/

51 சக்தி பீடம்: உதய்பூர் திரிபுரசுந்தரி

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தென்பகுதியில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது தேவியின் இந்த ஆலயம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:25 pm

அ.கு. பார்வதி

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தென்பகுதியில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது தேவியின் இந்த ஆலயம். சக்தி பீடங்களில் 37வது பீடமாக விளங்கும் இது, அன்னையின்  உடற்கூறுகளில் வலது கால் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

உதய்பூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குன்றின் மீது பீடேஸ்வரியான திரிபுரசுந்தரி அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. உதய்பூரின் பழங்காலப் பெயர் ராதகிஷோர் கிராமம். திரிபுரேஷ்வர  பைரவர் க்ஷேத்திர பாலகராகக் காட்சி அளிக்கும் இந்தத் திருத்தலத்தின் நாயகியாக திரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள். அன்னை இங்கே திரிபுரவாசினி, திரிபுரஸித்தா, திரிபுராஸ்ரீ, திரிபுரேசி, திரிபுராம்பிகா,  திரிபுரா, திரிபுரமாலினி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அன்னையின் திருநாமத்திலுள்ள முதல் சொல் "திரி' எண் மூன்றைக் குறிக்கிறது. இரண்டாம் சொல் "புர' என்பது. திரிபுர என்றால் மூன்று புரங்கள் என்பதாகும். மூன்றாவது சொல்லான சுந்தரி என்பது,  சுந்தரனாகிய பெருமானின் மனைவியான உமையைக் குறிக்கும். எனவே அவள் சுந்தரி எனப்படுகிறாள். குன்றின் மேல் கட்டப்பட்டுள்ள அன்னையின் கோயில் கருவறை, சதுரமாக அமைந்துள்ளது.  ஆலயத்துக்குக் கோபுரம் கிடையாது. அதற்கு பதிலாக கருவறை மீது வில் போன்ற மண்டபக் கூரை உள்ளது.

கி.பி. 1501ம் ஆம் ஆண்டு தன்யா மாணிக்யா எனும் அரசனால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் விஷ்ணு விக்ரஹம் முதலில் பிரதிஷ்டை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அன்னையின் அங்கம்  விழுந்த இடம் ஆனதால், மன்னன் கனவில் அன்னை தோன்றி தனது விக்ரஹத்தையே பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாளாம். அன்னையின் உத்தரவுப்படி மன்னன் இங்கே ஆலயத்தை எழுப்பினான். இடி  விழுந்ததால் பாழடைந்த இந்தக் கோயில் கி.பி. 1681 ஆம் ஆண்டு மகாராஜா ராமா மாணிக்யாவால் புதுப்பிக்கப்பட்டது.

பகவதி எனும் நாமம் கொண்ட இரு தேவி விக்ரஹங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. இரண்டு அடி உயரம் கொண்ட அம்மன் விக்ரஹத்தை சோட்டிமா என்றும், ஐந்து அடி கொண்ட மற்றொரு தேவி  விக்ரஹத்தை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கின்றனர்.

தசமி திதி தவிர மற்ற நாட்களில் இங்கே நாள்தோறும் ஓர் ஆட்டுக்கிடா பலி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஓர் எருமை, ஐந்து ஆடுகள் பலி இடப்படுகின்றன. ஆமை வடிவில்  கோயில் அமைந்திருப்பதால் இதனை கூர்ம பீடம் என்கிறார்கள். திரிபுராவில் முன்பு ஆட்சி செய்த மன்னர்கள் போர் மற்றும் வேட்டைக்குச் செல்லும் போது இங்குள்ள சோட்டிமா தேவி சிலையை  தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கமாம்.

இங்கே நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை ஒட்டி நடத்தப்படும் திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.