ஒரு நாள் இரவு சுமார் பதினொன்று மணிக்கு அன்றைய முதல் பதிப்பு வேலைகள் முடிந்தபோது, என்னை சந்திப்பதற்கு ஒருவர் நீண்ட நேரமாகக் காத்திருப்பதாக உதவியாளர் தெரிவித்தார். யாரது என்று பார்த்தால், கவிஞர் ஆனைவாரி ஆனந்தன் அவரது இணையரோடு என்னைப் பார்க்கக் காத்திருந்தார். நான் திடுக்கிட்டேன்.
எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்குக் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்கிற உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த மனிதரைச் சந்திப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் உரையாடி மகிழ்ந்தோம். அவரது படைப்புகள் பல ஏற்கெனவே புத்தக விமர்சனத்துக்கு வந்திருக்கின்றன. வராத சில நூல்களை எனக்குத் தருவதற்குக் கொண்டு வந்திருந்தார்.
அவரது பின்னணி குறித்துத் தெரிந்தால் என்னைப் போலவே நீங்களும் வியப்பில் சமைவீர்கள். தனது 24-ஆம் வயதில் அரசுப் பணியில் சேர்ந்தவர், வேலை பார்த்துக் கொண்டே முனைவர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்று உச்சம் தொட்டவர் ஆனைவாரியார். கவிஞர், கவிக்குயில் இதழாசிரியர், புதினங்கள், நாடகங்கள், மெல்லிசைப் பாடல்கள் எழுதிய படைப்பிலக்கியவாதி என்று அவர் குறித்துச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் தமிழுக்குத் தந்திருக்கும் கொடைகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது, புத்தகம்தான் போட வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டேன். அவரது வாழ்வும் பணியும் குறித்த 'கவிக்குயில் ஆனைவாரியார்' என்கிற புத்தகம் எழுதப்பட்டிருப்பது அப்போது எனக்குத் தெரியாது.
இயற்பியல், வானியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், பூமியியல், சுற்றுச்சூழல், வளரும் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் வளர்ச்சி, முதலுதவி மருத்துவம், உடல்நல அறிவியல் என்று அவர் படைத்திருக்கும் புத்தகங்கள் நூறைத் தொடும். மொழிபெயர்ப்பில் அவரது பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. சாகித்திய அகாதெமியின் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறையின் மொழிபெயர்ப்புச் சிறப்பு அலுவலராகப் பணியாற்றிய ஆனைவாரியார் 3 தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழர் மருத்துவமே அனைத்து மருத்துவ முறைகளுக்கும் அடிப்படையானது என்பதுதான் அவரது முனைவர் பட்ட ஆய்வு.
அதைப் போலவே, திருக்குறளை மூலத்தைப் போலவே ஈரடிகளாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த மொழியாக்கத்தையும், அவரது திருக்குறள் உரையையும் எனக்குத் தருவதற்காகக் கொண்டுவந்திருந்தார்கள் ஆனைவாரியாரும் அவரது துணைவியாரும்.
'கவிக்குயில்' என்கிற அவரது மாத இதழ், பலரது இலக்கிய தாகத்துக்கு வடிகால். தனது சொந்த ஊரான சேத்தியாத்தோப்பில் தமிழ்ச் சங்கம் நிறுவியிருப்பது சாமானியர்களிடம் தமிழ் இலக்கியத்தை எடுத்துச் செல்லும் ஆனைவாரியாரின் முயற்சி.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண்மணி இருப்பார் என்பதற்கு ஆனைவாரியார் அவர்களின் வாழ்க்கை இன்னொரு எடுத்துக்காட்டு. இவரது துணைவியார் ஜெயந்திஆனந்தன் மேனிலைத் தமிழ் ஆசிரியையாகப் பணி நிறைவு செய்தவர் மட்டுமல்ல, கவிஞர் ஆனைவாரி ஆனந்தனைப் போலவே கவிஞர், எழுத்தாளர். அவரது எழுத்துப் பணியிலும் இலக்கியப் பணியிலும் துணையாக நிற்கும் துணைவியார் அவர்.
