ஈகைப் பெருநாள் (ரம்ஜான்) நோன்பு தொடங்கிவிட்டால், 'தமிழ்நேசன்' எம்.ஏ. முஸ்தபா எங்கிருந்தாலும் சிங்கப்பூருக்குச் சென்று விடுவார். தமது உறவினர்கள், நண்பர்களுடன் நோன்புக் காலம் முழுவதும் இருப்பது என்பதையும்கூட ஒரு நோன்பாகவே கடைப்பிடிப்பவர் அவர். அவர் சிங்கப்பூர் கிளம்புவதற்கு முந்தைய நாள் அவரைச் சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
நான் ஒவ்வொரு முறை 'கவிக்கோ மன்றம்' முஸ்தபாவை சந்திக்கும்போதும், அவரது வீட்டிலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்துடன் திரும்புவது வழக்கம். நல்ல செய்தியாக இருந்தாலும், அவர் படித்த நல்ல புத்தகமாக இருந்தாலும் என்னோடு பகிர்ந்து கொள்வது அவரது வழக்கம். இந்த முறை நான் சந்திக்கச் சென்றிருந்தபோது, நான் எடுத்து வந்த புத்தகம் கவிஞர் ஷாநவாஸ் எழுதிய 'ருசி பேதம்'.
சிங்கப்பூரில் குடியேறி அங்கே உணவகம் நடத்திவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாநவாஸ், இந்திய அரசுத் துறையில் பணியாற்றியவர். 'அயல் பசி', 'துண்டு மீனும் வன்முறை கலாசாரமும்' உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளும், 'மூன்றாவது கை' என்ற சிறுகதைத் தொகுப்பும் படைத்திருக்கும் ஷாநவாஸ் ஒரு கவிஞரும்கூட.
முஸ்தபா நடத்தும் 'சிராங்கூன் டைம்ஸ்' இதழின் பொறுப்பாசிரியரும் அவர்தான்.
''நுகர்வுப் பண்பாட்டில் புதிய அசைவியக்கமாக மாறிவரும் உணவுப் பயன்பாடு பற்றி, நான் தேடித்தேடி அலைந்து சேகரித்த செய்திகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்'' என்கிற வாக்குமூலத்துடன் தொடர்கிறது அவருடைய
'ருசிபேதம்' முன்னுரை. தாவர உணவாளனான எனக்கு அவர் இந்தப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கும் புலால் உணவு வகைகள் குறித்துத் தெரியாது என்பது, இந்தப் புத்தகத்தை ரசித்து படிப்பதற்குத் தடையாக இருக்கவில்லை. ஏனென்றால், இதற்குள் புதைந்து கிடக்கும் பல அற்புதமான தகவல்கள்.
'ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் மனித குலத்துக்குப் பயன்படுவது ஒரு புதிய வகை உணவைக் கண்டுபிடிப்பது' என்பாராம் பிரெஞ்சு சமையல்கலை நிபுணர் பிரில்லாட்-சாவரின். கி.பி. 36-இல் பனிக்கட்டியில் பழச்சாறு, தேன் கலந்து கொடுங்கோலனான நீரோ மன்னன் சுவைத்த ஒருவிதமான கலவைதான், முதன்முதலாக உருவான ஐஸ்கிரீம் என்று சொல்வார்கள். ஆனால், கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலேயே சீனர்கள் ஐஸ்கிரீம் தயாரித்து விட்டதாகக் கூறுகிறார்
ஷாநவாஸ். 'குல்ஃபி' ஐஸ்கிரீம் உள்ளிட்ட விதவிதமான ஐஸ்கிரீம்களை உருவாக்கியவர்கள் மொகலாய மன்னர்களாம்.
இட்லி குறித்த வரலாறு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் சுவாங் ஜாங் என்கிற சீனத் துறவி 17 ஆண்டுகள் இந்தியாவில் இருந்துவிட்டுத் திரும்பும்போது, 'இந்தியாவில் அவிக்கும் பாத்திரங்கள் இல்லை' என்று குறை கூறியிருக்கிறார். ராஜேந்திர சோழன் காலத்துக்குப் பின்னர்தான் இந்தோனேஷியாவில் இருந்து இட்லி பாத்திரமும், அதைச் செய்யும் முறையும் தமிழகத்துக்கு இறக்குமதியாகி இருக்கிறது. இந்தோனேஷிய உணவு வகையான 'கெட்லி' என்பதுதான் நமது இட்லியாக மாறியிருக்கக்கூடும்' என்கிறார் ஷாநவாஸ்.
