இந்த வாரம் கலாரசிகன் - 01-6-2025
இரண்டு அதிர்ச்சிகளைக் கடந்த வாரம் நான் எதிர்கொண்டேன். ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத, அதேநேரத்தில் எனக்கு நெருக்கமான இருவரின் மறைவுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.


இரண்டு அதிர்ச்சிகளைக் கடந்த வாரம் நான் எதிர்கொண்டேன். ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத, அதேநேரத்தில் எனக்கு நெருக்கமான இருவரின் மறைவுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். முதலாமவர், நடிகர் ராஜேஷ். இரண்டாமவர், 'தினமணி' நாளிதழின் தஞ்சாவூர் புகைப்படக்காரர் சேகர் என்கிற தேனாரமுதன்.
இருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கியவர்கள். முன்னவர் மெத்தப் படித்த அறிவுஜீவி. இப்படித்தான் வாழவேண்டும் என்று அன்றாட வாழ்க்கையைத் திட்டமிட்டு, தனது செயல்பாடுகள், உணவுப் பழக்கங்கள் என்று எல்லாவற்றிலும் ஒருவிதக் கட்டுக்கோப்பைக் கடைப்பிடித்தவர். பின்னவர், அதிகம் படிக்காதவர், சித்தன் போக்கு சிவன் போக்கு என்று எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்ந்தவர்.
முன்னவர் ராஜேஷ் நாடறிந்த பிரபலம். பல பிரபலங்கள் அவருடன் நட்புப் பாராட்டிப் பழகினர். அவர்களது அன்புக்குப் பாத்திரமாக அவர் இருக்கவும் செய்தார். பின்னவர், சேகர் ஒரு புகைப்படக்காரராக அனைவருக்கும் பிரியமானவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எத்தனையோ அரசியல், சினிமா பிரபலங்கள் அவருக்கு அறிமுகமானவர்கள்.
ராஜேஷ் என்று அறியப்படும் ராஜேஷ் வில்லியம்ஸூக்கும் சேகர் என்கிற தேனாரமுதனுக்கும் அவர்களது வாழ்க்கையிலும் சரி, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையிலும் சரி, எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் பாருங்கள், இருவரின் மறைவும் ஆச்சரியமாக ஒரேபோல அமைந்தன. சிரமப்படாமல், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு அவதிப்படாமல், அமைதியாக உறக்கத்திலேயே இருவரின் உயிரும் விடைபெற்றுப் பிரிந்திருக்கின்றன.
'அநாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம், தேஹிமே க்ருபயா சம்போ, த்வயி பக்திம் அசஞ்சலாம்' என்றொரு சம்ஸ்கிருத ஸ்லோகம் உண்டு. இறைவனிடம் (சிவப்பரம்பொருளிடம்) நாம் என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 'அநாயாசேன மரணம்' - எவ்வித சிரமமும் இல்லாமல், இமைப்பொழுதில், போகிறபோக்கில் உயிர்பிரிய வேண்டும்; 'விநா தைன்யேன ஜீவனம்' - அடுத்தவரிடம் இரந்தும், அன்றாடத் தேவைகளுக்கு அல்லாடியும் வாழ்க்கை அமையாது இருக்க வேண்டும்; 'த்வயி பக்திம் அசஞ்சலாம்' - உன்மீது சஞ்சலமே இல்லாத, அசைக்க முடியாத பக்தியுடன் நான் இருக்க வேண்டும்; 'தேஹிமே க்ருபயா சம்போ' - சிவப் பரம்பொருளே அதை எனக்கு அருள்வாயாக!
தனது திரையுலக வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அதற்காக நடிகர் ராஜேஷ் சற்றும் தளர்ந்துவிடவில்லை. அவர் மனை வணிகத்தில் இறங்கியபோதும் எந்தவிதக் கெட்ட பெயரும் வாங்காமல் அந்தத் துறையிலும் அவரால் வெற்றிகரமாக வளையவர முடிந்ததற்குக் காரணம், அவரது நேர்மையான அணுகுமுறையும் உழைப்பும்.
