம்பமாகிறது.
காம கோடி பீடாதிபதி மகா சுவாமிகளின் பரிபூரண அனுக்கிரகத்துடனும், ஸ்ரீ ஜெயேந்திரஸரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரகத்துடனும் ஸ்ரீ விஜயேந்திர சரசுவதி சுவாமிகளின் முன்னிலையில் நடைபெறும் இம்மகாயாக வைபவத்தில் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற வேண்டுகிறேம்.
தொடர்புக்கு : 98400 53289 / 81248 19033.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...