மகப்பேறு நல்கும் மகாலிங்கம்!
சுகீர்த்தி என்னும் அரசன் தன் பெயருக்குத் தகுந்தபடி புகழ்மிக்க சோழ வம்சத்தைச் சேர்ந்தவன்.


சுகீர்த்தி என்னும் அரசன் தன் பெயருக்குத் தகுந்தபடி புகழ்மிக்க சோழ வம்சத்தைச் சேர்ந்தவன். அவனுக்குப் பிள்ளைபேறு வாய்க்கவில்லை. இதனால் பல விரதங்களை மேற்கொண்டு, புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பல திருத்தலங்களைத் தரிசித்தும் அவனுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்திய அவன், அகத்திய முனிவரிடம் சென்றால், "மக்கட்பேறு கிடைக்க ஆசிகூறி அருள்வார்' என அவனுடைய ஆருயிர் நண்பர்கள் கூற, அகத்திய முனிவர் தங்கியிருந்த திருவெண்காடு அடைந்தான். அங்கிருந்த அகத்தியரை வணங்கி, "எல்லாவிதமான பேறுகள் பெற்றும் மக்கட்பேறு இல்லாத மனத்துயரை என்னால் தாங்க முடியவில்லை. பிள்ளைச் செல்வம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா?'' என முறையிட்டான்.
அவன் கூறியதைக் கேட்ட அகத்திய முனிவர், திருவிடைமருதூர் சென்று மகாலிங்கப் பெருமானை பூஜித்து, முன்னோர்களான பிதுர்க்களுக்கு சிரார்த்தம் செய்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்றார். "தகாத வகையில் இறந்தவர், தற்கொலை செய்து கொண்டவர், பிசாசுகளாகத் திரிவோர், நரகத்தில் உள்ளவர்கள், அவ்வுலகில் பசி, தாகம் முதலியவற்றால் வருந்தும்போது, தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு "மகவல்லாது போகட்டும்' எனச் சாபமிடுவார்கள். அப்படித் துன்புறுவோர்க்கும் பிதுர்க்களே தெய்வம். எனவே, பிதுர் காரியம் செய்து பூசித்தால் நரகத்தில் வசிப்போரும் துன்பம் நீங்கி குழந்தை பிறக்க அனுக்கிரம் செய்வர்' என்றார்.
மேலும், "தவறான வழிகளில் இறந்தோர், பிசாச பித்ருக்கள். இயற்கையான வழியில் நல்லவழியில் இறந்தோர் தேவ பிதுர்க்களாவர். எனவே, பிதுர்க்களைத் திருப்தி செய்வது அவசியம். இன்னும் சொல்கிறேன் கேள். திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க நான் அடிக்கடி செல்வது வழக்கம். ஒருநாள் நான் அவ்வாறு செல்லும்போது ஆகாய வீதியிலிருந்து ""ஐயோ ஐயோ'' என்ற தவறுதலான அவச்சொல் சொல்லிச் சிலர் அலறுவதைக் கேட்டேன். "உலகில் யாரோ துயரப்பட்டுக்கொண்டு கதறுகிறார்கள்' என எண்ணி, "சிவ சிவ' என்று கூறினேன். ஒரே கணத்தில் என் எதிரில் பிசாசு வடிவங்கொண்டு, சிவந்த மயிரினர், குழிந்த கண்ணினர், பிளந்த வாயினர், நீண்ட கழுத்துடையவர், ரத்தம் பாய்ந்த உடம்பு உடையவர், வெட்டப்பட்டவர், கவலைப்பட்டவர் கண்ணீர் விட்டுக்கொண்டு என் எதிரில் தோன்றி, என்னை வணங்கினர்.
"நீங்கள் யார்? என்ன குற்றம் செய்தீர்கள்?' என அவர்களைக் கேட்டேன்.
"நாங்கள் பெரும் பாவம் செய்தவர்கள். நரகத்தில் இடர்ப்பட்டுக் கொண்டிருந்தோம். குறிப்பாக பிறன் மனைவியைத் தீண்டியவரை, சூரிய - சந்திர கிரணங்களில் பட்டினியிராமல் உணவு கொண்டவர்களை, தாய், தந்தை பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேளாதவர்களை, தாய், தந்தையர், வயதில் முதிர்ந்தவர்கள், குழந்தைகள், உறவினர்கள் பசியுடனிருப்பது தெரிந்தும், தான் மாத்திரம் உணவுண்டு பசி நீங்கியவர்களை, பெரியவர்களை நிந்தித்தவர்களை, பிறர் பொருளைத் திருடியவர்களை, எவருக்கும் உதவாது துன்புறுத்தியவர்களை கொடும் தண்டனைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்தினர். தினமும் பல தடவைகள் இப்படி எங்களுக்கு தண்டனைகள் அளிப்பர். இன்று தண்டனைகள் பெற்றுத் துன்பமடைந்தபோது, "சிவ சிவ' என்ற இறைவனது பெயர் கூறப்படுவது கேட்டு, எங்களை விட்டு ஓடிவிட்டனர். மாமுனிவரே! நாங்களும் இங்கு வந்துவிட்டோம். மீண்டும் நரகம் சேராதவண்ணம் எங்களைக் காத்தருள வேண்டும்' என்றனர்.
நான் அவர்களை "அஞ்ச வேண்டாம்' எனக் கூறி, அவர்களை திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்று, மகாலிங்கப் பெருமானை தரிசிக்கச் செய்தேன். காவிரியில் மூழ்கி, பிதுர்க்களுக்குத் தர்ப்பணம் செய்யச் சொன்னேன். உடனே பிசாசு உருவத்திலுள்ள அனைவரும் தெய்வ சரீரம் பெற்று, தேவலோகம் சென்று நற்கதி அடைந்தனர்.
