குந்தவை பிராட்டி கும்பிட்ட குமரன்!
நாம் வாழும் உலகம், கடவுள் வகுத்து வைத்த சட்டத் திட்டங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. இயற்கையின் சட்டத் திட்டங்களைச் சரியாகப் புரிந்து செயல்படும் எந்த ஒரு மனிதனும், தனது நியாயமான தார்மீக நெறிக


நாம் வாழும் உலகம், கடவுள் வகுத்து வைத்த சட்டத் திட்டங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. இயற்கையின் சட்டத் திட்டங்களைச் சரியாகப் புரிந்து செயல்படும் எந்த ஒரு மனிதனும், தனது நியாயமான தார்மீக நெறிகளுக்கு உட்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால் மனிதன், தான் செய்த ஊழ்வினைப் பயனால், இயற்கையின் சட்டத் திட்டங்களை மீறி செயல்படுகிறான். அதனால் தனது ஆசைகள் நிறைவேறாமல் துன்பக்கடலில் வீழ்கிறான்.
மனிதனாகப் பிறப்பெடுத்தவனுக்கு நல்ல கல்வியும், ஞானமும் கைவரப் பெற்றாலே, அவன் சென்ற இடமெல்லாம் சீரும், சிறப்பும் பெற்றுத் திகழலாம். அத்தகைய நல்ல கல்வி, ஞானம் பெருகிட திண்ணியம் அருள்மிகு சண்முகநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ஏனெனில் இந்த முருகன் ஞானமளிக்கும் நாயகன் ஆவார்.
சோழ வள நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்- லால்குடி வட்டத்தில், திருச்சியில் இருந்து கிழக்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் "திண்ணியம்' என்ற அழகிய கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி, மருத நிலமாகிய வயலும், வயலைச் சார்ந்த பகுதியாகும்.
புகழ்பெற்ற சோழப் பேரரசனான ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியாரால் கட்டப்பட்டு, பூஜித்து வழிபாடு செய்யப்பட்டது, திண்ணியம் ஸ்ரீசண்முகநாத சுவாமி திருக்கோயில். இவ்வாலயத்தின் அழகிய முகப்புக் கோபுரம், நம்மை அன்புடன் வரவேற்கிறது. இந்தக் கோபுரம் தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. "குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திர விதிப்படி இக்கோயில் அமைப்புகளும், நித்திய பூஜைகளும் அமைந்துள்ளன.
ஸ்ரீ முருகப்பெருமான் கோயில் அமைப்பு, பூஜைகளைப் பற்றிக் கூறும் ஸ்ரீ குமார தந்திர ஆகமம் "ஓம் ஓம்' என்ற நூலின் 26-வது படலம், 32-வது சுலோகத்தில், "பூணூல் அணிந்து வள்ளி, தெய்வானை என்ற இரண்டு சக்திகளோடு மயிலின் மீது இருப்பவர்களாக உள்ள ஸ்ரீ முருகப்பெருமானை கிராமத்தின் முன்பு கோயிலின் மூலவராக ஸ்தாபனம் செய்து பூஜித்தால் சித்திகள் உண்டாகும்' என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆகம விதியின்படி, திண்ணியம் கோயில் அமைந்திருப்பது, நாம் செய்த பாக்கியமே! இங்கு வந்து வழிபட்டால் சித்திகள், அதாவது எண்ணிய காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் என்பது உறுதி.
கோபுர வாசல்படி மேடையில் கிழக்கு நோக்கி இடும்பன் சந்நிதி அமைந்துள்ளது. முருகனுக்கு நேர்த்திக் கடனாக எடுக்கப்படும் பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி மற்றும் மச்சக் காவடி போன்ற காவடி வழிபாடு தோன்றுவதற்கு இடும்பனே முழுமுதல் காரணமாவார். இவரை தரிசித்து உள்ளே நுழைந்ததும் முதல் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஆனைமுகக்கடவுளாம் ஸ்ரீ விநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி உள்ளே முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும், முருகனைப் பார்த்த நிலையில் மயில் வாகனம் அமைந்துள்ளது. மயிலை நோக்கியவாறு அருட் பெருங்கடலாக, ஆறு முகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன், வள்ளி-தேவசேனா சமேதராக ஸ்ரீ சண்முகநாத சுவாமி அருளாட்சி புரிகின்றார்.
இதில் மற்றொரு சிறப்பம்சமாக ஸ்ரீசண்முகநாதர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை மூவரும் தனித்தனியாக மயிலின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார்கள். இந்தக் கந்த வேள், தெற்கு நோக்கியபடி உள்ளதால் அருணகிரி நாதர் பாடியபடி, "குரு வடிவாக' உள்ளார். மேலும் அங்காரகனாகிய செவ்வாய்க்கு அதிபதியாகிய முருகப் பெருமான், அங்காரகனுக்குரிய தெற்கு திசையைப் பார்த்தபடி இருப்பதால் இத்தலம் "செவ்வாய் தோஷப் பரிகார'த் தலமாகவும் விளங்குகிறது.
முருகனுக்கு எதிரிலேயே அருணகிரிநாதர் சந்நிதி உள்ளது. சண்முகரின் வலதுபுறம், மேற்கு மூலையில் கிழக்கு பார்த்தபடி "கோட்டீஸ்வரர்' என்ற திருப்பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சிவனுக்கு இடது புறமாக, தென்திசையை பார்த்தபடி இறைவி பெரியநாயகி அருளாட்சி புரிகிறார். சிவ சந்நிதிக்கு வலது புறமாக தேவன்குடி (திண்ணியம் அருகில் உள்ளது) என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீவிசாலாக்ஷி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமியும் எழுந்தருளியுள்ளார். இவர்களை தரிசித்து வெளியில் முதல் திருச்சுற்றிற்கு வந்தால், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேசுவரர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதியும், மேற்கு திசையை நோக்கி காலபைரவர், சூரியன் சந்நிதியும் அமைந்துள்ளன.
இத்தலத்தில் வில்வ மரம், தல விருட்சமாக உள்ளது. கோயிலில் இரு கால பூஜை நடைபெறுகிறது. கொடிமரம் இல்லாததால், பிரம்மோற்சவம் நடைபெறுவதில்லை. இங்கு ஷஷ்டி, கார்த்திகை, தைப் பூசம் முதலிய விசேஷ நாட்களில் நைமித்திக பூஜை என்ற விசேஷ அபிஷேகங்கள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஸ்கந்த ஷஷ்டி உற்சவம், பங்குனி உத்திரத் திருநாள் ஆகியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்திற்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. லால்குடி சென்று, அங்கிருந்து திண்ணியம் செல்வதற்கும் பஸ் வசதி உண்டு. இத்தலத்தைக் குறித்து மேலும் விவரங்களுக்கு கோயில் குருக்கள் உமாபதி சிவத்தை செல் : 99439-46086ல் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...