தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கண நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் இளம்பூரணரே முதன்முதலாகவும், நூல் முழுமைக்குமாகவும் உரை எழுதியவர் ஆவார்.
பின்வந்த உரையாசிரியர்களில், தொல்காப்பியம் எழுத்ததிகாரத்துக்கு நச்சினார்கினியரையும், சொல்லதிகாரத்துக்கு சேனாவரையரையும் சிறந்தவர்கள் என்பர்.
சொல்லதிகாரத்துக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவர் உரைகண்டிருந்தாலும், சேனாவரையர் உரையே இன்றுவரையில், சிறந்து விளங்குகிறது.
பண்டைய வழக்காறுகளை அவர் நினைவுபடுத்துவதால், அவரது உரை படிப்போர் நெஞ்சில் நீடுநிற்கிறது. அவற்றுள் ஒன்றுதான், இந்த எருமைக் கதை.
சொல்லதிகாரத்தின் எச்சவியலில் வரும்,
பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்
திசைநிலைக் கிளவியின் ஆஅஃகுநவும்
தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும்
மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்
அன்றி யனைத்துங் கடப்பா டிலவே.
என்ற நூற்பா (449), குறிக்கத்தக்கது.
தமிழில் உள்ள சில சொற்கள், இலக்கண வரையறைக்கு உட்படாமல், முன்னோர் எவ்வாறு வழங்கினார்களோ அவ்வாறே வழங்கப்படும் என்பது அந்த நூற்பாவின் அவரது உரைச் சுருக்கமாகும்.
அந்த நூற்பாவில் வரும், 'தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும்' என்ற நூற்பாத் தொடருக்கு உரையெழுதும் சேனாவரையர், முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண், 'யாற்றுட்செத்த எருமை ஈர்த்தல் ஊர்க் குயவனுக்குக் கடன்' என்கிறார்.
அதை விளக்கும் வகையில், பழங்காலத்தில் வழங்கிவந்த கதையொன்றையும் உரைக் குறிப்பாகத் தருகிறார் அவர்.
ஓர் ஊரில், ஆற்றோரம் வசித்து வந்த ஒருவனால், பராமரிக்கப்பட்டு வந்த எருமை மாடு ஆற்றுவெள்ளத்தில் மூழ்கி இறந்துவிட்டது.
அதை அப்புறப்படுத்தி, அடக்கம் செய்வது யார்? என்ற கேள்வி அங்கு எழுந்த போது, அவ்வூரில் வசித்துவந்த ஊர்க்கணக்கன், தனக்குப் பகைவனான அக்குயவனைப் பழிவாங்க எண்ணி, ஊர்க்குயவர் பசுமட்பாண்டங்களைச் சுடும் பொருட்டு அமைத்த சுள்ளையில் (சூளை) இருந்து எழுந்த புகையாகிய மேகத்தால் மழை மிகுதியாகப் பெய்து, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அந்த வெள்ளத்தில் மூழ்கி எருமை செத்தது.
ஆகையால், ஆற்றுள் செத்த எருமையை எடுத்து அடக்கம் செய்தல், ஊர்க் குயவர்களின் கடமையாகும். அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதற்குச் சாட்சியாய் என்னிடம் பழைய சுவடி ஒன்று உள்ளது என்றான்.
இதிலிருந்து படித்த கணக்கன், படிக்காத குயவனை வென்றிருப்பான் என்பது உய்த்துணரப்படுகிறது. நகைச்சுவையான இந்தக் கதையை சேனாவரையர் நறுக்குத் தெறித்தாற்போல் 'ஆற்றுள் செத்த எருமை ஈர்த்தல், ஊர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின' என்று குறிக்கிறார்.
சுள்ளையில் இருந்து புகை எழுதல், மழை பொழிதல், ஆற்று வெள்ளத்தில் எருமை இறத்தல் என்பவை தன்னியல்பாக நிகழ்பவை. இவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையன அல்ல. இதற்கு முதற்காரணன் குயவனும்
அல்லன். எனினும், தொடர்பில்லாதவற்றைத் தொடர்புபடுத்தும் வழக்கமும் பண்டு இருந்ததையும் இவர் இங்கு எடுத்துரைத்துத் தனது உரையைச் சுவை உடையதாகச் செய்கிறார் என்பது எண்ணி மகிழத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாஷிங்டனில் புயல் அபாயம்! தள்ளிப்போகிறதா டிரம்ப்பின் உரை?

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

குடியிருப்பின் மீது விழுந்த எருமை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




