பெயரனையும், பெயர்த்தியையும் தூக்கிக் கொஞ்சுவது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. எனது தந்தைக்கும், பாட்டனாருக்கும் கிடைக்காத அந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் இறைவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.
எனது பெயரைத் தாங்கிய பெயரனின் முதலாவது பிறந்தநாளை வீட்டிலேயே எங்களுடைய சம்பிரதாயப்படி சமீபத்தில் கொண்டாடினோம். நெருங்கிய உறவினர்களும், எனது நீண்ட நாள் நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். நாற்பதாண்டு கால நண்பர் கீதப்ரியன் தனது மகன் சாயுடன் வந்திருந்தார். பழைய கதைகளைப் பகிர்ந்து கொண்டோம்.
புற்றீசல்போல மாதம், மாதம் இருமுறை, வாரம், வாரம் இருமுறை இதழ்கள் வெளிவந்த எண்பதுகளில், நான் "சாவி'யிலும், கீதப்ரியன் "தாய்' இதழிலும் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். எங்களுக்கு இடையேயான நெருக்கம் எத்தகையது என்பதை, அவரது மகனின் கல்லூரிச் சேர்க்கைக்கு நானும், எனது மகன்களின் கல்லூரிச் சேர்க்கைக்கு அவரும் சென்றோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
என்னைச் சந்திக்க வந்தபோது, மயிலை. சீனி.வேங்கடசாமி எழுதிய "சமணமும் தமிழும்' என்ற நூலை அன்பளிப்பாகத் தந்தார் கீதப்ரியன். அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்ச் சமணர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் குறித்தும், சமணர்களுக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் பல தரவுகளைத் திரட்டி இருக்கிறார் கீதப்ரியன்.
"சமணமும் தமிழும்' புத்தகம் குறித்து நான் பிறகு விரிவாகவே எழுதுகிறேன். அதை முழுவதும் படிக்காமல் எழுதுவது தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர் மயிலை. சீனி.வேங்கடசாமிக்கு நான் செய்யும் அவமரியாதையாகி விடும்.
கீதப்ரியன் எனக்குத் தந்த புத்தகம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளிக்கொணரப்பட்ட "நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் வரிசை'யின்படி வந்த எட்டாவது நூல். 1954-இல் வெளியான இந்தப் புத்தகம் 2000-ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுவிட்டது.
2016-ஆம் ஆண்டு செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும், உதயசந்திரன் துறைச் செயலராகவும் இருந்தபோது, பல முக்கியமான, அவசியமான பணிகளை முன்னெடுத்தனர். தமிழின் செவ்விலக்கியங்கள் அனைத்தும் எண்மப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற முனைப்புக்கு அடித்தளமிட்டவர்கள், தொடங்கி வைத்தவர்கள் அவர்கள் இருவரும்தான்.
பல்வேறு துறைகளில் வெளியான 875 அரிய தமிழ் நூல்கள் எண்மப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 600-க்கும் மேற்பட்ட நூல்கள் அச்சு வடிவம் பெற்று எல்லா முக்கிய நூலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அதிக வரவேற்புப் பெற்ற நூல்கள் இணைய வழியாக விற்பனையும் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்த நூல்களைப் புத்தகக் காட்சிகளில் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது என்பதுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது என்பதைப் பதிப்புரையில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
முன்பே சொன்னதுபோல, "சமணமும் தமிழும்' புத்தகம் குறித்து, புத்தகத்தைப் படித்த பிறகு கட்டாயம் பதிவு செய்கிறேன். ஏற்கெனவே அவரது "பௌத்தமும் தமிழும்' புத்தகம் குறித்து நான் எழுதி இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
புத்தக விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது எஸ்.கிருஷ்ணன் எழுதிய "பண்டைய இந்திய நாணயங்கள்' என்கிற புத்தகம். நாணயவியல் குறித்த எளிய அறிமுகமாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம்.
நாணயவியல் குறித்த எனது மிகக் குறைவான புரிதல் "தினமலர்' ஆசிரியராக இருந்த பெரியவர் மறைந்த இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அவ்வப்போது பேசித் தெரிந்து கொண்டதுதான். கல்வெட்டியலுக்கு ஐராவதம் மகாதேவனைப்போல, நாணயவியலுக்கு இரா.கிருஷ்ணமூர்த்தி என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நாணயங்களின் ஆரம்பகால வரலாற்றில் இருந்து தொடங்குகிறது எஸ்.கிருஷ்ணனின் புத்தகம். பாணினி எழுதிய "அஷ்டத்யாயி' என்கிற நூல், பண்டமாற்றுக்குப் பசுக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. அதேபோல, பல காலம் சோழிகள் நாணய மாற்றாகப் பயன்படுத்தப்பட்டதாக எஸ்.கிருஷ்ணன் கூறுகிறார். அடுத்த கட்டமாக தங்கம் பண்டமாற்றின் அடிப்படையாக மாறியது.
பண்டைய இந்திய நாணயங்கள், வெளிநாட்டவரின் நாணயங்கள் என்று தொடங்கி சங்க கால நாணயங்களுக்கு வருகிறார் எஸ்.கிருஷ்ணன். சங்க கால மூவேந்தர்களும் நாணயங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும், அவை ஆரம்ப காலத்தில் வேப்பம் பழம்போல உருண்டையாக இருந்தன என்றும் சங்கப் பாடல்களால் தெரிய வருகிறது.
மூவேந்தர்களும் முதலில் சதுர வடிவமான செப்புக் காசுகளையே வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா நாணயங்களிலும் ஒருபுறம் யானையும், இன்னொருபுறம் புலி (சோழர்கள்), பனை மரங்கள் (சேரர்கள்), மீன் (பாண்டியர்கள்) இடம் பெற்றிருந்தன. ஏனைய மங்கலச் சின்னங்களான ஸ்வஸ்திக், குடம், மத்தளம் ஆகியவை யானைக்குப் பதிலாக சில நாணயங்களில் காணப்படுகின்றன.
தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலம் வரையில் வெளியிடப்பட்ட நாணயங்கள் குறித்த விரிவான, தெளிவான பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. பண்டைய நாணயங்களை அறிந்து கொள்ளும்போது, கூடவே நம் வரலாற்றுச் சிறப்புகளையும், அன்றைய வாழ்க்கை முறைகளையும்கூட நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
வெறும் தரவுகளின் தொகுப்பாகவோ, ஆய்வு நூலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமான வரலாற்றுப் புதினம்போல நம்மைப் படிக்க வைக்கும் எஸ்.கிருஷ்ணனை எத்துணை பாராட்டினாலும் தகும்.
தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த மாணவர் இரா.அன்புச் செல்வன் கவிஞர் மட்டுமல்ல, ஓவியரும்கூட. தனது கவிதைக்கான ஓவியத்தை அவரே வரைகிறார். தனது மாணவர்களின் படைப்புகளை பெருமிதத்துடன் தொகுத்திருக்கிறார் அவரது ஆசிரியர் முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ்.
செல்லிடப்பேசிகளின் வரவால் சிட்டுக்குருவிகளின் இன அழிப்பு ஏற்பட்டிருப்பதை இந்தக் குறும்பாவைவிட அழுத்தமாக யாராலும் சொல்லிவிட முடியாது.
5ஜி குடமுழுக்கு
மங்கல மஞ்சளில் அல்ல
சிட்டுக்குருவிகளின் சிவப்பில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


