/

இந்த வாரம் கலாரசிகன் - 13-10-2024

இந்த ஆண்டுக்கான 'கி.ரா. விருது' நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

News image
கலாரசிகன்
Updated On :17 டிசம்பர் 2025, 1:39 pm

கலாரசிகன்

இந்த ஆண்டுக்கான 'கி.ரா. விருது' நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும் ஆழங்காற்பட்ட புலமையுடன் வலம் வரும் வெகுசில நவீன இலக்கிய ஆளுமைகளில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.

நாஞ்சில் நாடனின் எழுத்துப் பணி சற்று வித்தியாசமானது. 1977 -இல் தனது 'தலைகீழ் விகிதங்கள்' நாவலுடன் தொடங்கிய அவரது இலக்கியப் பயணத்தில் இதுவரையில் 6 கவிதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 13 சிறுகதைத் தொகுப்புகள், 19 கட்டுரைத் தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புகள் என்று தமிழுக்கு அவர் கொடுத்திருக்கும் கொடைகள் ஏராளம்.

கம்பனின் அம்பறாத் தூணி, பாடுக பாட்டே உள்ளிட்டவை மிக ஆழமான இலக்கியத் தேடல்கள். அவரது சிற்றிலக்கியங்கள், எப்படி பாடுவேனோ இரண்டும், மீண்டும் மீண்டும் படித்தாலும்கூட எனக்கு சலிப்பே தட்டாத வியப்பை அதிகரிக்கும் படைப்புகள்.

எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு எழுத்தும் புதிய ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்திருக்கிறது நாஞ்சில் நாடனின் 'ஊருண்டு காணி இல்லேன்' என்கிற கட்டுரைகளின் தொகுப்பு. அவரே குறிப்பிட்டிருப்பது போல, 'இந்தக் கட்டுரைத் தொகுப்பின் அங்கங்கள் பெரும்பாலும் சொற்களைத் தேடி அலைந்தவை'.

கம்பகாதை தமிழுக்குத் தந்த சொற்களை 'கம்பனின் அம்பறாத் தூணி'யில் அள்ளித் தந்தவர், இப்போது வேறொரு உத்தியைக் கையில் எடுத்திருக்கிறார். சொற்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் இலக்கியப் பின்னணியைத் தேடிப் பிடித்து சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சாமி சரணம் என்பதில் தொடங்கி, நமது அன்றாட வாழ்வில் கந்தசாமி, ராமசாமி, சாமிக்கண்ணு என்று எத்தனையோ சாமிகள் வலம் வருகிறார்கள். ஆனால் - 'திருக்குறளில், நாலடியாரில் 'சாமி' இல்லை. சங்க இலக்கியங்களில் 'சாமி' இல்லை. திருவாசகமும், பெரியபுராணமும் 'சாமி' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை'' என்று அவர் பதிவு செய்யும்போதுதான், நமது புத்தியில் உறைக்கிறது, 'சாமி' என்பது பிற்கால ஆசாமிகள் நுழைத்த சொல் என்பது.

'ஏன் எழுதுகிறேன்?' என்றொரு கட்டுரை 'ஊருண்டு காணி இல்லேன்' தொகுப்பில் இடம்பெறுகிறது. 'எழுதாமல் இருப்பது சாத்தியமில்லை, ஆகவே எழுதுகிறேன்' என்பதில் தொடங்கி, 'எனது இறப்புக்குப் பின்னரும் எழுத்துகள் மூலமாக வாழ்வேன் என்பதால் எழுதுகிறேன்' என்பது உள்பட 10 காரணங்களை அடுக்குகிறார். 'நான் ஒப்புமை உரைக்க ஒண்ணாத நாஞ்சில் நாடன் என்பதால் எழுதுகிறேன்' என்று சாற்றுகிறார்.

கவிஞர் ஜீவா, எழுத்தாளர் ஏக்நாத், பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி, கவிஞர் சிந்தா, முனைவர் லோகமாதேவி ஆகியோர் குறித்த கட்டுரைகள் அவர்கள் குறித்த புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரையின் முற்றுப்பெறாத பகுதிகளை நிறைவு செய்து வெளியிட உதவினார் ஐயா ம.ரா.போ. என்பது எனக்குப் புதிய செய்தி.