நண்பர் சேகரும், யாரிடமும் எதையும் எதிர்பார்த்து வாழ்ந்தவர் இல்லை. தனது அரசியல் நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய நினைத்தவரும் இல்லை. எங்கள் புதுக்கோட்டை நிருபர் ஜெயப்பிரகாஷ் கூறியதுபோல, 'கள்ளங் கபடம் இல்லாத, மனதில் எந்த வன்மமும் இல்லாத மனிதராகவே இருந்து மறைந்தார் தேனாரமுதன்.'
அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று விழையும் வேளையில், அவர்களுக்கு சித்தித்த 'அநாயாசேன மரணம்' நம் ஒவ்வொருவருக்கும் சித்திக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்கிறேன். அது யாருக்கு சித்திக்கும் தெரியுமா? வள்ளுவப் பேராசான் தரும் பதில் - 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்'!
பெரியவர் சீனி.விசுவநாதனின் வாழ்நாள் சாதனையாக 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' புதிய பதிப்பை வெளியிட்டு, அவரைப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரதமர் இல்லத்தில் பாராட்டிக் கௌரவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அழைக்கப்படவில்லை என்பதில் எனக்கு ஏக வருத்தம்.
நாம் வாழும் காலத்தில் பாரதியார் குறித்த ஆய்வுகளை மிக அதிகமாக ஊக்குவித்தவர் ஒருவர் உண்டு என்றால் அது நல்லி குப்புசாமி செட்டியார்தான். பாரதியார் குறித்து மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளிக்கொணர்ந்திருக்
கிறார். 'தினமணி' நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்குவது என்று நாங்கள் முடிவெடுத்தபோது, அதற்கு உந்து சக்தியாக இருந்து ஊக்குவித்தவரும் அவர்தான்.
அப்படி இருக்கும்போது, அவர் 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' தொகுப்புகளை வெளியிட்டு, சீனி.விசுவநாதன் பிரதமரால் கௌரவிக்கப்படும்போது, அழைக்கப்படவில்லையே என்கிற எனது ஆதங்கம் நியாயம்தானே? அந்தக் குறையைத் தீர்த்துவைப்பதுபோல, இப்போது நல்லி செட்டியாருக்கு நரேந்திர மோடி அரசு 'பத்மபூஷண்' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. 'பத்மபூஷண்' நல்லி குப்புசாமி செட்டியாருக்கு வாழ்த்துகள்.
சமீபத்தில் நான் படித்த அவரது புத்தகங்களில் ஒன்று - 'பாரதி திருநாள் - சுதேசமித்திரன் நினைவு அஞ்சலிகள்'. பாரதியார் பணிபுரிந்த 'சுதேசமித்திரன்' நாளிதழ் அவரது மறைவுக்குப் பிறகு வெளியிட்ட அஞ்சலி செய்திகள், அறிக்கைகள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றைத் தொகுத்துப் புத்தக வடிவம் தந்திருக்கிறார் நல்லி செட்டியார்.
'தென்னாட்டுக் கவி சிரேஷ்டர் ஸ்ரீசுப்பிரமணிய பாரதி மரணம்' என்று தலைப்பிட்டு 13.09.1921 சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான செய்தியில் தொடங்கி, 11.09.1938 வரையில் வெளியான 'பாரதி திருநாள்' தொடர்பான செய்திகளின் இந்தத் தொகுப்புரைக்காகவே நல்லி செட்டியாருக்கு, பத்மபூஷண் என்ன; பத்ம விபூஷணே வழங்கலாம்!
சிற்றிதழ் எதுவாக இருந்தாலும் அதில் தவறாமல் மரபுக் கவிதை எழுதும் கவிஞர்களில் ஒருவர் கருமலைப் பழம் நீ. சென்னை வியாசர்பாடியில் இருந்து பூமாரி சொரிவதுபோல கவிமாரி பொழிந்து கொண்டிருக்கும் கவிஞர் கருமலைப் பழம் நீ வெளிக்கொணர்ந்திருக்கும் அவரது குறும்பா (ஹைக்கூ) தொகுப்பு எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது. அதில் 'கருக்கலைப்பு' குறித்த அவரது இரண்டு வரிகள் நமது இதயத்தையே அல்லவா கத்தியால் கீறுகிறது...
முத்தை விதைத்துவிட்டு
முள்கொண்டா உழுவது?
கருக்கலைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...