முனைவர் ஆனைவாரியார் எழுதியிருக்கும் லெமூரியாக் கண்டம் குறித்த 'தொன்மைத் தமிழகம்' என்கிற புத்தகம், கடலுக்குள் மறைந்திருக்கும் தமிழர் வரலாற்றைத் தகுந்த தரவுகளுடனும், மேற்கோள்களுடனும் பதிவு செய்கிறது. ஆனைவாரியாரும் அவரது துணைவியாரும் வந்து போய் சில நாள்களாகிவிட்டன. எனக்கு ஏற்பட்ட மலைப்பும், வியப்பும் இன்னும் அடங்கியபாடில்லை.
============================
விமர்சனத்துக்கு வந்திருந்தது ரமாதேவி ரத்தினசாமி எழுதிய 'போர்களின் தேசத்தில்...'. வியத்நாம் பயணக்குறிப்பு என்று அதன் முகப்பு தெரிவித்ததால், நான் ஆர்வத்துடன் எடுத்துப் படிக்க முற்பட்டேன். 'போர்களின் தேசத்தில்' என்பது மிகச் சரியான தலைப்பு. யுத்தத்தின் நாசகார கொடுமை எப்பேற்பட்டது என்பதை, வியத்நாமுக்குப் போய் பார்த்தால்தான் தெரியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் அரசுமுறைப் பயணத்தின்போது, நானும் உடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் வியத்நாம் முழுவதும் சுற்றிப் பார்த்தோம். அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை மேற்கொள்ள, போராளிகள் அமைத்திருந்த குகைகளுக்குள் வலம் வந்த அந்த அனுபவத்தை மறக்க முடியாது.
ஆரம்பத்தில் சீனர்கள் வியத்நாமை அடிமைப்படுத்தி ஆண்டனர். 1800-களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அதைக் கைப்பற்றித் தனது காலனியாக்கியது. கடந்த நூற்றாண்டில் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன. வியத்நாம் கம்யூனிஸ்ட் நாடாகிவிடக் கூடாது என்று உள்ளே நுழைந்தது அமெரிக்கா. வலிமையான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹோசிமின் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம் இப்போது வரலாற்றின்
பக்கங்கள்.
புராதனக் கோயில்கள் உள்ளிட்ட பண்பாட்டுத் தலங்கள்கூட குண்டுத் துளைகளைத் தாங்கி நிற்கின்றன. அமெரிக்கப் படையினரை எதிர்த்துப் போரிட மண்ணுக்குக் கீழே கொரில்லா போராளிகள் மூன்றடுக்கு நகரத்தையே அமைத்திருந்தனர். பரந்து விரிந்து கிடக்கும் அந்தச் சுரங்க வலையமைப்பு, கற்பனை செய்ய முடியாத பிரமிப்பு.
போரில் பயன்படுத்தப்பட்ட வேதிப் பொருள்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இப்போதும் பார்க்க முடியும். தலைமுறைகள் கடந்தும்கூட இன்னும் மனவளர்ச்சி குன்றியும், உடல் சார்ந்த பாதிப்புகளுடனும் குழந்தைகள் பிறக்கின்றன என்பது நம்மை உலுக்கும் உண்மைகள். ஒரு காலத்தில் ஹிந்து மதம், வியத்நாமின் அரசு மதமாக இருந்திருக்கிறது என்பதும், 1600 ஆண்டுகளாக சுமார் 65,000 ஹிந்துக்கள் தமது மதநெறிகளை, வழிபாடுகளைப் பின்பற்றி வியத்நாமில் வாழ்கிறார்கள் என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத நிஜங்கள்.
வியத்நாம் குறித்து இதைவிட அழகாகவும் எளிமையாகவும் எழுதிவிட முடியாது. எனக்கே இதைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை வியத்நாம் சென்று வந்தால் என்ன என்று தோன்றுகிறது.
============================
முனைவர் தென்காசி தெ.கணேசன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு 'ஒன்றாய், இரண்டாய், ஒவ்வொன்றாய்'. அதிலிருக்கிறது 'தெய்வீகக் காதல்' என்கிற இந்தக் கவிதை...
எங்கள் காதல்
தெய்வீகமானது!
கோயில்
பிரகாரத்தில்
தொடங்கி
மண்டபத்தில்
வளர்ந்து
குளத்தில்
முடிந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


