வேதம் உரைத்த இறைவன்!
பஞ்ச பூதத் திருத்தலங்களையும் ஒரே தலத்தில் தரிசிக்கலாம். ஆம். பஞ்சபூத திருத்தலங்களான


பஞ்ச பூதத் திருத்தலங்களையும் ஒரே தலத்தில் தரிசிக்கலாம். ஆம். பஞ்சபூத திருத்தலங்களான திருவானைக்கா (நீர்), காஞ்சி (மண்), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (தீ) ஆகிய ஐந்து திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் கிடைக்கும் பாக்கியத்தை திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரரை வழிபட்டு
அடையலாம்.
மன்னர்கள் பராமரித்தனர்: தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் எட்டாவதாக விளங்குகிறது இந்தத்தலம். பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்டுள்ளது. இறைவன், தேவர்கள், முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்ததால் "வோத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ஆலய கருவறை, அரைநாழி மண்டபம் ஆகியவை 5ஆம் நூற்றாண்டில் சிம்மவர்மனாலும், பஞ்சபூதத் தல கோபுரங்கள் 10ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழனாலும், அம்பாள் சந்நிதி முன் மண்டபம் ஆகியவை மாறவர்மனாலும், சுற்றுவழி மண்டபம் இணைந்த மண்டபம் 12 ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழனாலும், கல்யாண மண்டபம் 13 ஆம் நூற்றாண்டில் சம்புவராயர்களாலும், நூற்றுக்கால் மண்டபம் திருமலை நாயக்கராலும், ராஜகோபுரம் மதிற்சுவர்கள் - இரண்டாம் நிலை கோபுரம் ஆகியவை 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயராலும் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்
கின்றன.
ஆலய அமைப்பு: பஞ்சவர்ண நிறத்தில் எழில்மிகு தோற்றத்தில் உள்ளது ராஜகோபுரம். இக்கோபுரத்தின் நான்கு மூலையிலும் நான்கு பூதங்களும் அதன் பக்கத்தில் இரு ரிஷபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. துஷ்ட பூத பிரேத பிசாசுகள் பயந்து ஓடவும், தரிசனம் செய்ய வருபவர்களை காத்து ரட்சிக்கவும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தின் கிழக்கே மூலவரின் வடிவமும், தெற்கே தட்சிணாமூர்த்தி வடிவமும், மேற்கே விஷ்ணு வடிவமும், வடக்கே பிரம்மாவின் வடிவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் நுழைந்தவுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள நந்தி பெருமான் நம்மை வரவேற்கிறார்.
இறைவன் வேதபுரீஸ்வரர் தேவர்களுக்கும், வானவர்களுக்கும் நான்கு வேதங்களை உபதேசம் செய்த போது அசுரர்கள் நுழைவதை தடுக்கவே, காவல் தெய்வமாக நந்திபெருமானை முன்நிறுத்தினார் எனப் புராணங்கள் கூறுகின்றன.
கோயிலின் உள்ளே தெற்குப் புறத்தில் திருக்குளம் உள்ளது. வடக்கே நூற்றுக்கால் மண்டபம் அமைக்கப்பட்டு அதில் இறைவனின் திருவிளையாடல்களை உணர்த்தும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும் நடுமண்டபத்தின் நேர்முகமாக ஏழு கரங்களுடன் நார்த்தன விநாயகர், ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஆறுமுகன், வடக்கு முகமாக ஸ்ரீபால குஜாம்பிகை, நவகிரகங்கள் சந்நிதிகள் உள்ளன.
பனைமர வரலாறு: இறைவனை வழிபட்டு கோயிலை வலம் வந்தால் வடமேற்கு வாயு மூலையில் பனை மரங்கள் உயர்ந்தோங்கிக் காணப்படுகின்றன. அதன் அருகே மண்டபம் உள்ளது. திருஞான சம்பந்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இத்திருத்தலம் வந்து வணங்கி வழிபட்ட போது அடியவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க ஆண் பனையை பெண் பனையாக மாறி காய்க்குமாறு பதிகம் பாடினார். ஆண் பனைகள் அத்தனையும் குரும்பை ஈன்ற மரங்களாக மாறின. பனம் பழங்கள் கீழே விழுந்தன என்பது வரலாறு.
குழந்தைப் பேறு இல்லாத தாய்மார்கள் இக்கனியை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்களும் தீரும்.
சகல தோஷங்களும் நீங்கும்: இக்கோயிலில் பதினோரு தலை நாகத்தை அடக்கியவாறு பூமாதேவியும், மச்சம் (மீன்), கூர்மம் (ஆமை), எட்டு யானைகள் இவற்றின் மீது வன்முகநாதனும் காட்சியளிக்கிறார்கள். இவரை சனிக் கிழமைதோறும் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
கோயிலுக்குள் 108 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். தென்சுவரில் மாணிக்கவாசகருடன் 64 நாயன்மார்களும், 7 கன்னியர்களும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். துர்க்கைக்கு எதிரே ஆதிகேசவ பெருமாள் வேதத்தை காக்கும் பொருட்டு பிரயோக சக்கரம் ஏந்தி காவல் கொண்டிருக்கிறார். கலைநுணுக்கத்துடன் நான்கு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் உள்ள அர்த்த நாதீஸ்வரரையும் இங்கு வழிபடலாம்.
விழாக்கள்: தை அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 -நாள் பிரம்மோற்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. 7-ம் நாள் தேர்த் திருவிழா நடக்கிறது. பங்குனி மாத தெப்பத் திருவிழா, மாசி மக அப்பாதோப்பு விழா, சித்ரா பௌர்ணமி, மாத பிரதோஷ வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி எனப் பல்வேறு விழாக்களும் நடக்கின்றன. அவ்வகையில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி பிரம்மோற்ஸவம் தொடங்குகிறது.
அமைவிடம்: செய்யாறில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் செய்யாற்றங்கரையின் இடப்புறத்தில் அமைந்துள்ளது வேதபுரீஸ்வரர் திருக்கோயில்.
மேலும் தகவலுக்கு: 94439 54875, 98424 16402
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...