/

விடுதலைக்கான சட்டங்கள்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு முன் அரேபியாவில் மது குடிக்கும் பழக்கம் வழக்கமாகி இருந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

மு. அ. அபுல் அமீன்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு முன் அரேபியாவில் மது குடிக்கும் பழக்கம் வழக்கமாகி இருந்தது. மதுவால் மாபெரும் பாதகங்களும் படுகொலைகளும் பரவலாக நடந்தன. சமுதாயத்தில் ஊறிப்போன ஊறல் உறிஞ்சும் பழக்கத்தைப் படிப்படியாக மாற்றிய வரலாறு ஒரு படிப்பினை.
 மது அருந்துவது அரேபியர்களின் அன்றாட பழக்கம். விருந்தில் பந்தியில் மதுவை முந்தி தருவது அவர்களின் வழக்கம். அந்த அரபிகளிடம் மதுவை உடனடியாக விட்டுவிடு என்றால் விட மாட்டார்கள். எனவே மது பாவமானது என்று பகரும் அறிவுரை மட்டும் ஆரம்பத்தில் அருமறை குர்ஆன் 2வது அத்தியாயம் வசனம் 219ல் ""மதுவையும் சூதையும் பற்றி கேட்போருக்கு அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டிலும் இருக்கின்ற பாவம் அவற்றின் பயனை விடப் பெரியது'' என்று கூறப்பட்டது.
 இவ்வசனம் மது அருந்துவதைத் தடுக்காததால் பாவமென்று கருதிய சிலர் குடிப்பதைக் குறைத்துக் கொண்டனர். பயன் கருதிய பலர் மது பழக்கத்தை விடவில்லை.
 ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் நபித் தோழர்களுக்கு அளித்த விருந்தில் வழக்கப்படி மது வழங்கப்பட்டது. அனைவரும் அருந்தினர். அந்தி (மஃரிப்) தொழுகை நேரம் நெருங்கியது. ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தினார்கள். போதையில் ""நிராகரிப்பவர்களே நீங்கள் வணங்கும் தெய்வங்களை நாங்கள் வணங்க மாட்டோம்'' என்று ஓதாமல் நாங்கள் வணங்குவோம் என்று மாற்றி ஓதினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்).
 உடனே, ""விசுவாசிகளே நீங்கள் போதையிலிருக்கையில் போதனை புரியாத நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள் (திருக்குர்ஆன் 4:43)'' என்ற வசனம் அருளப்பட்டது.
 மது மயக்கத்தில் தளருவதும் குளறுவதும் உளறுவதும் உண்மையாய் நடப்பதே. இரண்டாவது கட்டமாக மது மயக்கத்தில் உள்ளோர் தொழ வேண்டாம் என்று தடுக்கப்பட்டது.
 மதுவிற்கு அடிமையான அரபிகள் முன் இரவு தொழுகை (இஷா) தொழுதுவிட்டு மது குடித்து தூங்கினர். தூங்கி எழுந்து போதை நீங்கி வைகறை (சுபுஹீ) தொழுகையைத் தொழுது விட்டு மது குடித்தனர். போதை நீங்கி மதிய (லுஹர்) தொழுகையைத் தொழுதனர்.
 உத்பான் பின் மாலிக் அளித்த விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியவர்கள் அவரவர் குடும்பப் பெருமை கூறி குதூகலித்தனர். அதில் பங்கேற்ற ஸஃதுபின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு கவிதை புனைந்து அவரின் குடும்பப் பெருமையைப் பாடும்பொழுது மதீனா வாசிகளான அன்சாரிகளைக் குறைவாய்க் குறிப்பிட்டார். இதனால் சண்டை ஏற்பட்டது. நேயம் மறந்து நினைவை இழந்து பாடியதால் ஏற்பட்ட தலை காயத்தை கருணை நபிகளிடம் காட்டி முறையிட்டார்கள் ஸஃது (ரலி) அவர்கள்.
 அப்பொழுது அங்கிருந்த உமர் (ரலி) அவர்களும் அன்சாரி தோழர்களும் அறிவைக் கெடுக்கும் மதுவை ஒழிக்க தெளிவான கட்டளையைத் தெரிவிக்க வேண்டினர்.
 (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்,காஜின்).
 ""விசுவாசிகளே மதுவும் சூதும் சைத்தானின் செயல்களில் அருவருக்கத்தக்கன. நீங்கள் வெற்றி பெற இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் (திருக்குர் ஆன் 5:90)'' என்ற அறிவுரையும் அடுத்து ""சைத்தான் விரும்புவதெல்லாம் மது சூதினால் உங்களிடையே பகையையும் வெறுப்பையும் உண்டாக்கி அல்லாஹ்வின் நினைப்பிலிருந்து நீங்கி தொழுகையைத் தடுப்பதற்குத்தான். எனவே நீங்கள் இவற்றிலிருந்து விலகிக்கொள்கிறீர்களா? (திருக்குர் ஆன் 5:91)'' என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
 இவ்வசனங்கள் மதுவை முற்றிலும் விட்டொழிக்க போதையிலிருந்து முழுவதும் விடுதலைபெற கட்டாய சட்டங்களாயின.
 இவற்றைப் பின்பற்றி மனிதனின் அறிவை மயக்கி மிருகமாக்கும் மதுவை ஒழித்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுப்போமாக.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.