உச்சநீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதிபதிகள், மத்திய அரசு நிர்வாகத்தின் உயர் பதவி வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மட்டுமல்ல, பாஜக அல்லாத மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்கள் உள்பட யாருமே சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் பிரதமரால் அடையாளம் காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
தகுதி, திறமை, நேர்மை, உழைப்பு, நம்பகத்தன்மை, பொறுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக வினைச் சட்டம் (லா ஆஃப் கர்மா), இறை சித்தம் ஆகியவற்றில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவரை உயரத்தில் கொண்டு அமர்த்தி இருக்கிறது.
"நிமித்தம்' என்பதற்கு எதிர்கால நிகழ்வை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறி என்று பொருள் கூறப்படுகிறது. 1957 மே 4-ஆம் தேதி சி.கே.பொன்னுசாமிக்கும், கே.ஜானகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தபோதே அவர் இந்த உயரத்தை எட்டுவார் என்பதற்கான "நிமித்தம்' காணப்பட்டதுதான் ஆச்சரியம்.
அவர் பிறந்தபோது, குடியரசு துணைத் தலைவராக இருந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரை தனது மகனுக்குச் சூட்ட விரும்பினார் அவரது தாயார். ""என்ன, நமது மகன் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?'' என்று விளையாட்டாகக் கேட்டாராம் அவரது தந்தை.
இப்போது, சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை, அப்போதே ஏதோ ஒரு நிமித்தம் அடையாளம் காண்பித்தது என்று தோன்றுகிறது.
தனது 16 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தது முதல் இன்று வரையில் வெற்றியில் மயங்காமலும், தோல்வியில் துவளாமலும் சி.பி.ரா. பயணிக்க முடிந்ததில் வியப்பில்லை. அவர் உண்மையாகவே ஒரு தொலைதூர ஓட்டக்காரர் (மாரத்தான் ரன்னர்). மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் அடிப்படை இலக்கணமே பதற்றமே இல்லாமல் சீராக ஓடுவது என்பதுதான்.
1998,1999 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான போதும் சரி, அதற்குப் பிறகு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியபோதும் சரி, அவரிடம் எந்தவித மாற்றத்தையும் நான் பார்த்ததில்லை. ஏழாண்டுக் கூட்டணியை திமுக முறித்துக்கொண்டதால் 2004 தேர்தலில் மத்தியில் ஆட்சியை பாஜக இழந்த நிலையில்தான், சி.பி.
ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2006-இல் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிலைமை.
தேர்ந்த மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பதாலோ என்னவோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல், அடுத்த ஏறத்தாழ 20 ஆண்டுகள் கொஞ்சம்கூட சஞ்சலமில்லாமல் கட்சியில் தொடர்ந்ததற்கான பரிசுதான் குடியரசு துணைத் தலைவர் பதவி என்கிற கோப்பை.
பதவி ஏற்புக்கு முந்தைய நாள் தில்லி மகாராஷ்டிர சதனில் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எந்தப் பதவியும் இல்லாமல் இருந்தபோதும், ஆளுநர் பொறுப்பில் இருந்தபோதும் எப்படி இருந்தாரோ, அதே அமைதியும், நகைச்சுவை உணர்வும், நட்புடன் கூடிய நெருக்கமும் இருப்பதைப் பார்த்தபோது, என்னை அறியாமலேயே வள்ளுவப் பேராசானின் குறள் எண் 425 நினைவுக்கு வந்தது.""உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு''.
அரசியல் காரணங்களுக்காக குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியால் தேர்வு செய்யப்பட்டார் என்று பலரும் கருதுகிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவரது
நேர்மைக்கும், பொறுமைக்கும், நம்பகத்தன்மைக்கும் அவர் தேர்வு செய்தார் என்றுதான் நான் நினைக்கிறேன். குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்றிருக்கும் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்.
எனது நட்பு வட்டத்தில் ராதாகிருஷ்ணன் என்கிற பெயரில் இருப்பவர்கள் மூவர். குடியரசு துணைத் தலைவராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனும், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் எல்லோருக்குமே தெரிந்தவர்கள். இன்னுமொரு ராதாகிருஷ்ணனும் அந்தப் பட்டியலில் உண்டு. ஆனால், அவரை ராதாகிருஷ்ணன் என்று பலருக்கும் தெரியாது. "ராணி மைந்தன்' என்கிற புனைபெயரைச் சொன்னால்தான் தெரியும்.
1982-இல் "சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராக சேர்ந்ததுமுதல் தொடங்கிய எங்களது நட்பு இன்றுவரை வளர்பிறையாகவோ, தேய்பிறையாகவோ இல்லாமல் பெளர்ணமியாகவே தொடர்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு
"ராணிமைந்தன்' என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். தனது 80 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்தவர்களையும், அனுபவித்து ரசித்த நிகழ்வுகளையும் பதிவு செய்து புத்தகமாக்கி இருப்பதாகச் சொன்னார்.
"வந்த பாதை' என்று தலைப்பிட்டு அவர் அகவை எண்பதில் நிற்பதை திரும்பிப் பார்த்து, நினைவில் நிற்பதை எழுத்தில் தொகுத்துத் தந்திருக்கிறார். அன்று இரவே அந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இரவு சுமார் இரண்டரை மணிக்கு நான் அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இது - "இன்னும்கூட உங்களிடம் நிறைய செய்திகள் இருக்கின்றன. அனைத்தையும் விரைவில் பதிவு செய்து ஆவணப்படுத்துங்கள்.'
தனது ரிசர்வ் வங்கிப் பணியுடனும் "சாவி' வார இதழ் எழுத்துப் பணியுடனும் நின்றுவிடவில்லை ராணிமைந்தன். ஆசிரியரின் தனிச் செயலாளராகவும், நம்பிக்கைக்குரிய சீடராகவும்கூட இருந்தார் அவர். ஆசிரியர்சொல்லச்சொல்ல தனது முத்துமுத்தான கையெழுத்தில் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதும், எழுத்தாளர்களுக்கான சன்மானத்துடன் ஆசிரியரின் வாழ்த்துக் கடிதங்களை எழுதுவதும்கூட ராணி மைந்தன்தான்.
ராணிமைந்தனின் "வந்த பாதை' புத்தகத்தைப் படித்தபோது அதில், நான் நடந்த பாதையும் இருப்பதால் நினைவு நாடாவைப் பின்னோக்கி ஓடவிட்டதுபோன்ற உணர்வு. வியத்தகு ஆளுமைகளுடனான அவரது சுவாரஸ்யமான சந்திப்புகளுக்காகவே இந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தோன்றுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் குறித்த புத்தகம் எழுதியிருக்கும் கார்முகிலோன் என்பவருக்கு, நண்பர் மெய்.ரூஸ்வெல்ட் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற போனபோது கவிஞர், பாடலாசிரியர் உமா சுப்பிரமணியன் என்னைச் சந்தித்து தான் எழுதிய
"மீ' என்கிற கவிதைத் தொகுப்பைத் தந்தார். அதில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் ஒன்றை நான் இங்கே தருகிறேன்.
பசியாறியதும்
கொத்திய பழத்தைப்
பாதியில் விட்டு
பறக்கும் பறவை
மீதியை மெல்ல
கொறிக்கும் அணில்
சிந்தியதை
உண்ணும் சிற்றெறும்பு
பதுக்காத
ஓர் உணவில்
எத்தனை குடல்
நிறைகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