'திருவினை ஆக்கும் முயற்சி' என்கிற கடைசிக் கட்டுரையில் சொற்சேகரம் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்தை நானும் அடிக்கடி சிந்திப்பதுண்டு. சென்னைப் பல்கலைக்கழகம் தொகுத்த லெக்சிகன் பேரகராதி தொடங்கி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிவியல் களஞ்சியம் உள்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்னும் நிறைய, நிறைய வட்டாரச் சொற்கள் சேகரித்துத் தொகுக்கப்படவில்லை.

'ஊருண்டு காணி இல்லேன்' தொகுப்பை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று படித்து முடித்ததும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவ்வளவு விஷயங்கள்!

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, ஏதோ ஒரு கட்டுரைப் போட்டிக்காக எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகம் ராஜாஜி எழுதிய 'சக்ரவர்த்தித் திருமகன்' என்கிற ராமாயணம், பிறகு எளிய ஆங்கிலத்தில் ராஜாஜி எழுதி பாரதிய வித்யா பவன் வெளியிட்ட ராமாயணம், மகாபாரதம் புத்தகங்களை யாரோ எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள். அவைதான் ராமாயணம், மகாபாரதம் குறித்த புரிதலை எனக்கு முதன்முதலில் ஏற்படுத்தியவை.

அதன் பிறகு 'ராமாயணம்' குறித்து கம்பன் செய்த பதிவுதான் என் மனதில் பதிந்தது. மகாபாரதம் குறித்து? 'அமர்சித்ரகதா' (படக்கதை இதழ்)

போன்றவையும், 'மாயாபஜார்', 'கர்ணன்', 'வீர அபிமன்யூ' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' தொடரும்தான் எனது மகாபாரதப் புரிதல்.

மகாபாரதத்தை வீட்டில் வைத்து படிக்கக் கூடாது என்று பள்ளிப் பருவத்தில் யாரோ சொன்னது நினைவில் இருக்கிறது. முழுமையான மகாபாரதம் எங்கே கிடைக்கும்; அதுவும் தமிழில் எங்கே கிடைக்கும் என்று நான் தேடி அலைந்திருக்கிறேன். 'துக்ளக்' இதழில் சோ சார் 'மகாபாரதம்' தொடர் எழுதத் தொடங்கியபோது, அது எனது தேடலுக்கு விடையாக அமைந்தது. என்னைப்போல் பலருக்கும் சோ சாரின் 'மகாபாரதம்' அந்த பிரம்மாண்டமான காப்பியம் குறித்த தெளிவை ஏற்படுத்தியது.

விமர்சனத்துக்கு வந்திருந்தது நா.பார்த்தசாரதி எழுதிய 'மகாபாரதம் அறத்தின் குரல்' புத்தகம். 'மகாபாரதக் கதை முழுவதும்' என்று தலைப்பிட்டு, அந்த இதிகாசத்தைத் தெளிவான உரைநடையில் தருகின்ற நூல் என்பதால் உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். தொடங்கிய பிறகு நிறுத்த முடியவில்லை. படித்து முடித்து விட்டேன். உண்ணவும் உறங்கவும் போக மீதமுள்ள நேரமெல்லாம் நானும் மகாபாரதமுமாகக் கழித்தோம்.

உலகிலேயே மிகப் பெரிய காப்பியம் எது என்று கேட்டால் மகாபாரதம்தான். 'மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப்போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப்போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள்.

எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து, புகழ்ந்து கவிதையில் வளைந்து அழகுபடுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் உரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன்'' என்கிறது 1964-இல் நா.பா. எழுதிய முன்னுரை.

நாஞ்சில் நாடனின் 'ஊருண்டு காணி இல்லேன்' புத்தகத்தில் வெளிவந்திருக்கும் கவிஞர் சிந்தா குறித்த கட்டுரையில் காணப்படுகிறது அவரது இந்தக் கவிதை -

அன்று

கட்டிய மணல் வீடுகளை

ஆறு கரைத்தது

இன்று

கட்டிய வீடுகள்

ஆற்றைக் கரைத்தது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.