ஷாநவாஸின் 'ருசிபேதம்', உணவை சமையலறையில் இருந்து வெளியே எடுத்து வந்து வரலாறு, அரசியல், இடப்பெயர்வு, மொழி, மதம், சந்தை மற்றும் மனித உறவுகளின் மையத்தில் நிறுத்தும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.
கொழும்பிலிருந்து வெளிவரும் 'தமிழன்' நாளிதழ் ஆசிரியர் சிவராஜா சென்னைக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஏதாவது ஒரு புத்தகம் அன்பளிப்பாகத் தருவது வழக்கம். கடந்த மாதம் வந்திருந்தபோது தந்த புத்தகம் 'இலங்கைச் சுருக்க வரலாறு'. கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2007 வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
கலாநிதி க. குணராசாவும், கமலா குணராசாவும் இணைந்து தொகுத்திருக்கும் இந்த நூல், இலங்கையின் வரலாற்றை ஆதிக் குடியேற்றங்களிலிருந்து விவரிக்கிறது. பெரும்பாலான இலங்கை குறித்த வரலாற்று நூல்கள் சிங்கள வரலாற்றை ஒட்டி மட்டுமே எடுத்துரைப்பதால், கூடியவரை தமிழருடைய வரலாற்றை மறைப்புச் செய்கின்றன. அது மட்டுமல்லாமல், முரண்பாடாக விவரிப்பதோடு, தமிழினத்துக்குரிய பகுதிகளைக் குறிப்பிடுவதில்லை. 'இலங்கைச் சுருக்க வரலாறு' எந்தவித காய்தல் உவத்தல் இன்றி, இலங்கையின் உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறது.
இலங்கையின் ஆதிக்குடிகளும், ஆரம்பக் குடியேற்றங்களும் என்பதில் தொடங்குகிறது இந்த வரலாற்று நூல். உதயகால மன்னர்கள், தமிழ் மன்னர்கள் ஆட்சி, சோழராட்சி, யாழ்ப்பாண ராஜதானி, கண்டி ராஜதானி, போர்த்துகீசியர் ஆட்சி, ஆங்கிலேயர் காலம், சுதந்திர இலங்கை என்று நகர்கிறது 'இலங்கைச் சுருக்க வரலாறு'
சுதந்திர இலங்கை உருவாவதில் தொடங்கி தமிழரசுக் கட்சியின் தோற்றம், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களர் குடியேற்றங்கள் பண்டாரநாயக- செல்வநாயகம் ஒப்பந்தம், சிங்கள தமிழ் இனக்கலவரம், பொதுத் தேர்தல்கள், டட்லி -செல்வா ஒப்பந்தம், ஆட்சி மாற்றங்கள் என்று நகர்ந்து உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் குறித்த விவரங்களுடன் முடிவடைகிறது இந்த வரலாற்றுப் பதிவு.
இன சமரசத்தை ஏற்படுத்திய ஆழிப்பேரலை
(சுனாமி) என்கிற பதிவும்,
நந்திக்கடல் இறுதிக்கட்ட நிகழ்வும் நெகிழ வைக்கின்றன. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு பதிப்பகம்
இதன் உரிமையைப் பெற்று மீள்
பதிப்பைக் கொண்டுவர வேண்டும்
என்பது எனது வேண்டுகோள்.
மரபுக் கவிதைகளை வெளியிடுவதில்லையே, ஏன் என்கிற வாசகர்களின் கேள்விக்கு இந்த வாரம் பதில் தருவது என்று தீர்மானித்து விட்டேன். அதற்குக் காரணம், நண்பர், கவிஞர் ஜனனி ரமேஷ் அனுப்பித் தந்திருந்த 'மகளிர் தினக் கோரிக்கை' என்கிற நேரிசை வெண்பா.
முதிர்கன்னிகள் குறித்தும், வரதட்சிணை குறித்தும் இன்னும்கூடப் பலர் கவிதைகள் புனைவதைப் படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இன்று திருமணமாகாத பெண்களைவிட, மணமுடிக்கப் பெண்கள் கிடைக்காமல் தவிக்கும் படித்த இளைஞர்கள்தான் அதிகம் என்கிற எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் முதிர்கன்னிகள் குறித்துக் கவிதை எழுதிக் கொண்டிருப்பார்கள்.
மணப்பெண் தேடி அலையும் இளைஞர்கள் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைகிறது ஜனனி ரமேஷின்
'மகளிர் தினக் கோரிக்கை' கவிதை இதோ-
முதிர்கன்னி வார்த்தை
மறைந்துவீ டெங்கும்
முதிராண் நிலையது மாற-
மதிநிறை
மாண்பமை பெண்ணே
மகளிர்நா ளில்மனு
ஆண்மகற்கு வாழ்க்கை அளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026

இந்த வாரம் கலாரசிகன் - 01-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


