பள்ளி வாயில் பராமரிப்பு
தற்காலத்தில் பள்ளி வாயில்கள் கட்டி படாடோபமாக திறப்பு விழா நடத்துகின்றனர். பள்ளிவாயில்களைப் பராமரிக்கும் நிர்வாக குழுவிற்குத் தேர்வு பெற போட்டி,


தற்காலத்தில் பள்ளி வாயில்கள் கட்டி படாடோபமாக திறப்பு விழா நடத்துகின்றனர். பள்ளிவாயில்களைப் பராமரிக்கும் நிர்வாக குழுவிற்குத் தேர்வு பெற போட்டி, பொறாமை, பகை, பழிப்பு, இழிப்பு எல்லாம் நடப்பது நன்றன்று என்று குர்ஆன் கூறுவதையும் திருநபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்ததையும் திருத்தமாய் படித்து, கருத்தில் பதித்து பொருத்தமாய் நடப்போம்.
மக்கமா நகரிலுள்ள கஃபாவைப் புணர்நிர்மாணம் செய்த இப்ராஹீம் நபி அவர்களின் மகன் இஸ்மாயில் நபி ஆகியோரிடம் அல்லாஹ் ஹஜ் செய்ய வந்து கஃபாவை வலம் சுற்றுபவர்களுக்கும் தியானம் புரிய தங்குபவர்களுக்கும் குனிந்து சிரம் பணிந்து அதில் தொழுபவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டைச் சுத்தமாக்கி வையுங்கள் என்று வாக்குறுதி பெற்றதை வாகாய் கூறுகிறது திருக்குர்ஆனின் 2-125 ஆவது வசனம். பள்ளிவாயில்களைச் சுத்தமாய் வைத்திருக்க சத்தியம் பெற்றதைச் சாற்றும் இவ்வசனத்தைச் சிந்தையில் பதித்து நிந்தனையில்லாமல் பள்ளிவாயில்களைச் சுத்தமாக வைத்து சுகாதாரம் பேணி தூய்மையான நிர்வாகம் வாய்மையுடன் நடத்த வேண்டும்.
"அல்லாஹ்வின் அருளை நாடி அவனியில் தொழ பள்ளிவாயில்களைக் கட்டுவோருக்கு அல்லாஹ் சுவனத்தில் இல்லம் கட்டுகிறான்'' என்று உஸ்மான் (ரலி) அறிவிப்பதைப் புகாரி, முஸ்லிம், திர்மி நூற்களில் காணலாம். இதே கருத்தை அம்ருப்னு அம்பஸத் (ரலி) இயம்புவது நஸஈ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. பள்ளிவாயில்களை இவ்வுலகில் பெருமை பெறுவதற்கும், பாராட்டு பெறுவதற்கும் கட்டுவது கூடாது. ""பள்ளிவாயில்களைக்
கட்டிவிட்டு பெருமை பாராட்டுவது கூடாது'' என்ற அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு அபூதாவூத், நஸஈ நூற்களில் பதியப்பட்டுள்ளது. ""மஸ்ஜிதுகள் (பள்ளிவாயில்கள்) அல்லாஹ்வுக்கே உரியது'' என்ற திருக்குர்ஆனின் 72:18 ஆவது வசனப்படி மனிதர்கள் மசூதிகளில் சொந்தம் கொண்டாட கூடாது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாயில் கட்டுவதற்காக பனூ நஜ்ஜார்களின் தோட்டத்தை விலைக்குக் கேட்டார்கள். பனூ நஜ்ஜார்கள் தோட்டத்திற்குரிய விலையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வதாக கூறி அத்தோட்டத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அளித்தார்கள். பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டு தரை சமப்படுத்தப்பட்டு கிப்லா (முன்னோக்கும் திசை) வுக்கு முன் வரிசையாக பேரீச்சை மரங்கள் நடப்பட்டன. பச்சைக் கற்களால் சுவர் எழுப்பி பேரீச்சை ஓலைகளால் முகடு போட்டு பேரீச்சை மர துண்டுகளால் தூண்கள் நிறுத்தப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பழைய கடைக்கால்கள் மீது கட்டடம் எழுப்பப்பட்டது. உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சியில் பூ வேலைபாடுகளுடன் கூடிய கற்களால் சுற்று சுவர்களும் தூண்களும் சுண்ணாம்பைக் கொண்டு கட்டி தேக்கு மர முகடுகள் அமைக்கப்பட்டன. அறிவிப்பவர்கள் அனஸ் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸஈ.
