நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பகையை வெல்லலாம்

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவம் பைரவ மூர்த்தியாக அருள் பாலிக்கும் வடிவம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:10 am

கி.ஸ்ரீதரன்

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவம் பைரவ மூர்த்தியாக அருள் பாலிக்கும் வடிவம். சிவாலயங்களில் இவர் சேத்ரபாலகராக எழுந்தருளி, காவல் காக்கும் அரிய பணியினை  செய்து வருகிறார். திருக்கோயில்களில்கூட கிழக்கு மூலையில் இவருக்கு தனி சந்நிதி இருப்பதைக் காணலாம்.

"விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை

தரித்ததோர் கோல கால வைரவன் ஆகி வேழம்

உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய்விள்ளச்

சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே''

என்று அப்பர் பெருமான் பைரவமூர்த்தியைப் போற்றுகின்றார்.

பைரவர் வழிபாட்டில் எட்டு என்ற எண்ணிக்கைக்கு மிகுந்த தொடர்பு உண்டு. இவருக்குச் செய்யப்படும் "அஷ்ட விதார்ச்சனை' என்னும் வழிபாடு சிறப்புடையது. பல திருக்கோயில்களில் பைரவ மூர்த்திக்கு  தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. செட்டிநாட்டில் சிறப்பான அஷ்ட பைரவ தலங்கள் உள்ளன. திருப்பத்தூர், வைரவன்பட்டி, வைரவன் கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி,  வி. சூரக்குடி, பிரான்மலை, பெரிச்சிக்கோயில், தூர்வாசபுரம் ஆகியவையே அந்தத் தலங்கள்.

திருவாய்மூர்: காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழ நாட்டில் பாடல் பெற்ற தென்கரைத் தலங்களில் 124வது தலமாக திருவாய்மூர் திருத்தலம் விளங்குகிறது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில்  அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் இறைவன் "வாய்மூர் நாதர்' எனவும், இறைவி "பாலினும் நன்மொழியாள்' எனவும் போற்றப்படுகின்றனர். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக  விளங்குகிறது. இங்கு இறைவன் நீலவிடங்கர் எனவும், ஆடிய நடனம் கமல நடனம் எனவும் குறிக்கப்படுகிறது.

அஷ்ட பைரவர்: இக்கோயிலின் கிழக்குத் திருச்சுற்றில் அஷ்ட (எட்டு) பைரவர் எழுந்தருளும் சந்நிதி அமைந்துள்ளது. காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ள சிறப்பான தலம் இது. ஆனந்த  பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈசுவர பைரவர், காலபைரவர், ஈசான பைரவர் ஆகிய எட்டு பைரவ மூர்த்திகள் இங்கே அருள்கின்றனர். இதில் அகோர  பைரவர், ஆனந்த பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய நால்வரும் சிலா வடிவங்களில் காட்சியளிக்கின்றனர். பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஈசான பைரவர் ஆகிய  நால்வரும் மரத்தினால் ஆன சுதை வடிவத்தில் எழுந்தருளி, வழிபாடு நடைபெறுவது சிறப்பு.

பைரவர் வழிபாடு: ஒவ்வொரு சித்திரை மாதம் முதலாம் வெள்ளிக் கிழமை பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெறும். பைரவரின் அருளால் சாபம் நீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், பெருமானை,  "யார் உன்னை சித்திரை முதல் வெள்ளிக் கிழமையில் வழிபடுகிறார்களோ அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்' என வேண்டினான். பைரவரும் அவ்வாறே அருள் புரிந்தார். ஒவ்வொரு  ஆண்டும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ஜயந்தன் பூஜை நடைபெறுகிறது.

இராகு கால பைரவர் பூஜை: ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் கைகூடுகிறது.

வெள்ளிக்கிழமை பூஜை: வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வில்வம், மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கி வளம் பெருகும்.

சனிக்கிழமை பூஜை: சனிக் கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் சனி பகவான் மூலம் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பைரவருக்கு ஜவ்வாது, புணுகு சாற்றி நெய்,  பொங்கல்,தேன் படைத்து அர்ச்சனை செய்தால் பகையை வெல்லலாம்.

வெள்ளைத் துணியில் மிளகு கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.

பைரவருக்கு ஒன்பது சகஸ்ர நாம அர்ச்சனை செய்து தயிர், பால்,அன்னம், தேங்காய், தேன் படைத்து வழிபட்டால் வியாபார அபிவிருத்தி அடையலாம்.

இத்தகைய வழிபாட்டு சிறப்பு வாய்ந்த திருவாய்மூர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அஷ்ட பைரவர்களை வழிபட்டு வாழ்வில் வளம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.