இவ்வாறு முன் நிகழ்ந்த வரலாறு கூறிய அகத்தியர், ""சுகீர்த்தி மகராசனே! திருவிடைமருதூர் தல மகிமையையும், பிதுர் தர்ப்பணத்தின் பெருமையையும் அறிந்து கொள்வாயாக. நீயும் திருவிடைமருதூர் சென்று, காவிரியில் நீராடி, மகாலிங்கப் பெருமானை தரிசித்து, பிதுர்க் கடன்களைச் செய்து மக்கட்பேறடைவாயாக!'' என்றார்.
அகத்தியர் கூறியபடியே சுகீர்த்தி மன்னன் தன் மனைவியுடன் திருவிடைமருதூர் சென்று, காவிரியில் நீராடி மகாலிங்கப் பெருமானைத் தரிசித்து, பிதுர்க்கடன் இயற்றி மக்கட்பேறு பெற்றான். பெருந்தவஞ் செய்து உடலை வருத்தி, பட்டினிக் கிடந்து, காய், தண்ணீர், கனி, கிழங்குகளை உண்டு உடம்பை வருத்துவதைக் காட்டிலும், பெரியோர்களின் ஆசி நிறைந்த அன்பு - அன்பு நிறைந்த வார்த்தைகளின்படி நடந்தால் எதுவும் எளிதில் கிடைத்துவிடும் என்பதற்கு சுகீர்த்தி மன்னன் அகத்தியர் சொற்படி கேட்டு நடந்ததே சான்று.
மக்கட்பேறு அடைந்த சுகீர்த்தி மன்னன், தன் மனைவி, குழந்தையுடன் சென்று அகத்தியரை வணங்கினான். வேதியர்க்கு தானம் செய்து, ஆலயத் திருப்பணிகள் செய்து வாழ்ந்து, பிறகு இறைவன் திருவடியை அடைந்தான்' என்கிறது மருதவனபுராணம். இவ்வரலாற்று நிகழ்வு மருதவனபுராணத்தில், உள்ள சுகீர்த்திமன் சருக்கம் பாடல், 20, 38, 42-இல் இடம்பெற்றுள்ளது. மருதவனபுராணத்தை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். இப்புராணம் 1384 செய்யுள்களை உடையது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடைய இடைமருதூரின் புராணச் செய்திகள் இதில் உள்ளன. தன்னை அடைந்தவரின் துயர் போக்கும் இடைமருதீசனான மகாலிங்க சுவாமி நிகழ்த்திய அற்புதங்களும், இத்தலத்தின் பெருமைகளும், தீர்த்தங்களின் சிறப்பும், மன்னர்கள் பலரின் வரலாறுகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
தோஷ நிவர்த்தித் தலம்: இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. சைவத் திருத்தலங்களுள் 7 பிராகாரம் கொண்ட ஒரே திருக்கோயில் இடைமருதூர் மகாலிங்கப் பெருமான் கோயில்தான்.
"அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லிக் கொய்யாமோ?'' என்று திருவாசகத்தில் மகாலிங்கப் பெருமானை "ஆனந்தத் தேன்' எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார் மணிவாசகப்பெருமான்.
"எனக்குத் தாயை எம்மான் இடைமருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே''
என்பார் அப்பரடிகள்.
"திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கரே''
என்று இடைமருதூர் தைப்பூச விழாவைச் சிறப்பிப்பார் ஞானசம்பந்தர்.
"இடைமருதீசனைப் பணிதற்கு ஒருவர் எண்ணுற்று
எழுந்திடில் அங்கு அவர் வினையும் எழுந்து நிற்கும்
நடையுறில் அவ்வூர் நோக்கிப் புறவூர் நோக்கி
நடக்கும் அது சொல்லாமல் அவர்கள் ஏகத்
திடம் இலராய் உடன்ஒருகாற் திரும்பினாலும்
திரும்பாது சென்றவினை சென்றதே யாம்
புடவிபுகழ் காசியினுற்று இலகு கங்கைப்
புனல்படிந்து வருபலன் மற்று அவருக்கு எய்தும்''
(தலவிசேடச் சருக்கம், பா.28)
என்கிறது மருதவனபுராணம். அதாவது, "இடைமருதீசரை வணங்குவதற்கு எண்ணி ஒருவர் எழுந்தால் அவர் வினையும் எழும். நடந்து சென்றால் அவ்வினை புறத்திலே நடந்து செல்லும். நடக்கச் செயலின்றி அவர் ஊர் திரும்பினாலும், அவ்வினை திரும்பி வந்தடையாது. மேலும் காசியை அடைந்து கங்கையில் மூழ்கி வரும் பலன் அவருக்கு எய்தும்' என்கிறது.
மேற்குறிப்பிட்ட சுகீர்த்திமன் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தத்துவங்களாவன:
•பிறன் மனைவியைத் தீண்டக்கூடாது.
• சூரிய-சந்திர கிரணங்களின் போது உணவருந்தக் கூடாது.
• தாய்-தந்தை, பெரியோர் புத்திமதிகளைக் கேட்க வேண்டும்.
• தாய்-தந்தை, பெரியோர், குழந்தைகள், உறவினர்கள் பசித்திருக்க, தான் மட்டும் உணவருந்தக் கூடாது.
• பெரியோர்களை நித்திக்கக் கூடாது.
• பிதுர்க்களுக்கு முறைப்படி, தவறாமல் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
• எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்.
• கெட்ட வார்த்தைகளைக் கூறாமல் எப்போதும் "சிவ சிவ' என்றே கூறவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...