மதீனாவில் மாநபி (ஸல்) அவர்கள் கட்டிய மசூதியில் ஈச்ச மட்டைகளைக் கொளுத்தி அவ்வொளியில் இஷா (இரவு) தொழுகை நடந்தது. நபிகளாரின் நற்றோழர் தமீமுத்தாரி (ரலி) மதீனாவிற்கு வந்த பொழுது கொண்டு வந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றி, விளக்குகளைச் சுவரில் கயிற்றில் கட்டி தொங்க விட்டார். இதைக் கண்டு மகிழ்ந்த காருண்ய நபி (ஸல்) அவர்கள் மசூதியைப் பிரகாசிக்க செய்த தமீமுத்தாரியை அல்லாஹ் பிரகாசிக்க செய்வானாக என்று பிரார்த்தித்தார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் நோன்பு மாத இரவின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகையைத் தொழ வைக்க உபய்யுப்னு கஃப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்தார்கள். அப்பொழுது விளக்குகளை அதிகரித்து ஒளியைப் பெருக்கினார்கள். பெரு மகிழ்வெய்திய பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலி (ரலி) அவர்கள் பள்ளிவாயிலைப் பளிச்சிட செய்த உமர் (ரலி) அவர்களின் கப்ரை (புதை குழியை) அல்லாஹ் ஒளிரச் செய்வான் என்று வாழ்த்தினார்கள். பிற்காலத்தில் கலீபா மாமூன் ரஷீது எல்லா பள்ளிவாயில்களிலும் விளக்குகளை அதிகரித்து பள்ளிவாயில்கள் பளிச்சிட்டு ஒளிர தெளிவான கட்டளை பிறப்பித்தார்.
பள்ளிவாயில்களைப் பராமரித்து பாதுகாக்கும் நிர்வாகிகளின் தகுதியை நிர்ணயிக்கிறது திருக்குர்ஆனின் 9-18 ஆவது வசனம் ""அல்லாஹ்வின் இறுதி நாளை நம்பி, தொழுகையைக் கடைபிடித்து ஜகாத்தைக் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமல் இருக்கிறார்களோ அவர்களே அல்லாஹ்வின் பள்ளிகளைப் பராமரிக்க தகுதியுடையவர்கள்''.
இத்தகையோர் எப்படி பள்ளிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் ""பள்ளிவாயில்களில் துப்புதல் கூடாது. தவறுதலாக எச்சில்பட்டு விட்டால் துடைத்து விட வேண்டும்'' அறிவிப்பவர்- அனஸ் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ.
ஒருமுறை பள்ளிவாயிலில் கிப்லா பக்கமுள்ள சுவரில் ஒட்டியிருந்த காய்ந்த சளியைச் சாந்த நபி (ஸல்) அவர்கள் சுரண்டி எடுத்ததை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லிம் நூற்களில் உள்ளது.
பள்ளிவாயில்களில் விற்பது, வாங்குவது, காணாமல் போன பொருள்களைத் தேடி கூச்சலிட்டு கத்துவது தடை செய்யப்பட்டுள்ளதைப் பகர்கிறார் அம்ருப்னு ஸீஐப். நூல் -ஸீனன்.
"திருடன் திருடும் பொழுது இறை நம்பிக்கையுடையவனாக இருந்தபடி திருடமாட்டான்'' என்ற நபி மொழியை நவில்கிறார் அபூஹீரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
இந்நபி மொழியை நன்குணர்ந்து பள்ளிவாயிலைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ளோர் இறையச்சத்துடன், குறையுடைய எச்ச செயல்களைச் செய்யாது, பள்ளிவாயில் நிதியைப் பாழ்படுத்தாது, வீண் செலவுகளை மட்டும் உரிய முறையில் செய்து எய்திட வேண்டும் எந்நாளும் எக்காலமும் ஏக இறைவனின் இம்மை மறுமை பேறுகளை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...