

ஜனவரி மாதம், புதுச்சேரி திருக்குறள் மன்றம் (புதிமம்) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற வந்திருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், மிகப் பழைமையான திருக்குறள் உரை நூல் ஒன்றை எடுத்து வந்திருந்தார். அவரிடம் அதைக் கேட்டு வாங்கி, பிரித்துப் பார்த்தபோது எனக்கு அப்படியொரு வியப்பு.
1949 நவம்பர் மாதம் வெளியான இரண்டாம் பதிப்பு அது. அப்படியானால், முதலாவது பதிப்பு எப்போது என்று பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன். முதலாவது பதிப்பு வெளியான ஆண்டு 1933. உரையாசிரியர்ஆ.அரங்கநாத முதலியார்.
'ஒழுக்க மேம்பாட்டோடு விளங்கும் பக்தியே சிறப்புடைத்து ஆதலின், வாழ்க்கை முழுவதற்கும் உரிய ஒழுக்க முறையை வகுக்கும் திருவள்ளுவரின் திருக்குறளை பொழிப்புரையோடு, ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து பதிப்பித்தால் பக்தியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வை அறிந்து மேம்பாடடைதற்கு வழியுண்டு என்று நினைத்து இத்திருக்குறள் பதிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்'' என்கிற முன்னுரையுடன் வெளியிட்டிருக்கிறார். 1931-ஆம் ஆண்டில் "ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து தனது சொந்தச் செலவில் வெளியிட்டவர் முதலியார்.
அந்த முதலாம் பதிப்புக்கு, தமிழ்ப் பேரறிஞர் மு.இராகவையங்கார் அணிந்துரை வழங்கியிருக்கிறார். இன்னொரு அணிந்துரை வழங்கி இருப்பவர் அன்றைய சென்னை இராஜதானியின் கல்வித் துறை அமைச்சரான எஸ்.குமாரசாமி ரெட்டியார்.
"சென்னை மருத்துவக் கல்லூரியின் மாணவராக இருந்து 31 ஆண்டுகள் நைஷ்டிக பிரமச்சாரியமாய் இருந்து பரம பதித்த என் அருமைச் செல்வன் உத்த புருஷனுமாகிய ஆ.பத்மநாபன் ஞாபகார்த்தமாய் இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டது' என்கிற பதிவுடன் 1949-இல் இரண்டாவது பதிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஆ.அரங்கநாத முதலியார்.
"கடை சங்க காலத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தலைமணியாய் நின்று இலகுவது தெய்வப் புலமை திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் என்பதை யாவரும் அறிவர். ஆங்கில ஆட்சி இங்கு நிலைபெறத் தொடங்கிய காலம் வரை அதன் உண்மைப் புகழொளி சுடர்விட்டு விளங்கியது.
ஆனால் ஆங்கிலப் பதவி மோகத்தால் தமிழ் மக்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கில மொழியை ஆழ்ந்து கற்கத் தொடங்கிய காலத்து இத்திருக்குறள் போன்ற சீரிய நூல்களும்கூட படிப்பாரின்றி, போற்றுவாரின்றி புறக்கணித்தொதுக்கப் பட்டன.
தற்போது 80 வயதாகியும், கண்ணொளி குன்றியும், முதிர்ந்த நிலையில் உள்ள யான், இதனை மறுமுறையும் பதிப்பிக்க விரும்பியது தாய்மொழித் தொண்டும், திருக்குறளிடத்துக் கொண்ட உள்ளார்ந்த அன்புமே தலையாய காரணங்களாம்.
அச்சுப் பிழைகளைத் திருத்தி, அடியேனுக்கு பேருதவி புரிந்த என் நண்பர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீமான் கே.ராமசுவாமி சாஸ்திரியாருக்கும், அச்சிட்டுத் தந்த ராயப்பேட்டை கோபால் அச்சகத்தின் உரிமையாளரான ஸ்ரீமான் ஆர்.ராமச்சந்திர ஐயர் அவர்கட்கும் அடியேன் என்றும் நன்றியறிதல் உள்ளவனாய் இருப்பேன்' என்கிறது இரண்டாவது பதிப்பின் என்னுரை.
திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் ஆ.அரங்கநாத முதலியார் எழுதியிருக்கும் குறிப்புகள் குறளை ஆய்வு செய்வோருக்குப் பல புதிய செய்திகளை வழங்குகிறது.
பழ. கருப்பையாவின் கருத்துகள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமையுடன் கூடிய நட்பு எங்களுடையது. இஸ்லாம் குறித்த அவரது பார்வையை "அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்' என்று நூலாக்கம் செய்திருக்கிறார்.
பழ.கருப்பையாவின் தமிழ்ச் சொல்லாடல்களில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. எடுத்துக்கொண்ட கருப்பொருள் எதுவாக இருந்தாலும் அதில் தெளிவும், தனித்துவமான பார்வையும், அதை வெளிப்படுத்தும் வித்தியாசமான அணுகுமுறையும் அவருக்கே உரித்தான சிறப்புகள். அதையெல்லாம் "அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்' நூலிலும் பார்க்க முடிகிறது.
"இறையச்சம் உடையவனாக ஒருவன் வாழ்க்கை அமைவது அவனுக்கு வாய்க்கும் முதன்மையான நற்பேறு! அதற்கு அடுத்ததாக அவனுக்கு வாய்க்கும் இன்னொரு நற்பேறு, ஒரு பண்புடைய மனைவி வாய்க்கப் பெறுவதுதான் என்று இசுலாம் கொண்டாடுகிறது.'
"மனிதனின் உடலோடு தைக்கப்பட்ட பசி, காமம் ஆகிய இரண்டின் தேவைக்கும் தன்போக்கில் தீர்வு காண்கிறது இசுலாம்! மண முறிவு அனுமதிக்கப்படும் சமயம் என்பதால் அதில் பரத்தமைக்கு இடமில்லை.'
"சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் முட்டாள்கள் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அறிவாளிகள் ஆட்சிக்கு வர முடியாது. நேரு, இராசாசி காலம் விதிவிலக்கு!'
"சனநாயகம் நல்ல அமைப்பு என்று முற்றாகச் சொல்லிவிட முடியாது. எண்ணிக்கை குறைந்தவர்களின் குரல்வளையை அது நெரிக்கும். அதற்குத் தெரிந்த ஒரே நியாயம் எண்ணிக்கை வலிமைதான்.'
இவைபோன்ற பல கருத்துகள் பழ.கருப்பையாவின் "அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்' புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன.
அவர், சிறுபான்மையினருக்கு முன்வைக்கும் வேண்டுகோள் அல்லது கோரிக்கை என்னவென்றால், 'ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் செய்யுங்கள். எம்மான் காந்தி அநீதியோடு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறி சாதித்துக் காட்டியிருக்கிறார். எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கச் செல்லாதீர்கள். இதுவரை நீங்கள் வாக்களித்ததால் பெற்ற பயன் ஒன்றுமில்லை. சனநாயகம் சிறுபான்மையருக்கு உரிய அமைப்பில்லை''
கவிஞர் மயிலாடுதுறை இரா.சிவக்குமார் வெளிக்கொணர்ந்திருக்கும் கவிதைத் தொகுப்பு "நேற்று பெய்த சிறுமழை'. அதில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை! எனது எட்டு வயது பெயர்த்தி, பத்து மாதத் தம்பியை தூக்கிக் கொஞ்சும் போதெல்லாம் இந்தக் கவிதை வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.
தம்பி தங்கைகளை
தூக்கிக் கொஞ்சிடும்
அக்காவுக்கெல்லாம்
அம்மாவின் சாயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்த வாரம் கலாரசிகன் - 08-02-2026

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இந்த வாரம் கலாரசிகன் - 18-01-2025
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

