உலகிலுள்ள ஏனைய தொழில்களுள் ஏர்த் தொழிலே ஏற்றம் பெற்று முதல்நிலை வகிக்கிறது. திருக்குறளும் டஉழவு' எனும் அதிகாரத்தின் வழி உழவின் இன்றியமையாமை, உழவு செய்பவனின் சிறப்பு, உழவினால் விளையும் பயன்கள் எனப் பலப்பட கூறுகிறது. அதில் உழவின் இன்றியமையாத ஐந்து பணிகளை முறைசெய்து கூறும் விதமாக
ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு. (குறள் 1038)
என்பதன் வாயிலாக நிலத்தை உழுதல், எரு இடுதல், களை பறித்தல், நீர் பாய்ச்சுதல் பின்னர் வேலி அமைத்து காத்தல் என மொழிகிறது.
இதில் களை பறித்தல் என்பது மிகவும் இன்றியமையாதது. டகளை பறிக்காத பயிர் கால் பயிர்' என்று பழமொழி கூறுகிறது. இந்தக் காலத்தில் பெரும்பாலும் பெண்கள்தான் களைபறி தொழிலை செய்வார்கள். ஆனால், காப்பிய காலத்தில் ஆண்கள் களைபறி தொழிலை மேற்கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக சிந்தாமணி பாடலொன்றில், ஆண்கள் களைபறிக்கச் செல்கிறார்கள். பயிரினூடே தாமரையும் குவளையும் பூத்துள்ளன. களை பறிக்கச் சென்ற உழவர்கள் தாமரை மலரை தனது காதல் மகளிரின் முகமென்றும்; குவளை மலர்களை அம் மகளிரின் கண்களாகத் தோன்றுவதால், அதனருகில் செல்லாமல் வந்து விடுகின்றனர் எனத் திருத்தக்கத் தேவர் கவி புனைகிறார்.
டடகண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார்
வண்ணவாண் முகமென மரையி னுட்புகார்
பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே''---
(சீவக சிந்தாமணி 51)
கட்டல் என்றால் களை பறித்தல் என்பதாகும். காதலியின் முகமும் கண்ணும் காமத்தை மிகுதிப்படுத்துவன. அதற்கேற்ப உவமையழகூட்டப் பாடியுள்ளார்.
இந்தப் பாடலின் உவமையில் திளைத்த கம்பர் தனது காப்பியத்தில் நாட்டுவளப் பாடலை தன் கவிவளத்தால் மேலும் மெருகேற்றுகிறார்.
டடபண்கள்வாய் மிழற்று மின்சொற் கடைசியர் பரந்து நீண்ட
கண்கைகான் முகம்வா யொக்குங் களையலாற்
களையி லாமை
உண்கள் வார் கடைவாய் மள்ளர் களைகிலா துலாவி நிற்பார்
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ
சிறியோர் பெற்றால்--(கம்ப, நாட்டுப் -10)
பெண் இன்பம் பெரிதென மயங்கிய சிறியோர் அதைத் தவிர்க்க வேண்டிய காலத்தும் தவிர்க்க மாட்டார்கள் என்ற போது உண்மையை உழவர்மேல் ஏற்றி தேவரைப் போலவே கம்பரும் பாடியுள்ளார்.
கள் உண்டு களை பறிக்க வந்த உழவர்கள் களை பறிக்காமல் உலாவிக் கொண்டு நிற்கின்றனர். கழனியில் கருங்குவளை, தாமரை, செவ்வாம்பன் மலர்களெல்லாம் பூத்திருக்கின்றன. இவைகளெல்லாம் அவ் உழவர்களுக்குக் களைகளாகத் தெரியவில்லை. அவையெல்லாம் அவ் உழத்தியர்களின் பரந்து நீண்ட கண், கை, கால், முகம், வாய் முதலிய உறுப்புகளைப் போலிருத்தலால் களை பறியாமல் உலாவினர் என்கிறார்.
இதே கருத்தையும் உவமையையும் திருமந்திரத்திலும் திருமூலரின் அருட்கவியிலும் கண்டு இன்புறலாம்.
டடஉழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே''
-திருமந்திரம், ஆறாம் தந்திரம் 1619
எல்லாம் துறந்து துறவு நிலைக்குச் செல்ல வேண்டி வலியுறுத்தும் பாடலின் மேலோட்டமான பொருள் உழவன் உழவை மறந்ததற்குக் காரணம் கழனியில் பயிரின் இடையே பூத்த குவளை மலர் தன் காதலியின் கண்களாக அவனுக்குப் பட்டதனால் அவன் களை பறிக்காமல் அக்குவளை மலரை விட்டுவிட்டான் என்பது கருத்தாகிறது. ஆனால், திருமூலர் கூறும் கருத்தோ துறவு நிலை குறித்ததாகும். உவமை நோக்கில் இப்பாடல் மேற்கண்ட பாடலோடு இசைந்து நிற்பதைக் காண முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை பிறந்தாலே விழாக்கோலம்

அறம் காக்கும் அன்னை மதுரகாளி!

தேர்தலில் பெண்களை வேட்பாளராக்க என்னதான் பிரச்னை?

உழவன், மங்களூா் விரைவு ரயில்கள் இன்றுமுதல் திண்டிவனத்தில் நின்றுசெல்லும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


